கூடியிருந்த இடம் அசைந்தது
“அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:19)
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நமது தேவனிடத்தில் ஏறெடுக்கும் ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் தேவன் பதில் கொடுப்பார். எனினும், ஒருமனப்பட்ட ஜெபம் மிகவும் விசேஷமானது. பொதுவாக, சபைகளில் ஒருமனப்பாடு இருப்பதில்லை. சபைகளுக் குள்ளே பிரிவினை. ஒரே சபையிலே கருத்து வேறுபாடுகள். ஒருமனப்பட்ட ஜெபம் மிகவும் குறைவு. ஜெபக் குழுக்களுக்குள்ளும் உண்மையான ஒருமனம் இருப்ப தில்லை. குடும்பத்தில் ஒருமனம் இருப்பதில்லை. அப்படி ஒருமனதோடு ஜெபிக்கும் போது நமது குடும்பத்தில் எழுப்புதல், சபையில் எழுப்புதல், நகரத்தில் எழுப்புதல், தேசத்தில் எழுப்புதல். இப்படி ஒருமனப்பட்ட ஜெபம் எங்கும் காணப்படும்போது, நிச்சயமாகவே எழுப்புதல் வருவது உறுதி. ஆகவேதான், இயேசு கிறிஸ்து ஒருமனப் பட்ட ஜெபத்தைக் குறித்து மிகவும் அழுத்தமாகச் சொன்னார். ஒருமனப்பட்ட ஜெபத்திற்கு இரண்டுபேர் போதும். பூமியிலே எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் ஒருமனப்பட்டிருந்தால், தேவனால் அந்த ஜெபம் கேட்கப்பட்டு அதற்குத் தகுந்த பதில் கிடைக்கும். இன்றைய தேவை ஒருமனப்பட்ட ஜெபம். தேவனிடத்திலிருந்து பதிலைப் பெறும் ஜெபம், விசுவாசிகள் ஒருமனப்பட்டு செய்யக்கூடிய ஜெபம் ஆகும்.
ஆதி திருச்சபையில் ஒருமனப்பட்ட ஜெபம்
“அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு:….” (அப்.4:24). பேதுருவும், யோவானும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பிரசங்கித்து வந்தார்கள். அதைக் கண்ட பிரதான ஆசாரியர் மற்றும் அவனது கூட்டத்தினரும் பேதுருவையும், யோவானையும் பிடித்து இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக்கூடாது என்று சொல்லி எச்சரித்து அனுப்பி னார்கள். பேதுருவும், யோவானும் விசுவாசிகள் யாவரிடத்திலும் இதை அறிவித்தார்கள். விசுவாசிகள் உடனடியாக ஒருமனப்பட்டு ஜெபம் பண்ண ஆரம்பித் தார்கள். அவர்கள் ஊக்கமாய் ஜெபம் பண்ணியதால் கூடியிருந்த இடம் அசைந்தது.
“அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்” (அப்.4:31)
ஒருமனப்பட்டு ஜெபித்த விசுவாசிகளின் ஜெபத்தை தேவன் உடனே கேட்டார். இயேசுவின் நாமத்தில் தேவனை நோக்கி ஒருமனப்பட்டு கூப்பிட்டார்கள். தேவன் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் யாவரும் தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். அங்கே ஒரு எழுப்புதல் வந்தது.