உபத்திரவ காலத்தில், பரிசுத்தவான்களுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியமான குணாதிசயங்கள் பொறுமையும், விசுவாசமும் ஆகும்.
“சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்” (வெளி.13:10)
யோபு மிகுந்த உபத்திரவத்தில் கடந்து வந்தவன். யோபுவின் பொறுமையைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கிறோம். யோபு தன் ஆஸ்தி, பிள்ளைகள் அனைத் தையும் இழந்தான். இதுவுமல்லாமல், நண்பர்களின் போதனைகள், அவனை உடைந்துபோகப் பண்ணியது. இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும், யோபு பொறு மையோடு தேவன்மேல் வைக்கும் விசுவாசத்தைக் காத்துக்கொண்டான். இறுதியில், அவன் இழந்துபோன எல்லாவற்றையும் இரண்டத்தனையாய் பெற்றுக்கொண்டான். அதுபோல, நாமும் உபத்திரவ காலங்களில் நமது பொறுமையை காத்துக்கொள்வது நல்லது. கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில், மிகுந்த உபத்திரவம் உண்டாயிருக்கும் என வேதம் கூறுகிறது.
“ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” (மத்.24:21)
அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் உண்டாகும் உபத்திரவத்தின் சாயலை, இப்பொழுதே பல தேசங்களில் காணலாம். பல நாடுகளில், இயேசுவை ஏற்றுக் கொண்ட தேவபிள்ளைகள் கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உபத்திரவத்தின் மத்தியிலும் பொறுமையாயிருந்து, தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர். இனி வரும் உபத்திரவத்தின்போதும் பரிசுத்தவான்கள் பொறு மையினாலே, தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அதி சீக்கிரத்தில் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையோடு, பொறுமையை காத்துக்கொள்ள வேண்டும். அதி சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்து பூமியை ஆளுகை செய்ய வருவார் என்ற நம்பிக்கையிலே காத்திருக்க வேண்டும். யோபு, அந்த நம்பிக்கையோடு பொறுமையை காத்துக்கொண்டான். இயேசு கிறிஸ்து கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும், தன் சொந்தக் கண்கள் மீட்பரைக் காணும் என்று நம்பி பொறு மையைக் காத்துக்கொண்டான். நாமும் யோபுவைப் போல பொறுமையைக் காத்துக்கொள்வோம்.
பொற்சிலையை வணங்குவதில்லை
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயி ருக்கிறார்;……” (தானி.3:17,18)
நேபுகாத்நேச்சார் என்ற ராஜா, ஒரு பொற்சிலையை பண்ணி, அதை ஒரு சம பூமியிலே நிறுத்தி, எல்லாரும் பொற்சிலையை வணங்க வேண்டும் என்று கட்டளை யிட்டான். எல்லா ஜனங்களும் ராஜா கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆனால், தேவனுடைய தாசர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அந்த பொற்சிலையை வணங்கவில்லை. அதை கேள்விப்பட்ட ராஜா அவர்களை பார்த்து, நீங்கள் பொற்சிலையை வணங்காதது மெய்தானா என்று கேட்டான். அவர்கள் ராஜாவுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்து, எங்கள் தேவன் எங்களை தப்புவிப்பார்; அப்படி தப்புவிக்காமல் போனாலும் நாங்கள் பொற்சிலையை வணங்குவதில்லை என்றார்கள்.
ராஜா கடுங் கோபங்கொண்டான். அக்கினிச் சூளையை ஏழு மடங்கு சூடாக்கச் சொன்னான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகொவை கட்டி அக்கினிச் சூளையில் போட கட்டளையிட்டான். அவர்களை தூக்கிக்கொண்டு போனவர்களை அக்கினி ஜூவாலை கொன்று போட்டது. மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச் சூளையிலே விழுந்தார்கள்.
“அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்” (தானி.3:25)
அப்பொழுது ராஜா, ஒரு அதிசயமான காட்சியைக் கண்டான். அக்கினிச் சூளை யிலே, கட்டுண்டவர்களாய் போடப்பட்டவர்கள் விடுதலையாய் உலாவுகிறதையும், அவர்களோடு தேவசாயலில் நாலாவது ஆள் உலாவுவதையும் கண்டு பிரமித்தான். அக்கினிச்சூளையின் அருகில் வந்து, வெளியே வாருங்கள் என்று ராஜா கூறினான். அவர்கள் மூவரும் எந்த சேதமும் இல்லாமல் வெளியே வந்தார்கள். அப்பொழுது ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்பவர்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று கர்த்தரைப் புகழ்ந்தான்.
பிரியமானவர்களே, ராஜாவின் கட்டளைக்கு பயப்படாமல், தேவனை விசுவாசித்த தேவதாசர்களை கர்த்தர் விடுவித்தார். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக் கிற ஜெயம். உபத்திரவங்களின் மத்தியிலும், சோதனைகளின் மத்தியிலும் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமாயிருப்போம். சோதனைகளை, உபத்திரவங்களை ஜெயிக்க கர்த்தர் கிருபை அளிப்பார்.