கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகையை கொண்டாடுகிற நாம் உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கை உடையவர்களாக வாழ வேண்டும். கிறிஸ்தவர்களின் ஆழ்ந்த நம்பிக்கையை (க்ஷடநளளநன ழடியீந) நான் மரித்தாலும் உயிரோடு எழும்புவேன் என்பதே. என்னுடைய அற்பமான இந்த சரீரம் மண்ணிலே விதைக்கப்படும். ஆனால் அவர் வருகையின் நாளில் அழிவில்லாததாய் மறுரூபமாக்கப்பட்டு எழும்பும் என்பதே கிறிஸ்தவத்தின் ஆணிவேர். அழிவுள்ள சரீரம் அழியாமையை தரித்துக்கொள்ளும். சாவுள்ள சரீரம் சாவாமையைத் தரித்துக்கொள்ளும். வெளி.20:6 வசனத்தில், “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என்கிறார் பரிசுத்த யோவான்.
இரண்டு விதமான உயிர்த்தெழுதலைப் பற்றி பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. 1) ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் 2) சரீர உயிர்த்தெழுதல். ஆவிக்குரிய உயிர்த்தெழுதலில் பங்கு பெறாதவர்கள் சரீர உயிர்த்தெழுதலில் பங்குபெற முடியாது. 1) எபே.2:1, “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்திருந்த நாம் உயிர்த்து எழுந்தோம். 2) சரீர உயிர்த்தெழுதலில் 2 வகை உண்டு 1. ஆயிரவருட அரசாட்சிக்கு உயிர்த்தெழுதல் முதல் உயிர்த்தெழுதல், இது பரிசுத்தவான்களுக்குரியது. 2. நியாயம் தீர்க்கப்பட எல்லாருமாக உயிர்த்தெழுவது இரண்டாம் உயிர்த்தெழுதல்.
வெளி.20:11-15 வசனங்களில், பின்பு நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும், அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன். அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின. அவைகளுக்கு இடம் காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது. மரணமும் பாதாளமும் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்.
முதலாம் உயிர்த்தெழுதல் உலகத்தின் முடிவுநாளில் நடக்கும். முதல் உயிர்த்தெழுதலுக்கும் இரண்டாம் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலே 1000 ஆண்டு உண்டு. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலில் எழும்புவார்கள்.
யார் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள்?
1) பாவங்கள் மூடப்பட்டவர்கள்:
சங்.32:1ஆம் வசனத்தில் “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” அப்படிப்பட்டவனே முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவான்.
2) முத்திரை போடப்பட்டவர்கள்:
எபே.1:13-15 “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.” முத்திரை போடப்பட்டவர்கள் பிரவேசிப்பார்கள்.
மேலும் கலா.5:25ஆம் வசனத்தில் “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.” ஆவியின்படி பிழைக்க வேண்டும்.
3) பரிசுத்தமில்லாமல் அவரை தரிசிக்க முடியாது:
எபி.12:14 “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” பரிசுத்தமில்லாமல் அவரை தரிசிக்க முடியாது.
4) நற்கிரியைகளைச் செய்கிறவர்களுக்கு உயிர்த்தெழுதலில் பங்கு உண்டு:
யோவான் 5:28,29 “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” நன்மை செய்தவர்களே நித்திய ஜீவனை அடைவார்.
5) திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்கள் பிரவேசிப்பர்:
மத்.5:3-7ஆம் வசனங்களில், ஆவியில் எளிமை, துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள் போன்ற ஆவிக்குரிய குணநலன்களைப் பெற்றவர்களே பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்.
6) நீதியினிமித்தம் பாடுபடுகிறவர்கள்:
மத்.5:10,11ஆம் வசனத்தில், “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” மிகுந்த உபத்திரவத்திலிருந்து வருகிறவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார்கள்.
7) கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள்:
அதாவது முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு அடைவார்கள். 1கொரி.15:22ன் படி ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மேலும் பிலி.3:10,11 வசனங்களில், “இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன்” என்கிறார் பவுல் அப்போஸ்தலர்.
எபே.1:21,22,23ஆம் வசனங்களில் பிதாவாகிய தேவன் “அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” சபையில் நாம் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார். எபே.3:18ல் “சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழழும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக வேண்டும்”
எபே.3:12 அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திட நம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
அன்பு நண்பரே! நாம் விசுவாசத்திலும், தேவனைப் பற்றிய அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி…. பூரண புருஷராகும்வரை சபையில் நிலைத்திருந்து உயிர்த்தெழுதலில் பங்குபெற வேண்டும். சபையை இதற்கே தேவன் ஏற்படுத்தியுள்ளார். சபையில் நம்மை பூரணராக மாற்றும்படி பரிசுத்தவான்களாக சீர்பொருந்தும் பொருட்டு 5 விதமான ஊழியங்களினால் சபையை தேவன் பக்திவிருத்தியடையச் செய்கிறார். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறும் பாக்கியம் பெறும்படி பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து முடிவுபரியந்தம் கிறிஸ்துவில் நிலைத்திருப்போம்! அல்லேலூயா!