பல ஆண்டுகள் முன்பாக, நான் என்னுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த விடுப்பு நாட்களில், என்னுடையத் தகப்பனார், என்னை அழைத்து, சேலத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த, என்னுடைய மூத்த சகோதரனைப் பார்த்து வரும்படி அனுப்பினார்கள்.
நான் சேலம் சென்று என்னுடைய சகோதரனைக் கண்டு, பின்பு சில நாட்கள் அங்கு தங்கியிருந்தேன். ஒரு நாள் காலை நேரத்தில்… என்னுடைய சகோதரன் ஊழியத்தின் நிமித்தம் வெளியே சென்றிருந்த சமயத்தில்… ஒரு அழகான, உயரமான இனிய தோற்றமுடைய வாலிபன், சற்று சோர்வாக, எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். மேலும் என்னுடைய சகோதரனின் சபைக்கு, புதிதாய் வந்துகொண்டிருந்த ஒரு மூதாட்டியின் பேரன், கட்டிடவியல் பொறியாளர்.
வாலிபன் என்னிடம் வந்து, “பாஸ்டர் இருக்கிறாரா? என்றுக் கேட்டார்? நான் அவரிடம், பாஸ்டர் ஊழியத்திற்காக, வெளியே சென்றிருக்கிறார். இரவில் தான் வருவார் என்றுக் கூறினேன்”
அவர் என்னிடம் வந்து, தனக்கு தீராத தலைவலி இருப்பதாகவும், அதற்காக, அவனுடைய பாட்டி, அவரை “பாஸ்டரிடம் ஜெபித்து வரும்படி அனுப்பியதாகவும்” கூறினார். நான் அவரை இரவில் வரும்படி சொல்லி அனுப்பினேன்… சற்று தூரம் சென்றவர் மீண்டுமாகத் திரும்பிவந்து “நீங்கள் யார்” என்றுக் கேட்டார்.
நான் அவரிடம் “பாஸ்டரின் தம்பி” என்றுக் கூறினேன். அவர் உடனே அப்படியானால் நீங்களே எனக்காக ஜெபியுங்கள் என்றுக் கேட்டார். நானோ, அப்படியல்ல, பாஸ்டர் தான் இதற்காக ஜெபிப்பார் என மறுத்தேன். அவரோ விடாப்பிடியாய் என்னை ஜெபிக்கும்படி வற்புறுத்தினார். நானும் சரியென ஒப்புக்கொண்டு, அந்த வாலிபரை முழங்காற்படியிடச் சொல்லி, என்னுடையக் கையை அவரது தலையில் வைத்து ஜெபிக்க ஆரம்பித்தேன். திடீரென அவருடையத் தலை வேகமாக ஆட ஆரம்பித்துவிட்டது… நான் கண் திறந்து பார்த்தபோது அவர் பிசாசின் போராட்டத்தால், கொடூரமாக ஆடிக்கொண்டிருந்தார்.
நானோ இளைஞன். என்னுடைய பெற்றோர் அநேகம் பிசாசுகளை விரட்டுவதைப் பார்த்திருக்கிறேன்… ஆனால் நான் பிசாசுகளை அதுவரை விரட்டியதில்லை. அதே நேரத்தில் அந்த வாலிபனை வெறுமையாய் அனுப்ப எனக்கு மனமுமில்லை. ஒருவழியாக, தொடர்ந்து ஜெபித்து அந்த வாலிபனுக்கு இருந்த அசுத்த ஆவிகளின் வல்லமையை இயேசுவின் நாமத்தில் விரட்டிவிட்டேன்.
வாலிபனும் மிக்க சந்தோஷமாக தலைவலி முற்றிலும் குணமடைந்து விட்டதாகக் கூறி கடந்துசென்றார். பிசாசுகள் விரட்ட, பிரத்யேகமாக வரம் என நான் ஒன்றும் பெற்றுக்கொள்ள வில்லை. ஆனால் “இயேசு என்ற நாமத்தில்” நாம் செல்லும்போது பிசாசின் படைகள் நடுங்கி ஓடுவதைக் காணலாம். இதைத்தான் நம்முடைய ஆண்டவர்…
மாற்கு 16:17ல் “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்;…” எனக் கூறுகிறார்.
தேவையோடு ஜனங்கள் ஏராளம் ஏராளம் உண்டு. விசுவாசத்தினால் எங்கும் புறப்பட்டுச் செல்வோம். கர்த்தர் நம்மோடு கூட இருந்து, கிரியையை நடப்பித்து, நம்மால் நடக்கும் அடையாளங்களினாலே அவருடைய வசனத்தை உறுதிப்படுத்துவார். விசுவாசிக்கும் அநேகர் இரட்சிக்கப்பட்டு, ஆக்கினைக்குத் தப்ப முடியும், பரலோகம் அவர்களில் வெகுவாய் மகிழும்.