அலுவலகங்களில் மேலதிகாரிகள் சில சலுகைகளைச் செய்ய நினைத்தாலும், இடையில் காணப்படும் இடைநிலை அதிகாரிகள் (Middle Lever Officers) கட்டையைப் போட்டு காரியத்தைக் கட்சிதமாய் கெடுத்து விடுவார்கள். இது எல்லா அலுவலகங் களிலும் வலுவாக, வழமையாக நடக்கிற ஒன்றுதான்!
ஆனால், தனக்கு வேண்டியவர்களுக்கு தகுதியே இல்லையென்றாலும், ஆஹா! ஓஹோ! என்று அந்தப் பணியாளரைப் பற்றி மேலதிகாரியிடம் புகழ்ந்து, எல்லாச் சலுகைகளையும் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் இந்த இடைநிலை அதிகாரிகள்.
இவர்கள்தான் “அவன்/ள் எப்படி Promotion -னை வாங்கிடுறான்/ள்-னு பார்த்துக் கிடுறேன்” என்ற குரலுக்குச் சொந்தக்காரர்கள்! அலுவலகங்களின் தவிர்க்க முடியாத சக்தி! அதேநேரத்தில், மேலிடத்தில் தங்கள் உறவைக் கட்சிதமாக வைத்துக் கொள்வதில் பலே கில்லாடிகள்.
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சம்பவம் கொடுக்கப்பட்டுள்ளது. நேபுகாத்நேச்சர் என்னும் பாபிலோனிய ராஜா, எருசலேமை முற்றுகையிட்டு அதைத் தன்வசமாக்கிக் கொள்கிறார். எருசலேமிலுள்ள வாலிபர்களில் சிலரை தன் நாட்டிற்குக் கொண்டுவந்து, மூன்று ஆண்டுகள் பாபிலோனிய மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாட்டின் காரியங்களைப் பற்றிய பயிற்சியளித்து, தன்னுடைய நாட்டின் பொறுப்புகளில் பணியமர்த்த ஆசைப்படுகிறார்.
இந்தப் பொறுப்பை, அதிகாரியான அஸ்பேனாசுவிடம் ஒப்படைத்து, பயிற்சி முடியும்வரை அரண்மனையிலிருந்தே இந்த வாலிபர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கிறார். அப்படிப் பிடிக்கப்பட்ட வாலிபர்களில் தானியேலும் ஒருவர்!
கடவுளின் மீது அன்பும், வைராக்கியமும் கொண்ட தானியேல், அரண்மனையி லிருந்து வருகிற உணவைச் சாப்பிட்டு தன்னை தீட்டுப்படுத்த விரும்பாமல், காய்கறி உணவை சாப்பிட விரும்பினார். எனவே, அதிகாரியிடம் விண்ணப்பம் செய்தார்.
பொதுவாக மன்னர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே வேத வாக்காகக் கொண்டு செயல்படுகிறவர்கள்தான் அரண்மனையில் அதிகாரிகளாக வேலை செய்ய முடியும். மேலும், தானியேலுக்கு உதவுவதால், மன்னனின் உத்தரவை மதிக்கவில்லை என்று யாராவது அரசரிடம் போட்டுக்கொடுத்துவிட்டால், தன் வேலைக்கே ஆபத்து வந்துவிடும் என்றெண்ணி தானியேலின் வேண்டுதலை ஏற்கத் தயங்கினார்.
ஆனாலும், தேவன் தானியேலுக்கு அதிகாரியின் கண்களில் தயவும் இரக்கமும் கிடைக்கச் செய்ததால் தானியேலின் கோரிக்கையை அதிகாரி ஏற்றுக்கொண்டார். இப்படியாக அடிமையாய் வந்த தானியேல், படிப்படியாக உயர்ந்து, அரசருக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டதை நாமறிவோம்!
ஆம்! தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, வைராக்கியமாய் நடந்தால், தடைபண்ணிக் கொண்டிருக்கிற அதிகாரிகளின் கண்களில் உங்களுக்குத் தயவு கிடைக்க தேவன் செய்வார். இந்த மாதமே கிடைக்கச் செய்வார்! கவலைப்படாதி ருங்கள்! சந்தோஷமாய் இருங்கள்! நீங்கள் எதிர்பார்த்திருக்கிற முடிவை உங்களுக்கு தேவன் தருவார். ஆமென்! ஆமென்!
“தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்” (தானியேல் 1:9) “And God made Ashpenaz sympathetic to Daniel”என்று சொல்லப்பட்டுள்ளது.
(வேலையை தக்க வைச்சுட்டாலே கோடி புண்ணியம்னு நினைக்கிறீங்களா? தேவன் Promotion யே தர வல்லவர்)