ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக, நான் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு, நமது மிஷனரிகளையும், பணித்தளங்களையும் பார்வையிடும்படி அடிக்கடி செல்வது வழக்கம். பொதுவாக நான், என்னுடைய அலுவலகப் பணியினிமித்தம் “டெல்லி” செல்லும்போது, வெள்ளிக்கிழமை இரவு இரயில் பஞ்சாப் சென்று வருவது வாடிக்கை.


இவ்வாறாக நான், அங்கு செல்லும்போது, அவர்கள் “போதகர் கூட்டம்” நடத்துவார்கள். அக்கூட்டங்களில், நமது மிஷனரிகளும், மேலும் அநேக தேவ ஊழியர்களும் கலந்துகொள்வர். இவர்களின் மதிய உணவிற்காக நான் பணம் கொடுப்பது வழக்கம். மேலும் மாலையில் கூட்டம் முடியும்போது, போதகர்களில் அநேகர் வரிசையில் நிற்பர். அவர்களுக்கு, அந்த ஊர் வழக்கப்படி, பயணச் செலவுகளுக்காக ரூ.500/- கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். மேலும் சில ஊழியர்கள், தங்கள் கஷ்டங்களைக் கூறி உதவிகள் கேட்பர். இவர்களுக்கும் என்னால் இயன்ற மட்டும் உதவி செய்வதும் உண்டு.


என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொருமுறை பஞ்சாப் சென்று வரும்போதும், குறை மாதத்தைக் கழிக்க, கடும் சோதனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். நானும் இதுதான் “வட இந்திய ஊழியம்” என்ற நம்பிக்கையில், ஊழியத்தை பல இன்னல்கள் மத்தியில் நிறைவேற்றி வந்தேன்.அச்சமயம், ஒரு பிரபல ஊழியர் ஒருவர், என்னிடம் வந்து தனக்கு பஞ்சாப் செல்ல வேண்டும் என்ற ஊழியப் பாரம் வந்துள்ளதாகக் கூறினார். நானும் ஆர்வமிகுதியால், அவருக்கு “விமான டிக்கெட்” எடுத்துக்கொடுத்து, சில “போதகர் கூட்டங்களை” ஒழுங்குசெய்து, அவரை அனுப்பி வைத்தேன். மேலும், நான் அவரிடம், ஐயா, தாங்கள் ஊழியர் கூட்டத்திற்குச் செல்லும்போது, குறைந்த பட்சம் ரூ.50,000/-மாவது வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஏழை ஊழியர்களுக்கு பயணச் செலவு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என நினைப்பூட்டினேன்.


குறிப்பிட்ட நாள் வந்தது. அந்த தேவ ஊழியர் பஞ்சாப் சென்று வந்தார். அவருக்கு ஊழியர்கள் மத்தியில், “அமோக வரவேற்பு” இருந்ததாகக் கேள்விப்பட்டேன். மேலும், எனக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் செய்தியென்னவெனில், இவர் எவருக்கும் “பணஉதவி செய்யவில்லை, மாறாக ஊழியர் அனைவரும் மனமுவந்து, இவருக்கு காணிக்கை கொடுத்தார்கள்” எனவும் கேள்விப்பட்டேன். எனக்கோ மிக்க ஆச்சரியம்.
சில மாதங்கள் கழித்து, நான் மீண்டும் அந்த மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். என்னை மீண்டுமாகக் கண்ட அந்த ஊழியர்கள், “அந்த ஐயா வரவில்லையா?” என ஆவலுடன் கேட்டனர். எனக்கு மிகவும் குழப்பமாகி விட்டது. ஏனென்றால், என்னுடைய வருகையைப் பற்றியோ, இவர்களுக்கு நான் செய்து வந்த உதவிகள் பற்றியோ, மாதந்தோறும் அனுப்பி வந்த உதவித்தொகையைப் பற்றியோ எவரும் சந்தோஷப்பட்டது போலத் தோன்றவில்லை. மாறாக, இவன் ஏன் வந்தான்? என அவர்கள் நினைப்பதுபோலத் தென்பட்டது.


நான் அவர்களிடம், அந்த ஐயாவை மிகவும் ஆவலுடன் தேடுகிறீர்களே, அவர் உங்களுக்கு என்னக் கொடுத்தார்? எனக் கேட்டேன்.அவர்கள் என்னிடம், ஐயா எங்களுக்கு ஆலயம் கட்ட பணம் தருகிறேன் என்றார் என்றும், வாகனம் வாங்க பணம் தருகிறேன் என்றும் வாக்குப்பண்ணியதாகக் கூறினார்கள். இவர்களில் சிலர், நான் ஐயா கொடுத்த “பண மூட்டையை” கொண்டுவந்துள்ளதாக நம்பினர். மேலும் சிலர், ஒருவேளை இந்தப் பரதேசி, பணத்தை கையகப்படுத்தியிருப்பானோ எனவும் சந்தேகிக்க ஆரம்பித்தனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் என்னிடம், அடுத்த முறை “அந்த ஐயாவையே” அனுப்பி வையுங்கள் எனவும் வலியுறுத்தினர்.
எனக்கோ தர்ம சங்கடமாகி விட்டது. எத்தனையோ ஆண்டுகள், எவ்வளவோ தியாகங்கள் செய்து, கட்டியெழுப்பிய ஊழியங்கள், ஊழியர்கள், எந்த செலவும் செய்யாமல், எவருடைய பணத்திலோ சென்று, “வாக்குறுதிகளை மட்டும்” அள்ளி வீசிய ஊழியர் பின்னால் எளிதில் சாய்ந்துவிட்டனர். அவர் எந்த உதவியையும் செய்யவில்லை, செய்யப்போவதுமில்லை. ஆனால் “சாமி வரம் கொடுத்து, பூசாரி கெடுப்பது” போன்ற பிரமையை ஏற்படுத்தியும் விட்டார்.


இரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்து, பணத்தை அள்ளிக் கொடுத்தால் ஏளனம் செய்கின்றனர். எவர் பணத்திலோ, ஆகாய விமானத்தில் சென்று, பணத்தைக் காணிக்கையாகப் பெற்றுக்கொண்டால் மெச்சிக் கொள்கின்றனர். இது உண்மைக்கும், எளிமைக்கும் உலகம் தரும் அங்கிகாரம். ஆனால் நமதாண்டவர் “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” என வாக்குப் பண்ணுகிறார். பரலோகம் கிடைத்தால் போதும்!



Author

You May Also Like…

Share This