தேவ சத்தத்துக்கு கீழ்ப்படி

Written by Pr Thomas Walker

June 4, 2018

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

தேவன் மனிதனைப் படைத்தார். அவனுக்குத் தேவையானதை அவனை படைப்பதற்கு முன்னே சிருஷ்டித்தார். அவனுக்கு ஏதேன் தோட்டத்தை உண்டுபண்ணி அதில் வைத்து பராமரித்தார். பகலின் குளிர்ச்சியான வேளையில் ஒவ்வொரு நாளும் வந்து அவனிடம் பேசினார். மனிதனிடம் தேவன் எதிர்பார்த்தது அவருக்கு அவன் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிய வேண்டும் என்பதே. மனிதனுக்கு சுயவிருப்பம் செய்யும் தன்மை இருந்ததால் தேவனை அலட்சியப்படுத்தி தன் விருப்பத்தையே செய்ய ஆரம்பித்தான். முதல் மனிதனாகிய ஆதாம் தேவன் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. எனவே ஆதியாகமம் 3:8,9,10 வசனங்களில், “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்”. ஆதாமும் ஏவாளும் அந்நிய சத்தத்தைக் கேட்டதால் பிளவு ஏற்பட்டது.

எரேமியா 22:21 வசனத்தில் “நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயது முதல் நீ என் சத்தத்தைக் கேளாமற் போகிறதே உன் வழக்கம்”.

எரேமியா 11:3 வசனத்தில், “என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;” என்கிறார். தேவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது அவரின் சத்தத்தைக் கேட்டு அவர் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யவேண்டும் என்பதே. மனிதன் ஏன் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவது இல்லை என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

1) தன் விருப்பப்படி செய்ய வேண்டும், சுய கௌரவத்தைப் பார்த்து கீழ்ப்படிவது இல்லை:

யோனா தன் விருப்பப்படி தன் கௌரவத்தைப் பார்த்து நினிவேக்கு போகாமல், தர்சீஸ் பட்டணம் சென்றான். எரேமியா 42:5,22 வசனங்களில், “அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர். இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில் தானே பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்”.

2) சகல ஜாதிகளையும் போல வாழவேண்டும்:

1 சாமுவேல் 8:19 வசனத்தில் “ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல் அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்” என்றார்கள். ஜனங்கள் சாமுவேலுக்கு கீழ்ப்படியவில்லை. சகல ஜாதிகளைப்போல இருப்போம் என்றனர். ரோமர் 12:2 வசனத்தில், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” தேவன் தம் ஜனங்களை முழுவதும் (ஊடிவேசடிட) பண்ணி தன்னைச் சார்ந்து அவர்கள் வாழவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் ஜனங்கள் தன் விருப்பம்போல வாழ விரும்பி கீழ்ப்படியவில்லை. ஆண்டவரின் ஆளுகையில் 40 வருடம் பஞ்சமே இல்லாமல் வாழ்ந்தனர். அவர்கள் தங்களுக்கு இராஜாவை தேர்ந்தெடுத்தபின்பு பஞ்சத்தால் கஷ்டப்பட்டனர்.

3) ஜனங்களுக்கு பயந்து தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை:

1 சாமுவேல் 15:24 வசனத்தில், “அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்” என்றான். 1 சாமுவேல் 15:20 வசனத்தில் “சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம்பண்ணினேன்” என்றான். தேவன் ஆகாகைக் கொன்றுபோடும்படி கட்டளையிட்டார். ஆனால் சவுல் உயிரோடே வைத்தான். தேவனுக்கு செவிகொடுக்க வில்லை.

4) ஆபிரகாம் தேவனுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்தான்:

ஆதியாகமம் 22:18 வசனத்தில், “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்”. ஆபிரகாம் தேவனுடைய சொல்லுக்கு கீழ்ப்படிந்ததால் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் அவன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டது. அதினால் தேவன் அவன் பேரைப் பெருமைப்படுத்தினார்.

5) உபாகமம் 5:32 வசனத்தில்உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக”.

உபாகமம் 5:26,27 “நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ? நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்”.

தேவன் இஸ்ரவேல் மக்களிடம் நேரடியாகப் பேசினார். நேரடியாக அவர்களை ஆள விரும்பினார். மோசே தேவனிடம் கேட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பது தவறு. மேலும் மோசே கர்த்தரிடம் கேட்டதைச் சரியாக சொன்னான். ஆனால் பின்னால் வரும் தீர்க்கதரிசிகள் அப்படிச் சொல்லவில்லை, தவறாகிவிட்டது. யாத்.19:19 “எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்”. கர்த்தர் பேச விரும்பினாலும் ஜனங்களை அழிப்பாரோ என்று ஜனங்கள் பயந்தனர்.

6) தூக்கத்தினால் சத்தம் கேட்கவில்லை:

1 சாமு.3:10 வசனத்தில், “அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்”. தூக்கத்தினால் சத்தம் கேட்கவில்லை. தன் இருதயத்தை செவ்வைப் படுத்திய மனிதன் ஒருவனுமில்லை. ஆனால் கர்த்தர் ஆயத்தமாயிருந்தார். கோடான கோடி தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்ய இருந்தாலும் அவர் மனிதனிடம் நேரிடையாகப் பேச விரும்பினார். ஏலி தன் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை. எனவே கர்த்தரால் அவனிடம் பேசவில்லை.—– ஏலியின் பிள்ளைகள் பேலியாளின் மக்களாய் இருந்தனர். அன்னாள் நேர்ந்துகொண்டதால் சாமுவேலைக் கர்த்தர் தெரிந்துகொண்டார். ஏலி தேவனின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. 1சாமு.3:20,21 வசனங்களில், “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது. கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்”.

7) இருதயம் செம்மையாய் இருந்தால் தேவ சத்தம் கேட்கும்:

ஏசா.6:7-10 வசனங்களில், “…என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்”.

நம் இருதயம் செம்மையாய் இருந்தால்தான் தேவ சத்தம் கேட்கும். தேவ செய்தி கேட்கும்போது கீழ்ப்படியாவிட்டால் திரும்பவும் பேசமாட்டார். எரே.20:8,9,14,15 வசனங்களில் “நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக்கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று”. தன் கௌரவம் பாதிக்கப்படும் அளவு கீழ்ப்படிந்தான். தன்னையே சபித்தான்.

8) மாம்சத்தில் நடக்கும்போது தேவ சத்தம் கேட்காது:

வெளி.1:10 வசனத்தில், “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்”.

அன்பு நண்பரே! மனிதன் ஏதேன் தோட்டத்தில் இருக்கும்போதுதான் தேவ சத்தம் கேட்கும். தேவ சபையில் நிலைத்திருக்க வேண்டும் 1இராஜா.19:11-13 வசனங்களைப் பார்க்கும்போது, தேவன் அமர்ந்த மெல்லிய சத்தம் மூலம்தான் அதிகமான சந்தர்ப்பத்தில் பேசுகிறார். அப்.9:4,5 சவுலைப் போல இருதயக் கடினத்தில் வாழ்ந்தால் தேவ சத்தம் கேட்காது. தேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளை கவனமாய்க் கேட்டு அதின்படி வாழ்ந்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்! – அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This