கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கும்படி பிதாவானவர் கிருபை செய்துள்ளார். ஆனால் நாம் அவர் பேரில் விசுவாசம் உள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவன் தன் சரீரம் செத்துப்போனதையும், சாராள் கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாமல் தேவனை விசுவாசித்து வாக்குத்தத்தம் செய்த ஈசாக்கைப் பெற்றான். நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும் தேவனை மகிமைப்படுத்தி ஸ்தோத்தரித்து விசுவாசத்தில் வல்லவனானான். நம் விசுவாசத்திற்கு சோதனைகள், முட்டுக்கட்டைகள், எதிரிடையான சூழ்நிலைகள் வரலாம். நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து ஜெயம் பெற வேண்டும்.
நம்முடைய விசுவாசம் அப்பியாசிக்கப்பட வேண்டும். சோதிக்கப்பட வேண்டும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. எனவே தேவனை விசுவாசிக்கும் போது அவரைத் தேடும் நமக்கு பலன் கொடுப்பவர் என்று விசுவாசிக்க வேண்டும். 2தீமோ.1:12 வசனத்தில், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
தேவன் பேரில் விசுவாசம் வைத்து தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சிலரைக் குறித்து பார்ப்போம்.
1) பெரும்பாடுள்ள ஸ்திரீ:
மாற்கு 5:26-29 வசனத்தில், “அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்”.
நம்மில் விசுவாசம் வளர, வளர முட்டுக்கட்டை, எதிரிடையான காரியங்கள் அதிகரிக்கும். தடைகள் வரும் ஆனாலும் முன்னேறி விசுவாசத்தில் இயேசுவைத் தொடவேண்டும். இயேசுவைத் தொட்டுக்கொண்டு அநேகர் கூட்டத்தில் காணப்பட்டாலும் சுகமடையவில்லை. ஏனென்றால் விசுவாசம் அவர்களிடம் இல்லாததால் பெற்றுக்கொள்ளவில்லை. பெரும்பாடுள்ள ஸ்திரீயிடம் காணப்பட்ட விசுவாசம் தடையை மேற்கொண்டது. விசுவாசம் வல்லமையை புறப்படப் பண்ணிற்று.
2) திமிர்வாதக்காரன்:
மாற்.2:1-5 வசனங்களில், நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள். ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல் அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, திறப்பாக்கி திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை அவருக்கு முன்பாக இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். மாற்.2:11, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று சொன்னார், உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான்.
3) நாகமான்:
2இராஜா.5:14 சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷன், மகா பராக்கிரமசாலி. ஆனால் குஷ்டரோகியாயிருந்தான். ஆனால் எலிசா தீர்க்கதரிசி சொல்லியபடி விசுவாசித்து போய் யோர்தானில் 7 தரம் ஸ்நானம் பண்ணியபோது சுகம் பெற்றான். 2இராஜா.5:14, “அப்பொழுது அவன்(நாகமான்) இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்”. விசுவாசம் கிரியையில் காண்பிக்கப்பட்டபோது சுகத்தைப் பெற்றுக்கொண்டான்.
4) எசேக்கியா ராஜா:
ஏசா.38:1-5 கண்ணீரோடு ஜெபி விடுதலை உண்டு. எசேக்கியா வியாதிப்பட்ட போது ஏசாயா தீர்க்கதரிசி அவனிடம் வந்து, அவனை நோக்கி நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும் நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு கர்த்தரை நோக்கி, “ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்”. தேவனுடைய வார்த்தை ஏசாயாவுக்கு உண்டாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன் என்றார்.
கண்ணீரோடு ஜெபிக்கும் போது விடுதலையைப் பெறமுடியும்.
5) யவீரு:
மாற்.5:35-43 வசனம் மாற்.5:22,23ல் ஜெப ஆலயத் தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவர் பாதத்தில் விழுந்து என் குமாரத்தி மரண அவஸ்தைப் படுகிறாள். அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.ஆனால் அவர் யவீரு வீட்டிற்கு வருவதற்குள் பல தடைகள், முட்டுக்கட்டைகள் வருகிறது. வேலைக்காரர் யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்து உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள். இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத் தலைவனை நோக்கி, பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி அவனை தைரியப்படுத்தினார். அவர்கள் தேவ நாமம் மகிமைப்படுவதைத் தடுக்கவந்த பிசாசின் ஆட்கள். இயேசு தன்னுடன் விசுவாசித்த சீடர்களை மட்டும் கூட்டிச்சென்றார். ஜெப ஆலயத் தலைவனுடைய வீட்டில் இருந்த சந்தடியையும், மிகவும் அழுது புலம்புகிற யாவரையும் அவர் வெளியே போகப்பண்ணினார். விசுவாசித்த சீடர்கள், தாய், தகப்பனை மட்டும் அழைத்துச்சென்று பிள்ளையின் கையைப் பிடித்து “தலீத்தாகூமி” என்றார். மரித்த சிறுபெண் எழுந்து நடந்தாள்.
அன்பு நண்பரே! நம் வாழ்வில் வெற்றியையும், விடுதலையையும், சுகத்தையும் பெற விசுவாசத்தை அப்பியாசிப்போம். கிறிஸ்து நமக்காக மரித்தார். அவர் கரத்திலிருந்து யாரும் நம்மைப் பறிக்க முடியாது. அவர் நமக்காக யுத்தம் செய்வார். உங்களுக்காக யாவையும் செய்துமுடித்தவர். உங்கள் தோல்விகள் ஜெயமாய் மாறும். தீமைகள் நம்மை மேற்க்கொள்ளாமல் முற்றும் முடிய காப்பார். நம்முடைய ஓட்டம் ஜெயமாய் முடியும். அல்லேலூயா!