கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் உலகை ஆளுகை செய்கிறார். அவரே உலகத்தையும், மனிதனையும் படைத்தவர். அவர் ராஜரீகம் செய்கிறார். அவருடைய ஆளுகை தலைமுறைதோறும் உள்ளது. தரியு ராஜா “தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கி பயப்பட வேண்டும். அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர். அவருடைய இராஜ்யம் அழியாதது. அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தம் நிற்கும்” என்கிறார். தேவன் எல்லா இராஜாக்களுக்கும் மேலாக அதிகாரம் உடையவர். அவரது ஆளுகை வானத்திலும் பூமியிலும் என்றென்றைக்கும் உள்ளது. ஆனால் பிசாசு அதிகாரங்களை துஷ்ப்பிரயோகம் செய்கிறான். தேவனுடைய மகிமையை பிசாசும், மனிதனும் எடுத்துக்கொள்கின்றனர். பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்றனர். நாம் தேவனுடைய அதிகாரத்தை மதித்து பயந்து, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
மேலும் ரோம.13:1-3 வசனங்களில் “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்” என்கிறார் பவுல். அதிகாரங்கள் நற்கிரியைகளுக்காக தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது. கணவனுக்கு அதிகாரம் பெற்றோருக்கு அதிகாரம், ஆசிரியருக்கு அதிகாரம், தேவனின் அதிகாரம் அவருக்குரிய இடம்(கனம்) வேறு யாருக்குமே கொடுக்கப்பட முடியாது. தேவனுடைய அதிகாரத்தை யாரும் எடுக்க முடியாது.
1) தேவனுக்கே முழு அதிகாரம் உண்டு:
ஏசா.14:12-15 வசனங்களில் லூசிபரை பற்றி கூறப்பட்டுள்ளது “…உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்” தேவனுடைய அதிகாரத்தை சாத்தான் எடுக்க முடியாது. சபை தேவனுடையது, ஆளுகை தேவனுடையது, சபையின் தலை ஆண்டவராகிய இயேசுவே, எல்லாவற்றையும் இயேசுவின் பாதத்தில் (எபே.1:20-23) கீழ்ப்படுத்தி…. தலையாக்கினார். கிறிஸ்துவின் இடத்தைப் பிடிக்கிறவனே அந்திகிறிஸ்து (மத்.24:5) வசனத்தில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிக்கிறார்கள். கிறிஸ்துவின் ஸ்தானம் விசேஷமானது. அதை பிடிக்கவே முடியாது. வெளி.19:16 வசனத்தில் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது”
2) வேத சத்தியத்தின் அதிகாரம்:
தேவனுடைய வார்த்தை விடுவிக்கும் தன்மையுள்ளது. ஜீவனுள்ளது (யோவான் 15:26, 1யோவான் 5:6) வசனங்களில் “பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்”
1யோவா.5:6 வசனத்தில்“இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்;… ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்” வேத வசனங்களின் மூலம் ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். 2தீமோ.3:16,17 வசனங்களில் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”
சங்.119:142, 157 வேதத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். உம்முடைய நீதி, நித்திய நீதி. உம்முடைய வேதம் சத்தியம். சங்.119:15 உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
1) வேதத்துக்கு முரணான கருத்துக்களை ஏற்க முடியாது.
2) 66 புஸ்தகங்களைத் தவிர சேர்க்கப்பட்ட புஸ்தகங்களுக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது.
3) பிரசங்கிக்கப்படும் வசனங்களை வேத வசனங்களுக்கு ஒத்து இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து, அப்படியே ஏற்க வேண்டும். (கலா.1:8, ஏசா.8:20, பிலி.2:9-11) ஏசா.8:20 கவனிக்க வேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. ஆண்டவர் வரும்போது எழும்பமாட்டார்கள். விடியற்காலத்து வெளிச்சம் கிடையாது. சங்.138:2 “…உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.”
3) மனச்சாட்சி அதிகாரமுடையது:
ரோம.12:12-16 வசனங்களில், “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” என்று குற்றமற்ற மனச்சாட்சியை காத்து நடக்க பவுல் ஆலோசனை கூறுகிறார். மனச்சாட்சியின்படி நடக்க வேண்டும். மனச்சாட்சி நம்மை குற்றப்படுத்த இடம் கொடுக்கக்கூடாது. உணவு, உடை விஷயத்தில் மற்றவரை குற்றப்படுத்தக் கூடாது.
4) சபைகளின் போதகர்களுக்கு அதிகாரம் உண்டு!
யோசு.1:8 “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்”
போதகருக்கு கீழ்ப்படிய வேண்டும். எபே.4:11 சபையை சீர்த்திருத்த, பரிசுத்தவான்கள் சீர்பொருந்த, நிறைவான வளர்ச்சியடைய போதகர்கள் அவசியம். எபி.13:17 “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்;” 2கொரி.5:20 அவர்கள் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் எனவே சபை போதகர்களின் அதிகாரத்துக்கு கீழ்ப்படிய வேண்டும்.
5) நல்ல பழக்கத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்:
பவுல் பிரதான ஆசாரியனை கடிந்துகொண்டபோது அவர் பிரதான ஆசாரியன் என்று தெரிந்ததும், உன் ஜனத்தின் அதிபதியை தீது சொல்லாதே என்று எழுதப்பட்டிருக்கிறதே என்று கூறினார். லாபான் மூத்தவள் இருக்க, இளையவளை கொடுப்பது இவ்விடத்தின் வழக்கமல்ல என்று கூறினார். எனவே ராகேலுக்கு பதிலாக லேயாள் கொடுக்கப்பட்டாள். பழக்கத்திற்கு மாறாக நாம் எதையும் செய்யக்கூடாது. அவரவர் இடத்திற்கு ஏற்றபடி ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய வேண்டும். மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
அன்பு நண்பரே! தேவனுடைய அதிகாரம் எல்லாவற்றிற்கும் மேலானது. அதற்கு கீழ்ப்படிய வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும். விசுவாசிகள் போதகருக்கு கீழ்ப்படிய வேண்டும். வேத சத்தியங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிய வேண்டும். மனசாட்சிக்கு கீழ்ப்படிய வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்.