“அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்”என்று 1கொரி.10:5ல் வாசிக்கிறோம். இதில் கூறப்பட்டுள்ள ‘அவர்கள்’ யார்? அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், தேவனால் செய்யப்பட்ட பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டவர்கள், தேவனால் போஷிக்கப்பட்டவர்கள். 1கொரி.10:1-4 வரையுள்ள வசனங்களை வாசிக்கும்போது ‘அவர்கள் எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தார்கள்; எல்லாரும் …. ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்; எல்லாரும் ஒரே ஞான போஜனத்தைப் புசித்தார்கள்; எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்’ என்று பார்க்கிறோம். ‘அப்படியிருந்தும்’ தேவன் அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் பிரியமாயிருந்ததில்லை. ஏன் தேவன் அவர்களிடம் பிரியமாயிருக்கவில்லை.
முதலாவதாக – அவர்கள் இச்சிக்கிறவர்களாயிருந்தார்கள் (1கொரி.10:6)
அவர்கள் பொல்லாங்கானவைகளை இச்சித்தார்கள். எத்தனை மரத்தில் கனிகள் இருந்தாலும் ஏவாளுக்கு தேவன் விலக்கிய மரத்தின் கனியே விருப்பமாக இருந்தது (ஆதி.3:6) தேவன் விலக்கினவற்றை நாம் இச்சிக்கும்போது நமக்கு நாமே சாபத்தை வருவித்துக் கொள்கிறோம். இஸ்ரவேலர் வனாந்தரத்திலே பிரயாணம் செய்தபோது தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டார்கள் (சங்.78:18). இஸ்ரவேலர் இச்சையை வெறுக்கவில்லை (சங்.78:30). அவர்கள் இச்சித்துக் கேட்டதை தேவன் கொடுத்தார். ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். (சங்.106:14,15) நாம் இச்சிக்கும்போது ஆத்துமாவில் இளைப்பு உண்டாகிறது. பத்துக் கற்பனைகளில் கடைசி கற்பனை ‘இச்சியாதிருப்பாயாக’ என்று நமக்கு போதிக்கிறது (யாத்.20:17). அதற்கு ஒப்பனையான புதிய ஏற்பாட்டு கற்பனையை போதித்த இயேசு ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்கிறார் (மத்.5:28). எனவே இச்சையுள்ளவர்களாய் ஜீவிப்பதை தவிர்த்து அவருக்கு பிரியமாக ஜீவிப்போமாக.
இரண்டாவதாக – விக்கிரகாராதனை செய்கிறவர்களாய் இருந்தார்கள் (உபா.9:12)
இரண்டாவதாக இஸ்ரவேல் புத்திரர் விக்கிரகாராதனை செய்கிறவர்களாய் இருந்தபடியால் தேவன் அவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை. முரட்டாட்டம் பண்ணுதலும் (1சாமு.15:23); பொருளாசையும் (எபே.5:5) விக்கிரகாராதனைக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது. விக்கிரகாராதனைக்காரர் ஒருபோதும் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியாது (எபே.5:5) விக்கிரகாராதனைக்காரர் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி.21:8). எனவே விக்கிரகாராதனைக்கு விலகி ஓட வேண்டும். முரட்டாட்டம் பண்ணுதலுக்கும், பொருளாசைக்கும் விலகி ஓட வேண்டும். அலுவலகங்களில் பூஜை செய்த பொருட்களை சாப்பிடுவதும், பண்டிகை நாட்களில் விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை உண்பதும் கூடாது. விக்கிரகாராதனை தேவனுக்கு அருவருப்பானது. ‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்’ (யாத்.20:3-5) என்று தேவன் நமக்கு முதல் மூன்று கற்பனைகளைக் கொண்டு எச்சரித்துள்ளார்.
மூன்றாவதாக – வேசித்தனம் செய்கிறவர்களாயிருந்தார்கள் (எண்.25:1-9; வெளி.2:14)
மோவாபியருக்கு பிலேயாம் கொடுத்த ஆலோசனையின் பேரில் இஸ்ரவேலரோடே வேசித்தனம் பண்ணி அவர்களைக் கெடுத்தார்கள். (எண்.25:1) ஆதலால் இஸ்ரவேலர் மீது தேவ கோபம் மூண்டது. அப்பொழுது உண்டாகிய வாதையினிமித்தம் 24,000 பேர் செத்தார்கள். நமது சரீரம் வேசித்தனத்திற்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது (1கொரி.6:13). வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள், மனுஷன் செய்கிற எந்த பாவமும் சரீரத்திற்கு புறம்பாயிருக்கும். வேசித்தனம் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாக பாவம் செய்கிறான் என்று 1கொரி.6:18ல் வாசிக்கிறோம். நாம் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள். எனவே நமது சரீரத்தை பரிசுத்தமாய் ஆண்டுகொள்ள வேண்டும்.
நான்காவதாக – தேவனை பரீட்சை பார்த்தார்கள் (யாத்.17:7)
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் நம் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்ற பரீட்சை பார்த்தார்கள் (யாத்.17:7). அதனால் தேவன் அவர்கள் மேல் பிரியமாயிருக்கவில்லை. தங்களுக்கு மன்னாவை அருளிய தேவனால் தங்கள் தாகத்தையும் தீர்க்கமுடியும் என்கிற விசுவாசம் அவர்களுக்கு இல்லாமல் போனது. அதனால் அவர்கள் தேவனை பரீட்சை பார்த்தார்கள். தங்கள் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக தேவனை பரீட்சை பார்த்தார்கள் (சங்.78:18). பிதாவை பரீட்சை பார்க்கும்படி சோதித்த சாத்தானை இயேசு ‘உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே…’ என்ற வசனத்தைக் கூறி ஜெயித்தார் (மத்.4:7). பரீட்சை பார்த்து நாம் ஒருபோதும் தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்தக் கூடாது.
ஐந்தாவதாக – முறுமுறுத்தார்கள் (யாத்.15:23,24)
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். அதனால் தேவன் அவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை. மாராவிலே தண்ணீர் கசப்பாயிருந்ததால் முறுமுறுத்தார்கள் (யாத்.15:23,24). ரெவிதீமிலே இஸ்ரவேலர் தண்ணீர் தவனத்தினால் முறுமுறுத்து மோசேயின் மேல் கல்லெறியப் பார்த்தார்கள் (யாத்.17:4). அதனால் தேவன் இஸ்ரவேலர் மேல் பிரியமாயிருக்கவில்லை. எந்த நிலையிலிருந்தாலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். முறுமுறுப்பை நம்மைவிட்டு நம்முடைய வீடுகளைவிட்டு அகற்ற வேண்டும். திருப்தி என்பது நமக்கு அவசியமான ஒன்றாக இருக்க வேண்டும். கசப்பும் முறுமுறுப்பும் தேவாசீர்வாதங்களைத் தடை செய்கிறது. எல்லாவற்றிற்கும் ஸ்தோத்திரம் பண்ணும்போது கிருபை ஊற்றப்படுகிறது. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் போடப்பட்டபோது, முறுமுறுக்காமல் தேவனை துதித்துப் பாடினார்கள். இது மற்றவர்களின் இரட்சிப்புக்கு காரணமாக அமைந்தது. சுற்றப்புறமும் சூழ்நிலையும் தேவனால் கட்டளையிடப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்காகவும் துதிக்கும்போது நம்மால் ஜெயம் பெறமுடியும்.
பிரியமான தேவப் பிள்ளைகளே! நாம் இரட்சிக்கப்பட்டவர்கள், தேவ வார்த்தைகளுக்கு இணங்கி ஞானஸ்நானம் பெற்றவர்கள், தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர்கள். நாம் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமானவர்களாய் நடந்துகொள்கிறோமா? தேவன் விரும்பாத காரியங்களை நம்மைவிட்டு அகற்றி அவருக்குப் பிரியமாய் நடந்து கொள்வோமாக!