கர்த்தரின் நாமம்

Written by Pr Thomas Walker

August 21, 2006

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்” என்று சங்.20:7ல் பார்க்கிறோம். பிதாவானவர் மிகச் சிறந்த ஈவாக, சிறப்பான நன்கொடையாக தம்முடைய நேச குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நமக்குக் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:16). அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள் (யோவான் 1:12). இயேசு என்ற நாமத்திற்கு ‘மீட்கிறவர்’ அல்லது ‘இரட்சிக்கிறவர்’ என்று பொருள் (மத்.1:21).
வேறு பல நாமங்களும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு உண்டு. “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” என்று ஏசாயா 9:6ல் பார்க்கிறோம். மேலும் சர்வ வல்லமையுள்ள தேவன் (யாத்.6:3); கர்த்தர் (யாத்.15:3); சேனைகளின் கர்த்தர் (ஏசாயா 48:2); நமது நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே.23:6); தேவனுடைய வார்த்தை (வெளி.19:13) என்கிற நாமங்களும் நம்முடைய தேவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.


நாம் மேன்மைபாராட்ட வேண்டியது ‘இயேசுவின் நாமத்தைக்’ குறித்து மாத்திரமே. உளையான சேற்றிலிருந்து நம்மைத் தூக்கி இரட்சித்த அந்த நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும். நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமம், எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் (பிலி.2:10,11). தேவனுடைய நாமத்தினால் உண்டாகும் நன்மைகளை நாம் இங்கு பார்க்கலாம்.

முதலாவதாக கர்த்தரின் நாமம் – இரட்சிக்க வல்லமையுள்ளது
இயேசுவின் நாமம் ஒரு மனிதனை பாவத்திலிருந்து விடுவிக்கிறது. மூடப் பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், துர்ச்சுபாவங்கள், நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்றவற்றிலிருந்து விடுவிக்கிறது. இரட்சிப்பு என்ற வார்த்தை இயேசுவின் நாமத்தில் அடங்கியுள்ளது. “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1கொரி.1:31). இயேசு ஆயக்காரனாகிய சகேயுவின் வீட்டில் பிரவேசித்தபோது அவன் வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது (லூக்.19:9). மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் இயேசுவின் நாமத்தில் பிரசங்கிக்க வேண்டியது நமது கடமை (லூக்.24:47). இரட்சிக்கப்படுவதற்கு அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை என்று அப்.4:12ல் பார்க்கிறோம். இயேசுவின் நாமம் நம்மை பாவ சாப ரோகங்களிலிருந்து விடுவிக்கிறது.

இரண்டாவதாக – கர்த்தரின் நாமம் – சர்வாங்க சுகத்தைத் தருகிறது
பேதுருவும், யோவானும் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்தவனை இயேசுவின் நாமத்தில் எழுந்து நடக்கச் செய்தனர் (அப்.3:6). “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” என்று யாக்.5:14,15ல் வாசிக்கிறோம். இயேசுவின் நாமத்திற்கு சர்வாங்க சுகத்தை அளிக்க வல்லமை உண்டு என்று விசுவாசிக்கும்போது தேவன் கிரியை செய்கிறார் (மத்.9:27-29). இயேசுவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதை நமக்குச் செய்ய வல்லவராயிருக்கிறார் (யோவான் 14:14). நோய்களை உண்டாக்கும் சாபங்களை இயேசுவின் நாமம் நீக்குகிறது. நமது பாவத்தினாலே சாபங்கள் நமக்கு உண்டாகிறது. இயேசு நமது பாவங்களை, சாபங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தார்.
மூன்றாவதாக – கர்த்தரின் நாமம் ஜெயத்தைக் கொடுக்கிறது
கோலியாத் சிறுவயதிலேயே யுத்தவீரன். பராக்கிரமமும், பெலனும் உள்ளவன் என்பதை தேவன் அறிவார். தாவீது சிறுவயதுமுதல் ஆடுகளை மேய்த்து வந்தவன்; யுத்தத்திற்கு பழக்கமற்றவன், ஆயுதம் தரிக்காதவன். இதுவும் தேவனுக்குத் தெரியும். ஆனால் கோலியாத்திடம் இல்லாத மாபெரும் வல்லமை தாவீதிடம் இருந்தது. அதுதான் ‘கர்த்தருடைய நாமம்’. தாவீது கோலியாத்திடம் “நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” (1சாமு.17:45) என்று கூறகிறான். கர்த்தருடைய நாமத்திலே ஜெயத்தையும் பெற்றுக் கொண்டான் (1சாமு.17:50). பாவத்தை, தீமையை, பொல்லாத மனிதர்களை ஜெயிக்க தேவனின் நாமம் நமக்குத் தேவை. யுத்தமும், ஜெயமும் கர்த்தருடையது. நாமோ கர்த்தருடைய நாமத்தை ஆயுதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமது உண்மையான எதிரி பிசாசு. அவனை ஜெயிக்க இயேசுவின் நாமமே தேவை. நாம் விடுவிக்கப்பட்ட பின்பே மற்றவர்களை விடுவிக்க முடியும்.

நான்காவதாக – கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
“கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” என்று நீதி.18:10ல் வாசிக்கிறோம். ஆபத்து வேளைகளில், துன்ப நேரங்களில், அவரே நமது துருகம். அதற்குள் ஓடி சுகமாயிருக்கலாம். நீதிமான்களாய் இருந்தால் மாத்திரமே அவரது நாமம் நமக்குத் துருகமாக, அடைக்கலமாக இருக்கும். “நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்” (சங்.61:3) என்று தாவீது பாடுகிறான். தாவீதுக்கு எப்பக்கத்திலும் நெருக்கம். அவன் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தபடியால் கர்த்தர் ஆபத்து காலத்தில் அவனுக்கு துருகமாயிருந்தார். கர்த்தருடைய ஆலோசனைகளைத் தள்ளுகிறவர்களை கர்த்தரும் ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விடுவார் (நீதி.1:25,26).


ஐந்தாவதாக கர்த்தரின் நாமம் – அற்புதங்களைச் செய்ய வல்லமையுள்ளது
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்யும் நாமம் (அப்.4:30). இயேசு அற்புதங்களைச் செய்தபோது அநேகர் அவரை விசுவாசித்தார்கள் (யோவான் 2:23). இயேசுவின் நாமத்தை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள். நவமான பாஷைகளை பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது சொஸ்தமாவார்கள் (மாற்.16:17,18). இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நாம் விசுவாசிக்கும்போது அடையாளங்களும், அற்புதங்களும் நம் மூலம் நடைபெறுகிறது. அதனால் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. நம் மூலம் அற்புதங்களை நடப்பிக்கிறவர் நமக்குள்ளேயும் அற்புதங்களை நடப்பிக்கிறவராய் இருக்கிறார் (கலா.3:5).


கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட இஸ்ரவேலரை அற்புதமாக வனாந்தரத்திலே நடத்தி வந்தார். நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்து நமது வாழ்க்கையிலும், ஊரிலும், தேசத்திலும் தமது நாம மகிமைக்காக அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.


நாம் அவருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும்போது அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார் (யாத்.20:24); உயர்த்துகிறார். மேன்மைபாராட்டவல்ல கர்த்தருடைய நாமத்தை மேன்மை பாராட்டி அவருடைய நாமத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோமாக. பரிசுத்தமில்லாமல் தேவனைத் தரிசிக்க முடியாது. இயேசுவின் நாமத்தில் பயனடைய பரிசுத்தமே இன்றியமையாதது. நம்மை சுத்திகரித்துக்கொண்டு அவருடைய நாமத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோமாக.






Author

You May Also Like…

Share This