கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனை துதித்து, போற்றி, ஆராதிப்பதற்கே மனிதனை தேவன் படைத்தார். மனிதனோ பிசாசின் தந்திர வலையில் விழுந்தான். தேவனோடுள்ள ஐக்கியத்தையும், அன்பையும், உறவையும் இழந்து ஏதேனின் வாழ்வையும் இழந்துவிட்டான். இன்றைக்கும் தேவன் நம்மை ஆவியோடும், உண்மையோடும் மனிதன் ஆராதிக்க வேண்டும் என விரும்புகிறார். இஸ்ரவேலரை தேவன் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலையாக்கி வனாந்திரம் வழியாய் நடத்தினார். மோசே மூலம் அவரை ஆராதிக்கக் கற்றுக்கொடுத்தார்.
“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” என்று எதிர்பார்த்தார். ஆனால் மோசே மலைக்குச் சென்று 40 நாட்கள் கழித்து வருவதற்குள் பொன் கன்றுக்குட்டியை ஆராதிக்க ஆரம்பித்தனர். கர்த்தர் பக்கம் நின்ற லேவி கோத்திரத்தையே தேவன் ஆசாரிய ஊழியத்துக்குத் தெரிந்தெடுத்தார்.
புது ஏற்பாட்டு காலத்தில் தேவன் நம் ஒவ்வொருவரையும் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருடைய சொந்த ஜனமாகவும் சபைகளில் வைத்திருக்கிறார்.
சபைகளில் நாம் தேவனை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் ஆராதித்து மகிமைப் படுத்த வேண்டும். அசைவில்லாத இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கிறவர்களாகிய நாம் பயத்தோடும், பக்தியோடும், தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்ய தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பாக்கிறார். God needs true worshipers.
சகரியா 14:17ல், “அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை” என்று கூறகிறார்.தேவனைத் தொழுதுகொள்ள வராதவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை, வானத்தின் பலகணிகள் அடைக்கப்படும். ஆராதனை முக்கியம்.
1. எங்கும் பிதாவை ஆராதிக்கலாம்:
யோவான் 4:21 வசனத்தில், “அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது” என்றார். எங்கும் யூதர்கள் பிதாவைத் தொழுதுகொள்ளலாம் என்று கூறப்பட்டபோது, யூதர்களில் ஒரு பகுதியினர் அந்நிய ஜாதி மக்களை மணந்து, அந்நிய தேவர்களை வணங்கி தன்னைத் தீட்டுப்படுத்திக் கொண்டனர். அவர்கள்தான் சமாரியர்கள்.
2. அறியாததைத் தொழுதுகொள்ளக் கூடாது:
நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம். ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது என்று இயேசு கூறுகிறார்.
3. ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை செய்:
“உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயி ருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்” (யோவான் 4:23).
கி.பி.1970க்குப் பிறகு வரங்கள் பற்றிய முக்கியத்துவம் பற்றி பிரசங்கித்தனர். 1980க்குப் பிறகு ஆராதித்தல் பற்றிய முக்கியம் சபைகளில் வலியுறுத்தப்பட்டது.
அநேக சபைகளில் போதிய ஆவிக்குரிய நிலையில் மனிதர்கள் தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கவில்லை. எனவே போதிய பலன் சபைகளில் இல்லை. ஆவிக்குரிய தன்மையும் வளர்ச்சியும் இல்லை.
4, எகிப்தில் ஆராதனை இல்லை:
யாத்.8:1 வசனத்தில், “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு” என்று சொல்லச் சொன்னார். ஆபிரகாமின் சந்ததியார் எகிப்தில் அடிமைப்பட்டு, தேவனைத் தொழுதுகொள்ளாமல். எனவே ஜனங்களை அடிமை வாழ்விலிருந்து விடுதலை செய்தார். மோசே மூலம் அற்புதங்களைச் செய்து தேவனைத் தொழுதுகொள்ள அவர்களை வெளியே கொண்டுவந்தார்.
சத்துருவானவன் சபைகளில் நுழைந்து அராதனைகளைத் தன் பக்கம் திருப்புகிறான். எங்கும் மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வில்லையோ அங்கு அவன் ஆராதனையையும் துதியையும் அனுபவித்து, மகிழுகிறான். நொறுங்குண்ட இருதயம், பணிந்த ஆவியுடன் மக்கள் தொழுதுகொள்ளாவிட்டால் சத்துருவானவன் அந்த ஆராதனைகளில் பிரியப்படுகிறான்.
அன்பு நண்பரே! தேவனை ஆராதிக்கும் ஜனம் உண்மையாய், பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கையுடனும் பரிசுத்த ஆவியின் வல்லமையில் நிறைந்து ஆவியோடும் உடைந்த உள்ளம், பணிந்த ஆவியுடனும் தொழுதுகொண்டால் தேவன் நம் ஆராதனைகளில் பிரியப்படுவார். சுகந்த வாசனையான பலியாக ஏற்று மகிழுவார். ஆமென்!