ஆதி மேன்மையை விட்டு இறங்காமல் காத்துக்கொண்டவர்கள்

Written by Pr Thomas Walker

September 21, 2007

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நம்மை அழைத்த அழைப்பு மேன்மையானது. நாம் நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் அறிந்தவர்களாய் ஜாக்கிரதையாய்த் தொடர்ந்து ஓடினால் மேன்மையான ஜீவகிரீடத்தை பெறுவோம். நாம் பந்தையப் பொருளை பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஆசையாய் ஓடுவோம். பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படி நாம் இச்சையடக்கத்தோடும் நிச்சயத்தோடும் ஓட வேண்டும். நாம் ஆகாதவர்களாய் போகாதபடிக்கு நம் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறவர்களாய் நம் ஓட்டத்தில் பொறுமையாய் ஓடினால் வெற்றி பெறுவோம்.
தங்கள் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள் மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று, நித்திய சங்கிலிகளினாலே கட்டப்பட்டு அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வேதத்தில் ஆதி மேன்மையை இழந்தவர்கள் அடைந்த நஷ்டங்களைப் பற்றி சிந்தித்தோம். இப்பொழுது தங்கள் அழைப்பையும் மேன்மையையும் விட்டு இறங்காமல் அதை உறுதியாய் காத்துக்கொண்டவர்களைப் பற்றி ஆராய்வோம்.

முதலாவதாக
நெகேமியா 6:3ல் “நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.” “I will not come down. I am doing a great work”.  நெகேமியாவை தேவன் தெரிந்தெடுத்தது இடிந்துபோன எருசலேம் அலங்கத்தை கட்டும்படியாகவும், இஸ்ரவேல் மக்களை சீர்திருத்தி தேவனை அவர்கள் உத்தமமாய் சேவிக்கத் தூண்டும்படியாகவும் தெரிந்தெடுத்தார். இந்த வேலை பெரிய வேலை. இது பரம ராஜாவினால் அவனுக்கென்று நியமிக்கப்பட்ட வேலை. ஆனால் அதைச் செய்யவிடாதபடி சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி நாலுதரம், ஐந்து தரம் அலங்கத்தின் வேலை நடந்தேறாத படிக்கு அவர்கள் சலித்துப்போகும் மட்டும் பயமுறுத்தினார்கள். ஆனால் நெகேமியா மிகவும் திடமனதாய் (நெகே.6:11) வசனத்தில் கூறப்பட்டது போல “என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ?” என்று உறுதியாய் இருந்து கர்த்தருடைய வேலையை நெகேமியா நிறைவேற்றினான். ஆம் பிரியமானவர்களே! தேவன் நம்மை உண்மையுள்ளவர்கள் என்று நம்பிக் கொடுத்த பொறுப்புகளை நாம் சபையிலும், சமுதாயத்திலும் தேவனுக்காக உறுதியாக நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறோம், மற்றவர்கள் பரியாசத்துக்கும், பேச்சுக்கும் பயந்து நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்றாமல் போகக்கூடாது. தேவனுடைய வேலையை விட்டு உலக காரியங்களுக்காக இறங்கிப்போகக் கூடாது. முதலாவது நம் வாழ்வில் தேவனுக்கும் அவர் சேவைக்குமே முதலிடம் கொடுக்க வேண்டும்.


1யோவான் 5:19ல் கூறுவது போல, “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்”. தேவன் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியுள்ளார் (வெளி.1:6). மேலும் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களில் அவரோடே கூட உட்காரவும் செய்தார் (எபே.2:7). எனவே மகிமையின் நம்பிக்கையோடு இவ்வுலகத்தால் நாம் கறைப்படாதபடி நம்மை பாதுகாத்துக்கொண்டு அவருடைய அழைப்பில் நிற்கவேண்டும். தேவனுடைய இராஜ்ஜியத்துக்கே நமது வாழ்வில் முதலிடம் கொடுத்து வாழ வேண்டும்.

இரண்டாவதாக
ஆதியாகமம் 13:8,9 வசனங்களில் “ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். …நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்”. நம் முற்பிதாவாகிய ஆபிரகாம் தனக்கு வந்த சோதனையில் சகோதர சிநேகம் பாதிக்கப்படாத வகையில் நடந்துகொண்டார். சகோதரனை பகைக்கிறவன் மனுஷ கொலைபாதகன். மேலும் சகோதர சிநேகத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என வேதம் எச்சரிக்கிறது. நாமும் நம்முடைய வாழ்க்கையில் சாட்சியை இழந்துவிடாமல் சகோதர சிநேகத்தில் நிலைத்திருப்போம்.

மூன்றாவதாக
ஆதியாகமம் 39:9ஆம் வசனத்தில் யோசேப்பு “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்”. அடுத்த வசனத்தில் அவள் நித்தம், நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தாள். ஆனால் தேவனுக்குப் பயந்த யோசேப்பு பாவம் செய்ய தூண்டப்பட்டும் தன் பரிசுத்த வாழ்க்கையை விட்டு இறங்கி பாவத்துக்கு வரவில்லை. தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 1கொரி.10:8 வசனத்தில் இஸ்ரவேலரில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் 23,000 பேர் விழுந்து போனார்கள். அதுபோல நாமும் வேசித்தனம் பண்ணாதிருப்போமாக என்று கூறப்பட்டுள்ளது. ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் வேசித்தனத்திற்கு விலகி ஓட வேண்டும். பரிசுத்த வாழ்க்கையை காத்துக்கொள்ள வேண்டும். தேவனுக்கு பயப்படும் பயம் சகல சாத்தானின் கண்களிலிருந்தும் நம்மை தப்புவித்து காக்கும்.
நான்காவதாக
1சாமு.23:4,10 வசனங்களில் தாவீதின் மனுஷர் “இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்”. தாவீது சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். தீங்கு செய்ய கையைப் போடவில்லை. பின்பு சவுலிடம் இவ்வாறு கூறினான். “இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார்….என் கை உம்மைத் தப்பவிட்டது; என் அண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே” என்றான். தீமை செய்ய பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தும் தன்னுடைய பரிசுத்தத்தை விட்டு இறங்கி வரவில்லை.
2சாமு.16:9-10 வசனங்களில் அபிசாய் தாவீது ராஜாவிடம் “அந்தச் செத்தநாய் (சீமேயி) ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே” என்றபோதும், தாவீது சம்மதிக்கவில்லை. “அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்” என்று கூறி அவனை கொலைசெய்ய சம்மதிக்கவில்லை. தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதனாக வாழ்ந்த தாவீது தன்னுடைய (standard) ஸ்தானத்தை விட்டு இறங்கி பாவங்களில் ஈடுபடவில்லை.

ஐந்தாவதாக,
எரே.35:5,6,7 வசனத்தில் திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்பாக குடிக்கசொல்லி எரேமியா தீர்க்கதரிசி கொடுத்தார். அப்படியிருந்தும் ரேகாபியர் குடிக்கவில்லை. எரே.35:10ஆம் வசனத்தில் அவர்கள் தகப்பன் யோனதாப் தங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தார்கள். அவர்கள் ஆலயத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீர்க்கதரிசியால் திராட்சரசம் குடிக்க தூண்டப்பட்டும் தங்களுடைய பிரதிஷ்டையை விட்டு சற்றும் பின்வாங்கி இறங்கிப் போகவில்லை. அப்படிப்பட்ட குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்தார். சகல நாட்களிலும் தேவனுக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் இல்லாமற் போவதில்லை என்றார். நாமும் ரேகாபியரைப் போல வைராக்கியமாக வாழ்ந்தால் மேன்மையான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

ஆறாவதாக
தானி.1:8; 3:17,18; தானி.6:10 வசனங்களில் நாம் தானியேலின் பரிசுத்த வாழ்க்கையையும் பிரதிஷ்டைகளையும் காணலாம். முதல் அதிகாரத்தில் ராஜ போஜனத்தாலும், மது வகையாலும் தீட்டுப்பட சம்மதிக்கவில்லை. மூன்றாம் அதிகாரம் 17,18 வசனங்களில் விக்கிரக ஆராதனை செய்ய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் சம்மதிக்கவில்லை. எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் விடுவிக்காமற் போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்று உறுதியாக நின்றனர். உயிருக்காக தங்கள் தீர்மானத்திலிருந்து இறங்கவில்லை. தானி.6:10 வசனத்தில் தானியேல் அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று தெரிந்தும் தினமும் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற் படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான். மனித ஆராதனைக்கு இணங்கவில்லை. தேவன் சிங்க கெபியிலிருந்து தானியேலை விடுவித்து பெரியவராக மகிமைப்பட்டார்.

ஏழாவதாக
யோபு 1:22; 2:9,10 யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டு தன் பிள்ளைகளையும், செல்வங்கள் ஆடு, மாடு, ஒட்டகங்கள் கடைசியாக தன் சரீர சுகத்தையும், இழந்திருந்தும் யோபு பாவஞ் செய்யவுமில்லை. தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை. நீர் ஏன் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீர் என்று மனைவி கேட்டபோதும், தேவன் கையில் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ, பாவஞ் செய்யவில்லை, தன்னை பரிசுத்தமாக சோதனையில் காத்துக்கொண்ட யோபுவை இரண்டத்தனையாய் ஆசீர்வதித்து உயர்த்தினார். தேவனை தூஷிக்கும்படி இழிவாக தங்கிப் போகவில்லை.
இதை வாசிக்கும் பிரியமான தேவ பிள்ளைகளே! தேவன் தங்களுக்கு கொடுத்த ஆதி மேன்மையை (ளயீசைவைரயட ளவயனேயசன) காத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் வந்த போராட்டங்கள், சோர்வுகள், நிந்தைகள், சோதனை மத்தியில் ஜெயமாக வாழ்ந்து ஜீவகிரீடம் பெற்ற பரிசுத்தவான்களைப் போல நாமும் வாழ்வோம்! ஜெயம் பெற்ற பரிசுத்தவான்கள் அவரோடு ஆயிரம் வருடம் ஆளுவார்கள்.
    ஆமென்! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This