எது தேவனுடைய பார்வையில் நலமானது?

Written by Pr Thomas Walker

February 22, 2011

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இன்றைய சமுதாயத்தில் மனிதன் சில காரியங்களை தனக்கு இது நலமாயிருக்கும் என்று நினைக்கிறான். ஆனால் தேவன் அதைக்குறித்து என்ன நினைப்பார்? அதன் முடிவு எப்படி இருக்கும்? என்று மனிதன் சிந்திப்பது இல்லை. “மனிதனுக்கு செம்மையாக தோன்றும் வழிகள் உண்டு. ஆனால் அதன் முடிவோ மரணம்.” நமது நினைவுகளை விட தேவனின் நினைவுகள் உயர்ந்தவைகள். தேவன் பார்வையில் எது நலமானது என்று ஆராய்ந்து பார்த்து செய்ய வேண்டும். “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய பார்வையில் எது நன்மை? எது அவருக்குப் பிரியம்? எது பரிபூரணமான சித்தம்?” என்பதையே பகுத்து அறிந்து செய்ய, மனதை மறுரூபமாக்க வேண்டும் என்று பவுலடிகளார் ரோம சபையாருக்கு கூறும்போது சொல்லுகிறார்

மனிதனுக்கு எது நலமாய்த் தோன்றுகிறது?

 முதலாவதாகதீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்
எந்தக் காரியங்கள் மனிதனுக்கு நலமாயிருக்கும் என்று தியானிப்போம். 2இராஜா.5:3 வசனத்தில், இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த சிறுபெண் “தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.” சுகத்தைப் பெற நாகமான், எலிசா தீர்க்கதரிசியிடம் சென்றால் குணமடைவார் என்று கூறினாள். சிலர் தேவனுடைய தீர்க்கதரிசிகள், ஊழியர்களிடம் போய் தங்கள் வியாதிக்காக ஜெபிப்பது இல்லை. தேவனிடம் செல்லும் மனிதன் கைவிடப்படுவது இல்லை.

 இரண்டாவதாகவிலக்கப்பட்ட கனியைப் புசிப்பது நலமாகத் தோன்றுகிறது
ஆதி.3:6 வசனத்தில், “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது…” என்றாள். பின்பு தானும் புசித்தாள். தன் புருஷனுக்கும் கொடுத்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் விலக்கப்பட்டதை புசித்ததால் பாவம் செய்தார்கள். தேவ மகிமையை இழந்தனர். தேவன் அவர்களை புறக்கணித்து தோட்டத்திற்கு புறம்பே தள்ளிவிட்டார். பாவம் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டே துரத்திவிட்டது. பார்வைக்கு கவர்ச்சியாக இருக்கிறது என்று ஒரு விசுவாசி ஒரு காரியத்தை முடிவெடுக்கக் கூடாது. பரிசுத்தவான்கள் கவர்ச்சி, இச்சைக்குப் பின்னால் போக மாட்டார்கள். பரிசுத்தவான்கள் தேவனை பிரியப்படுத்துகிறபடியால் பார்வைக்கு கவர்ச்சியாக உடை உடுத்த மாட்டார்கள்.

 மூன்றாவதாகஎகிப்தியருக்கு வேலை செய்கிறது (பிசாசுக்கும், உலக மக்களுக்கும்) நலமாயிருக்கிறது
யாத்.14:12 வசனத்தில், “நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.” விசுவாசிகளானபின்பு இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றபின்பு உலகத்தாரோடு இரட்சிக்கப்படாமல் இருந்தால் நலமாயிருக்கும் என்று சொல்வது தவறு. தேவனுக்கு அடிமையாக உழைக்க அநேகருக்கு விருப்பம் இல்லை. பிசாசுக்கு உழைக்க விருப்பமாயிருக்கிறது.

 நான்காவதாகவனாந்திரத்தில் சாகிறது நலமாயிருக்கிறது
எண்.14:2 வசனத்தில், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி, “எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்” என்றனர். விசுவாசிகளுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனுக்காக வைராக்கியமாக முன்னேறிச் செல்ல விருப்பம் இல்லை.

 ஐந்தாவதாகசஞ்சலம், நிர்பந்தம் நிறுக்கப்பட்டு தராசிலே வைத்தால் நலமாயிருக்கிறது
யோபு 6:2 வசனத்தில், “என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்” என்கிறார் யோபு. பாதிக்கப்பட்ட துயர சம்பவங்களையே நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறார். கிறிஸ்துவுக்காக பாடுபடுவது சந்தோஷமாக தோன்றவில்லை.

 ஆறாவதாகதுன்பத்தின் நடுவில் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்
யோபு 6:9, “தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்” என்கிறார்.

 ஏழாவதாக
(
) நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்படாமலே செத்துப்போனால் நலமாயிருக்கும்
யோபு 14:13 வசனத்தில், “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.” மேலும், யோபு 10:18 வசனத்தில், “நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே” என்கிறார். யோபு தான் கர்ப்பத்திலிருந்து வெளிப்படாமலே செத்துப்போனால் நலமாயிருக்கும் என்று வேதனையில் புலம்புகிறார். தேவன் அவரை திரும்ப நினைத்து அவரது பாடுகளை மாற்றி ஆசீர்வதிக்கும் காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும் என்கிறார்.

() மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்காததால் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்
யோனா, தேவனுடைய நியாயத்தீர்ப்பு நினிவேக்கு கொடுக்காததால் தான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்று எரிச்சல் கொள்கிறார். யோனா 4:3 வசனத்தில், “இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.” இஸ்ரவேலரின் சத்துருக்கள் தான் நினிவே மக்கள். அவர்களின் அழிவையே விரும்பினார் யோனா. எனவே அவருக்கு தேவன் மேல் எரிச்சலும் கோபமும் வந்தது.

() மகிழ்ச்சியைத் தரும் காரியங்கள் நம்மைவிட்டு எடுபடும் போது சாகிறது நலமாயிருக்கும்
யோனா 4:8 “சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.” ஆமணக்குச் செடி ஒரு பிரயாசமும் படாமல் ஒரே நாளில் வந்தது. ஆனால் காய்ந்து போயிற்று. எனவே யோனாவுக்கு எரிச்சல். சில வசதி வாய்ப்புகள் நமக்கு ஆமணக்குச் செடி போல இருந்து, எடுபடும்போது எரிச்சல் வரக்கூடாது. நீ பாடுபடாத ஒரு செடிக்காக துக்கப் படுகிறது தேவன் நினிவேயின் மக்களுக்காக 1,20,000 பேர் அழிக்கப்பட்டுப் போகக்கூடாது என்று கவலைப்பட்டார். தேவன் நமக்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்புகிறார். அழியும் ஆத்துமாக்களுக்காக கவலைப்படுவது தான் நல்லது.

 எட்டாவதாகதேவனுடைய பிள்ளைகளுக்கு எது நலமானது என்று பார்ப்போம்
(1) தேவனை அண்டிக்கொண்டிருப்பது நலம்
சங்.73:28 வசனத்தில், “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்கிறார் தாவீது.

(2) தேவனிடம் மனிதருக்காக வழக்காடுகிற ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும் (பரிந்து பேசும் நபர்)
யோபு 16:21, யோபு 31:35 வசனங்களில், “…என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்;” இதோ சர்வ வல்லவர் எனக்கு உத்தரவு அருளிச் செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு என்கிறார். மேலும் யோபு 23:3 வசனத்தில், “நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்” என்கிறார்.

(3) தேவனை துதிப்பது நல்லது
சங்.54:6ஆம் வசனத்தில், “உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது” என்கிறார் தாவீது. எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வதே நம்மைக் குறித்து தேவ சித்தமாயிருக்கிறது

(4) கிருபை நல்லது
சங்.63:3ஆம் வசனத்தில், “ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்” மேலும் எபி.4:16ஆம் வசனத்தில், “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” தேவனுடைய கிருபையைப் பெற்றவர்கள் தான் பரலோகம் செல்ல முடியும். நரக ஆக்கினையிலிருந்து தப்ப முடியும்.

(5) வேதமே நல்லது
சங்.119:72 வசனத்தில், “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.” மேலும் ஏசாயா 48:18,19 வசனத்தில், “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் தான் பாக்கியவான்கள். வேதமே பாதைக்கு வெளிச்சம் காட்டுகிறது.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! மனிதனுக்கு நலமென்று நினைக்கும் காரியங்கள் தேவனுடைய பார்வையில் நல்லதாக காணப்படவில்லை. எனவே தேவனுடைய பார்வையில் எது நலமோ, அதையே நாம் செய்வோம். தேவனை துதித்து, மகிமைப்படுத்தி அவருடைய கிருபையை பெற்று வாழ்வோம். நாம் தேவனை அண்டிக்கொண்டு, வேதத்தைக் கவனமாய் கைக்கொண்டு நடந்தால், அதுவே தேவனுடைய பார்வையில் நன்மையும் பிரியமுமாய் இருக்கும். கர்த்தருடைய நாமம் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் மகிமைப்படும்!
அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This