ஒரு கல்லூரியில் மிகப்பெரிய செல்வந்தனாகிய ஒரு இளம் வாலிபன் படித்துக் கொண்டிருந்தான். அவன் வெகு நாட்களாக கல்லூரியின் அருகில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஸ்போர்ட்ஸ் காரை (Sports car) மிகவும் விரும்பினான். அவனுடைய தந்தைக்கு அந்தக் காரை வாங்கித் தர முடியும் என்று அவனுக்குத் தெரியும். எனவே, பட்டமளிப்பு விழாவிற்கு அந்தக் காரை வாங்கித் தருமாறு கேட்டான். பட்டமளிப்பு நாளும் நெருங்கியது. அவனுடைய தந்தையிடமிருந்தோ காரை வாங்கித் தருவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.
பட்டமளிப்பு நாள் காலையில் அவன் தந்தை அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டியை பரிசாக வழங்கினார். ஆர்வத்துடன் அந்தப் பெட்டியைத் திறந்தான். ஒரு அழகிய வேதாகமம் அந்தப் பெட்டியில் இருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தான். மிகுந்த கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான். அதன்பின்பு அவன் வீடு திரும்பவில்லை.
வருடங்கள் கடந்தன. அந்த வாலிபன் ஒரு பெரிய தொழிலதிபராக மாறினான். நல்ல குடும்ப வாழ்வும் அமைந்தது. ஒருநாள் அவனுக்கு தன் வயதான தந்தை இறப்பதற்கு முன்பு அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவன் அதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது அவனுடைய தந்தை இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. அவனுடைய தந்தை சொத்து முழுவதையும் தன் மகன் பேரிலேயே எழுதி வைத்திருந்தார்.
அவன் தன் தந்தையின் வீட்டை நெருங்கியபோது சோகம் அவன் இருதயத்தைப் பற்றியது. முக்கியமான புத்தகங்களுக்குள்ளே அவன் தந்தை பட்டமளிப்பு நாளில் அவனுக்கு வழங்கிய அந்த அழகான வேதாகமம் புதிதாக பிரிக்கப்படாமல் இருந்தது. கண்களில் கண்ணீருடன் வேதாகமத்தைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தான். அவன் தந்தை “…பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையான வைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” மத்.7:11 என்ற வசனத்தை அடிக் கோடிட்டிருந்தார். திடீரென ஒரு புத்தம் புதிய சாவி வேதாகமத்தின் அட்டைப் பகுதியிலிருந்து விழுந்தது. அந்த சாவியில் அவனுடைய பட்டமளிப்பு நாளுக்கான தேதியும், காருக்கு பணம் செலுத்திய ரசீதும் இருந்தது. அவனை மீளாத் துயர் ஆழ்த்தியது.
அநேக முறை நாமும் இந்த வாலிபனைப் போல தேவனுடைய ஆசீர்வாதங்கள் நாம் எதிர்பார்த்த விதத்தில் வராதபோது தடுமாறி விடுகிறோம். தேவனுடைய சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேற நாம் ஒப்புக்கொடுப்போமா?



