கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் நியாயாதிபதி. அவர் பூமியையும், அதின் குடிமக்கள் மேலும் அன்புள்ளவர். அவர்கள் தண்டிக்கப்பட்டு, நரக தண்டனை அடையக்கூடாது என்று தன் சொந்தக் குமாரனையே பூமிக்கு அனுப்பினார். பூர்வ உலகத்தில் பாவம் செய்த மனிதர்களை அவர் தண்டித்தார். நாம் வானவில்லை பார்க்கும்போது எல்லாம், நாம் தேவனுடைய உடன்படிக்கையும் அவர் நோவா காலத்தில் முழு உலகத்தையும் தண்ணீரால் அழித்தார் என்றும் நினைவுகூற வேண்டும். மேலும் வருங்கோபத்திற்கு தப்ப வழியைத் தேடவேண்டும். தேவன் பூமியில் மனிதனை படைத்ததற்காக துக்கப்பட்டு, அவனை அழிக்க வேண்டும் என்று விரும்பினார். தேவன் மனிதனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். ஆனால் நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. (ஆதி.6:8)
பஞ்சக் காலத்திலும், ஆபத்து நேரங்களிலும், விபத்துகளிலும் நியாயத்தீர்ப்பு ஒரு பட்டணத்துக்கோ, ஒரு கிராமத்திற்கோ வரும்போது ஒரு சிலருக்கு மட்டும் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்து, அழிவிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள் எப்படி? ஏன்?
தேவனுடைய கிருபை கிடைக்க காரணம் என்ன? என்று பார்ப்போம்.
1) நோவா மற்ற மக்களைவிட வித்தியாசமாக இருந்தான்:
ஆதி.6:9ல் நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
ஆதி.7:1ஆம் வசனத்தில், “கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” என்றார். அந்த நாட்களில் மக்கள் எவ்வாறு காணப்பட்டனர்.
ஆதி.6:12ஆம் வசனத்தில், “தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.”
2) நோவா நீதிமானாயிருந்தான்:
அ) ஆதி.6:9ஆம் வசனத்தில், “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்” விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்ற வசனத்தின்படி விசுவாசத்தினாலே காணாதவைகளைக் குறித்து எச்சரிப்பை பெற்று தன் குடும்பத்தை ஆயத்தப்படுத்தினான்.
ஆ) உத்தமன்: சுயநீதியின்படி வாழாமல், தேவனைச் சார்ந்து வாழ்ந்தான். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களை விடுவிக்கும்படி கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” தேவன் நோவாவை உத்தமனாகக் கண்டுபிடித்ததால் அவனை ஆசீர்வதித்தார். அழிவிலிருந்து அவனையும், அவன் குடும்பத்தையும் தப்புவித்தார். கர்த்தரின் கண்கள் அவனைத் தவறவிடவில்லை.
3) நோவா தேவனோடு சஞ்சரித்தான்:
ஆதி.6:9ஆம் வசனத்தில், “நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” தேவனுடைய நடையைப் போல தன் நடையை மாற்றினான்.
சங்.15:1-5ஆம் வசனத்தில், “யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?” என்ற வசனத்தின்படி நோவா பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார். இயேசு எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமானவைகளைச் செய்ததால் அவர் அவரை தனியே இருக்க விடவில்லை. சிலுவையில் பிதாவின் முகம் இயேசுவுக்கு (உலக மக்களின் பாவத்தை சுமந்ததால்) மறைக்கப்பட்டபோது அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கேட்டார்.
4) நோவா தேவன் சொன்னதைக் கேட்டு அப்படியே கீழ்ப்படிந்தான்:
எபி.11:7ஆம் வசனத்தில், “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்” நோவா, காணாதவைகளைக் குறித்து எச்சரிப்பு பெற்றாலும், சாக்குபோக்கு சொல்லி தவிர்க்கவில்லை. மோசேயை அழைத்தபோது நான் திக்குவாயன், மந்த நாவுள்ளவன் என்று சாக்குபோக்கு சொன்னது போலச் சொல்லவில்லை.
ஆதி.6:22ஆம் வசனத்தில், “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்” ஆசரிப்புக் கூடாரத்திலும் மோசே கர்த்தர் கட்டளையிட்டபடி செய்துமுடித்தபடியால் மகிமை இறங்கிற்று.
5) வேறுபட்ட வாழ்க்கை:
ஆதி.7:1ஆம் வசனத்தில், கர்த்தர் நோவாவை நோக்கி: “நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” உலக நட்பு, சிநேகத்தை விட்டுவிட்டால் தான் தேவனை பிரியப்படுத்தி வாழ முடியும். நாமும் உலகத்தாருடன் இணைந்து காணப்பட்டால் வருகையில் காணப்பட முடியாது. மாறுபாடான உலக சிநேகத்தை விட்டுவிட வேண்டும். உலக நாகரீகத்தைப் பின்பற்றும்போது, தரக்குறைவான ஆவிக்குரிய நிலை பின்மாற்றம் ஏற்படும். உலக ஆடம்பரம் நமக்கு அதிக செலவு, கடன் பிரச்சனைக்கு கொண்டுபோகும். உலக மக்களை பின்பற்றாதே. தேவன் நம்மை மாறுபாடான உலக மக்களின் வழிபாடுகள், பழக்கவழக்கங்களிலிருந்து பிரித்து ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியாதபடி நாம் உலகத்தோடு கலந்து காணப்படக்கூடாது. தேவனுடைய கிருபையைப் பெற தேவனோடு சஞ்சரிக்க வேண்டும். உத்தமமான வாழ்க்கை வாழ வேண்டும். ஆபிரகாமைப்போல கூடாரவாசியாக வாழ்ந்து, தேவ இராஜ்யத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். லோத்து குடும்பம்போல பொருளாசைக்கு இடம் கொடுத்து, நஷ்டப்படக்கூடாது. லோத்து தன் காலத்தில் வாழ்ந்த மனிதர்களில் நீதிமானாயிருந்தாலும், ஜீவியத்தில் மாறுபாடான சந்ததியைவிட்டு தன்னை விலக்கிக்கொள்ள வில்லை. அது அவன் குடும்பத்துக்கு நஷ்டத்தைக் கொண்டுவந்தது.
அன்பு நண்பரே! தாவீது சங்கீதத்தில் இவ்வாறு கூறுகிறார், சங்கீதம் 16:8ஆம் வசனத்தில், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்கிறார். நோவா போல இந்த உலகத்தில் தேவனோடு சஞ்சரித்து, உத்தமமாய் நடந்து தேவக் கிருபையைப் பெற்று வரப்போகும் கோபாக்கினைக்கு தப்புவோம்! – அல்லேலூயா!