நான் தனியாக வெளியூர் செல்லும்போது, சில சமயங்களில் “முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில்” செல்வது வழக்கம்.
அங்கே நமது நாட்டின் சராசரி மனிதனின் பிரச்சனைகள் அனைத்தையும், எளிதாய் அறிந்துகொள்வது சுலபம். பல்வேறு காரணங்களுக்காக, மனைவி, பிள்ளைகளுடன், முழு இரவும் நின்றே பயணித்து, அயலூர் சென்று, அனைத்துக் காரியங்களையும், ஒரு துளி ஓய்வின்றி செய்ய வேண்டிய கட்டாயத்தில், நிர்ப்பந்தத்தில், செல்லும் அநேகரைக் கண்டிருக்கிறேன். அவர்கள் பக்கம் என்ன தான் நியாயம் இருந்தாலும், அவர்கள் நியாயத்திற்கு செவி சாய்க்க யாருமேயில்லை. அவர்கள் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
ஒருமுறை நான் இவ்வாறாக, நெரிசல் மிக்க, ஒரு ரயில் பெட்டியில் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை வந்தது. எவரும் இரு கால்களையும், முழுமையாகத் தரையில் கூட ஊன்ற முடியாத அளவிற்கு கூட்டம். இதன் மத்தியில் ஒரு “பெரிய கொய்யாப்பழக் கூடையோடு” வயதான மூதாட்டி ஒருவரும் ரயில் பெட்டியில் ஏறியிருந்தார்.
அந்த மூதாட்டி ஏதோ ஒருவரிடம், சில கொய்யாப் பழங்களை, விற்றிருந்தார். அதற்குள் ஒரு பெரிய பிரச்சனை ஆரம்பித்துவிட்டது…
நெரிசலைத் தாங்க முடியாமல்… ஒரு வயதானவர், சாமான்கள் வைக்கும் இடத்தில் போய் உட்கார முயன்றுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அவர் “செருப்பில் இருந்த சில தூசிகள்” கீழே அமர்ந்திருந்த ஒரு வாலிபர் மீது பட்டுவிட்டது… இதனால் ஏற்பட்ட வாய்த் தகராறு, பின்பு பெரிய சண்டையாக மாறிவிட்டது. இரயில் பெட்டியிலிருந்த அனைவரும் இரு அணிகளாகப் பிரிந்து, சண்டையிடும் இருவருக்கும் ஆதரவாக செயல்பட்டு, சண்டையைப் பெரிதாக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தனர். சிலர் வரப்போகிற “மூன்றாம் உலக மகா யுத்தத்திற்கு பயிற்சி எடுப்பது போல” சண்டையிட்டனர். கொய்யாப்பழம் விற்கும் மூதாட்டியிடம், நான் சென்று, எங்க பாட்டி இறங்கணும்? என்றுக் கேட்டேன். அவர்கள் மிகவும் சோகமாக “சாத்தூர் வரப்போகிறது” இந்தப் பழங்களை விற்றால்தான் “எங்க குடும்பம் சாப்பிட வயித்துக்கு கொஞ்சமாவது சோறு கிடைக்கும்” என்ற சொன்னார்கள்.
எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. இதற்கிடையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களில் பலருக்கு… ஏன் சண்டை ஆரம்பித்ததென்றே தெரியவில்லை? மேலும் சண்டையை எப்படி நிறுத்த வேண்டுமென்றும் புரியவில்லை.
நான் அவர்களிடம் போய், “ஐயா சண்டையை நிறுத்துங்க, பாட்டியிடம் கொய்யாப்பழம் வாங்கி சாப்பிடுங்க, பாட்டியாவது சந்தோஷமா, சாத்தூரில் இறங்கட்டும், சாத்தூர் வரப்போகிறது” என்றுக் கூறினேன். உடனடியாக சண்டைகள் நின்றுவிட்டன. கொய்யாப்பழக் கூடை “5 நிமிடத்திற்குள்” விற்றுத் தீர்ந்தும் விட்டது. பாட்டிக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம், சில மணி நேரம் சென்றது. மதுரைக்கு ரயில் வந்தடைந்தது. நான் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. சண்டையில் நான் கண்ட காட்சி… முன்பு சண்டை போட்டுக்கொண்டிருந்த இரு கோஷ்டிகளைப் பார்த்தேன்… அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, கூட்ட நெரிசலை மறந்து ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் “கொய்யாப்பழம் பாட்டியும்” சாப்பிட்டுவிட்டு சாத்தூரில் தூங்கியிருப்பாள். இதைத்தான் நமது ஆண்டவர் “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்று சொல்லுகிறார். சமாதானம் உண்டுபண்ண முயற்சி செய்வோம், சமாதானப் பிரபு உதவி செய்வார்.