நான் சிறுவனாயிருந்த போது, ஒருமுறை இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அன்று என்னுடைய அருகில் ஒரு இரயில்வே ஊழியர் பயணம் செய்துகொண்டிருந்தார். நான் இயல்பாகவே, அனைவரிடமும் எளிதில் பழகும் சுபாவம் உடையவன். எனவே, அவரிடம் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் “இரயில்வே மஸ்தூர் தொழிற்சங்கத்தின் மதுரை கோட்ட தலைவராக இருப்பதாகவும், மேலும் தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநிலத் தலைவராக இருப்பதாகவும் கூறினார்.
நான் உடனே அவரிடம் வேகமாக நீங்கள் எத்தனை ஓடுகள் வரை உடைப்பீர்கள்? என்று கேட்டேன். அவரோ சிரித்துக்கொண்டே, தம்பி, கராத்தே என்றால் ஓடு உடைப்பதற்கான பயிற்சியல்ல. நல்ல தேக ஆரோக்கியத்திற்கும், உடற் கட்டுப்பாட்டிற்கும், மனக் கட்டுப்பாட்டிற்கும் உரிய பயிற்சி. சில ஆரம்ப நிலை கராத்தே வீரர்கள் ஓடுகளை உடைத்தல், தீயில் குதித்தல் போன்ற சாகசங்களைப் புரிந்தாலும் கராத்தே பயிற்சியின் நோக்கம் அதுவல்ல என்றார்.
நாமும்கூட ஆவியின் வல்லமையைப் பெற்றவர்கள், ஆரம்ப நிலையிலேயே ஆனந்தம் கொள்கிறோம். முதிர்ந்த அனுபவத்திற்கு அநேகர் வளரவில்லை. ஒருமுறை பேதுருவும், யோவானும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கே பிறவி சப்பாணியைக் கண்டார்கள். உடனே பேதுரு “வெள்ளியும், பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி தூக்கிவிட்டாரே….” அப்படிப்பட்ட வல்லமை நமக்கு வேண்டும். நமது ஜெப வாழ்க்கை, பரிசுத்த ஆவியின் வல்லமை, நம்மை அப்படிப்பட்ட மேலான அனுபவங்களுக்கு வழிநடத்த வேண்டும். அப்பொழுது மட்டுமே, அற்புதங்கள், அடையாளங்கள் மூலமாக ஆண்டவருடைய திரு நாமத்தை நாம் இந்த கடைசி நாட்களில் உயர்த்த முடியும். நாம் ஆண்டவரை உயர்த்தும்போது அவர் அனைவரையும், தம் பக்கமாய் இழுத்துக்கொள்வார்.