புத்தாண்டு புதிய காரியம்

Written by Pr Thomas Walker

January 21, 2007

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்” ஏசாயா 43:19 என்பது இந்த புதிய வருடத்தின் வாக்குத்தத்தமாயிருக்கிறது.
புதிய காரியத்தையே தேவன் செய்கிறார். வனாந்தரத்தில் வழியை உண்டாக்கவும், அவாந்தர வெளியில் ஆறுகளை உண்டாக்கவும் தேவன் வல்லவராயிருக்கிறார்.


தேவன் செய்த பல புதிய காரியங்களைக் குறித்து வேதாகமம் எடுத்துரைக்கிறது. தமது ஜனமாகிய இஸ்ரவேலரை வழிநடத்துவதற்காக செங்கடலையும், யோர்தான் நதியையும் இரண்டாகப் பிளந்தார்; இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்த எகிப்தியர் மேல் பத்து விதமான வாதைகளை வரப்பண்ணி இஸ்ரவேலரை விடுவித்தார்; அவர்களை வனாந்தரத்திலே மன்னாவினால் போஷித்தார்; கன்மலையைப் பிளந்து தண்ணீரைப் புறப்படப் பண்ணினார். தமது தீர்க்கதரிசியாகிய எலியாவைக் காகங்களைக் கொண்டு போஷித்தார். தமது தீர்க்கதரிசிகளைக் கொண்டு பல அற்புதங்களை செய்தார். தாம் இந்த உலகத்தில் வாழ்ந்த காலங்களில் இயேசுகிறிஸ்துவும் பல அற்புத அடையாளங்களைச் செய்தார். இன்றும் செய்துகொண்டிருக்கிறார்.


தேவன் புதிய காரியத்தை செய்வார் என்று நாம் விசுவாசிக்கும்போது, அது நமக்குள்ளே தோன்றுகிறது. நாம் தேவனை எந்த அளவு விசுவாசிக்கிறோமோ, அந்த அளவு புதிய காரியம் நம் வாழ்வில் தோன்றும். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் தேவன் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார் (எபே.3:20). அவிசுவாசம், பயம், வாழ்க்கையில் ஏற்படும் குறைவுகள் தேவனை நாம் முழுமையாக விசுவாசிப்பதை தடைசெய்கிறது. தேவன் வனாந்தரமான வாழ்க்கையில் வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்க வல்லவராயிருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும்.
புதிய காரியம் தோன்ற நமது இருதயம் புதிதாக்கப்பட வேண்டும். தேவனால் கழுவப்பட்ட சுத்தமான இருதயம் நமக்கு வேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது புது சிருஷ்டியாயிருக்கிறோம். புது சிருஷ்டியிடம் புதிய தரிசனம் உண்டாகிறது. தேவ பிள்ளையாக மாறாத பட்சத்தில் நாம் தேவனிடமிருந்து எதையும் பெற முடியாது.
தேவன் நம்முடைய வாழ்வில் புதிய காரியத்தை செய்ய அவர் மாற்றும் மூன்று முக்கிய காரியங்களை நாம் பார்ப்போம்.

முதலாவதாக – “அடிமைத்தனத்தை மாற்றிபுதிய காரியம் செய்வார்
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே அடிமைகளாக இருந்தார்கள். தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டார் (யாத்.6:5). அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது (யாத்.2:23). இஸ்ரவேல் புத்திரரை தேவன் தமது ஓங்கிய கையினாலும் மகா தண்டனையினாலும் மீட்டு விடுவித்தார் (யாத்.6:6). தமது பலத்த கையினால் மீட்டார் (யாத்.13:3). நம்மையும் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் போதுமானவராயிருக்கிறார். அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை தேவன் நமக்குக் கொடுக்கிறார் (ரோமர் 8:20). பாவத்திற்கு அடிமையாயிருந்த நம்மை தமது விலையேறப் பெற்ற இரத்தத்தினால் மீட்டு, “அப்பா பிதாவே” என்று கூப்பிடத்தக்கதாக தமது குமாரனுடைய ஆவியை நமக்குத் தந்து, அடிமைத்தனத்திலிருந்து மீட்டு புத்திரனாக்கி விட்டார் (கலா.4:6). பாவம் செய்து மரண பயத்தினால் அடிமையாயிருக்கும் நம்மை விடுவிக்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார் (எபி.2:14,15). அவரை நாம் முழுமையாக விசுவாசிக்கும்போது புதிய காரியத்தை தேவன் செய்கிறார்.

இரண்டாவதாக – “நிந்தையை மாற்றிபுதிய காரியம் செய்வார்
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இருந்த நிந்தையை புரட்டிப் போட்டார் (யோசுவா 5:9). இஸ்ரவேலர் கர்த்தருக்கு விரோதமாக மீண்டும் அக்கிரமக் கிரியைகளை செய்தபடியால் தேவன் அவர்களை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் விற்றுப்போட்டார். அவன் அவர்களை பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டுபோனான். அங்கே அவர்கள் நிந்தையை அனுபவித்தார்கள். எருசலேம் நகர அலங்கங்கள் இடிக்கப்பட்டு பாழாய் கிடந்ததை நினைத்து அழுதார்கள். தேவன் அவர்களுக்கு இருந்த நிந்தையை மாற்றினார். நெகேமியா என்ற தமது தாசனை எழும்பச் செய்து எருசலேம் நகர அலங்கத்தை 52 நாட்களுக்குள் கட்டி முடிக்க உதவிசெய்தார் (நெகேமியா 6:15). யோபு தன் சிநேகிதரால் நிந்திக்கப்பட்டான் (யோபு 12:4; யோபு 19:3). தேவன் அவன் நிந்தையை மாற்றி அவன் முன்னிலையைப் பார்க்கிலும் பின்னிலையை ஆசீர்வதித்தார் (யோபு 42:12). தாவீது மனுஷரால் மிகவும் நிந்திக்கப்பட்டான் (சங்.22:6). தேவன் அவனை இஸ்ரவேல் அனைத்தின் மேலும் ராஜாவாக உயர்த்தி புதிய காரியம் செய்தார். தேவன் நம் வாழ்விலும் நிந்தைகளை மாற்றி புதிய காரியம் செய்வார். ஆனால் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகளை நாம் பாக்கியமாக எண்ண வேண்டும்.

மூன்றாவதாக – “சிறையிருப்பை மாற்றிபுதிய காரியம் செய்வார்
“உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று உபா.30:3ல் வாசிக்கிறோம். பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்ட இஸ்ரவேலரை விடுவிக்கும்படி தேவனாகிய கர்த்தர் புறஜாதியானாகிய பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸின் ஆவியை ஏவினார் (எஸ்றா 1:1). அவன் இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தது மாத்திரமல்ல, தேவனுடைய ஆலயத்தை புதுப்பிக்கும்படி இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கைகளை கொண்டுவர வேண்டுமென்று உற்சாகப்படுத்தினான் (எஸ்றா 1:4). இவ்வாறாக இஸ்ரவேலரை விடுவிக்கும்படி தேவன் ஒரு புதிய காரியத்தை செய்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார் (யோபு 42:10). பிசாசின் சிறையிருப்பில் அழிந்துகொண்டிருக்கும் ஜனங்களுக்காக மன்றாடும் போது கர்த்தர் நம் சிறையிருப்பை திருப்புவார். வியாதியாகிய சிறையிருப்பை முற்றிலும் மாற்றுவார் (சங்.41:3). கடக்க முடியாத பிரச்சனைகளாகிய சிறையிருப்பை கடக்கப் பண்ணுவார்.


இதை வாசிக்கும் அருமையான தேவப் பிள்ளைகளே! இப்புத்தாண்டில் உங்கள் வாழ்வில் ஆண்டவர் மாற்ற விரும்பும் காரியங்களை பரிபூரணமாய் மாற்றியமைக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். மேலும் தேவன் நம் வாழ்வில் புதியக் காரியத்தை நிறைவாய் செய்யவும் நமது வாழ்க்கை மலைமேல் இருக்கும் பட்டணமாய் வெகு ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக அமையவும் கிருபை தருவாராக.

.






Author

You May Also Like…

Share This