கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் மனிதனை நேசிக்கிறார். மனிதனோடு ஐக்கியமாக இருக்க விரும்புகிறார். அவன் உள்ளத்தில் வாசம் பண்ணி, அவனுக்கு அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தி செயல்படுத்த விரும்புகிறார். ஆனால், மனிதனோ தேவனைத் தேட வேண்டிய சமயத்தில் தேடுவதில்லை, பல சாக்குபோக்குகளைச் சொல்லி நிர்விசாரமாகவும், உணர்வில்லாமலும் மனம் போன போக்கில் வாழ்கிறான். “தேவனை தேடுகிற உணர்வுள்ள மனுஷன் உண்டோ? என்று தேவன் பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்க்கிறார்”. உன்னதப்பாட்டு 5:6 வசனத்தில் “என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை” ஏன்? இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன் தேடியும் மணவாட்டி அவரைக் காணவில்லை, ஏன்?
அவரை நோக்கிக் கூப்பிட்டால், பதிலில்லை ஏன்? என்று ஆராய்ந்து பார்ப்போம்.
உன்.5:2 வசனத்தில், “…என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.”
1. நேசர் நனைந்து நின்று தட்டும்போது கதவைத் திறக்கவில்லை:
தலை நனைந்திருக்கிறது. பனியல்ல நிர்விசாரத்தால் தூங்கிக் கொண்டிருக்கிறாய். வஸ்திரங்களைக் கழற்றினேன். பாதத்தைக் கழுவினேன். எப்படி நான் செய்யமுடியும்? என்று சாக்குப்போக்கு சொல்லுகிறாய். தூறலினால் தலை நனைந்து, பனியால் நனைந்து, களைத்து, உன் கதவைத் தேடி வந்தேன் என்றார். அசட்டைப் பண்ணப்பட்டார்.
சபை நடுவில் உலாவின தேவன் பின் சபையில் புறம்பாக்கப்பட்டதால் கதவைத் தட்டி நிற்கிறார். இதுதான் இன்று சபையின் நிலைமை. கதவை திறக்கும்படி நின்ற அவர் போய்விட்டபின், கதவைத் திறக்க எழும்புகிறோம்.
2. சுவிசேஷத்தை அறிவிக்க விருப்பம் இல்லை:
ஏசா.52:7ஆம் வசனத்தில், “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” சுவிசேஷம் அறிவிக்கிறவர்களின் பாதங்களை தேவன் அழகாக காண்கிறார்.
மத்.28:19,20 வசனங்களில், “…நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்” சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷம் அறிவிக்க ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
3. கர்த்தரைக் கண்டடையத் தக்க சமயத்தில் தேடவில்லை!
ஏசா.55:6 “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (உம்) பர்த்திமேயு குருடன் சுகம் பெறும்வரை விடவில்லை. ஆதி.6:3 “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை;” உன்னதப்பாட்டு 5:7ஆம் வசனத்தில் “நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;… நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்” ஆண்டவரைத் தேடும் சமயத்தில் தேடாவிட்டால் நஷ்டங்கள் ஏற்படுகிறது. மேன்மையை எடுத்துக்கொண்டார்கள்.
உன்.6:3ஆம் வசனத்தில் “நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்”
4. தேவன்மேல் விசுவாசமில்லை:
உபா.1:45 வசனத்தில் “நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை” இஸ்ரவேலர் கர்த்தரின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் துணிந்து மலையில் ஏறியபடியால் துரத்தியடிக்கப்பட்டார்கள். தேவன்மேல் விசுவாசம் இல்லை. சபை மனிதனின் மனமேட்டிமையினால் ஆளப்படாமல் தேவனுடைய வார்த்தையால் சபை ஆளப்பட வேண்டும். என் தேவன் என் பிரச்சனைகளைவிட பெரியவர், அவரால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை என்ற விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும்.
5. மற்றவர்கள் இடறுவதற்கு காரணமாயிருந்தால்:
1சாமு.14:24,27 நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும். எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் சொன்னான். ஜனங்களில் ஒருவராக எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள். யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை. அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி அதின் நுனியினாலே தேன் கூட்டைக் குத்தி அதை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டான். அதினால் அவன் கண்கள் தெளிந்தது. சவுல் மற்றவர்கள் இடறி விழுவதற்கு காரணமாக இருந்தான். அதனால் பதிலில்லை. ஜனங்கள் இரத்தத்தோடு பலியை புசிக்க சவுல் காரணமாயிருந்தான்.
6. தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாததினால் தேவ சத்தம் கேட்கப்படவில்லை:
1சாமு.28:6ஆம் வசனத்தில், “சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை”
சவுல் தேவனுடைய சத்தத்துக்கு கீழ்ப்படியாததினால் தேவ சத்தம் கேட்கப்படவில்லை. குறிகேட்கப் போனான், பின் வாங்கினான்.
சூனேமித்தி நேசரை தொடர்ந்து சென்று கிரயம் செலுத்தி, விடாமல் தேடி தேவனைப் பற்றி சாட்சி கூறி நஷ்டங்களைச் சகித்து தொடர்ந்து முன்னேறித் தேடிக் கண்டுகொண்டாள்.
அன்பு நேயரே! நாமும் நேசரை அலட்சியப்படுத்தாமல் அவரை கண்டடையத்தக்க சமயத்தில் தேடுவோம். அவர் சத்தத்திற்கு கீழ்ப்படிவோம். அப்பொழுது தேவன் நமக்கு செவிகொடுப்பார்.




