பிரியமானவர்களே, மனுக்குலம் முழுவதும் தேவனால் படைக்கப்பட்டிருந்தாலும் தேவன் எல்லாரையும் ‘என் ஜனங்கள்’ என்று அழைப்பதில்லை. “என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று எரேமி.31:14ல் வாசிக்கிறோம். தாவீது நாம் அவருடைய ஜனம் என்கிறார். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தாறுமாறாக ளஓடவோ, நடக்கவோ, புசிக்கவோ, பார்க்கவோ, கிரியை செய்யவோ முடியாது. தேவ ஜனங்கள் விடுவிக்கப்பட்டவர்கள்; அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டவர்கள் (1பேதுரு 2:9). தம் ஜனங்களாக இருக்கும்படி தேவன் நம்மை அழைத்தார். இயேசு இதற்காக கிரயம் கொடுத்திருப்பதால் இயேசுவினிடமே பிதாவினால் வரவழைக்கப்பட்டுள்ளோம். ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வருவதற்கு முன்பு இருளில், அந்தகாரத்தில் சாத்தானுக்கு அடிமைகளாக இருந்தோம். அடிமையாக இருந்தவர்களை தேவன் விடுவித்தார்.
எகிப்து என்பது பாவ வாழ்க்கையைக் குறிக்கிறது. எகிப்திலிருந்துகொண்டு தேவ ஜனமாக இருக்க முடியாது. அடிமையாக இருந்துகொண்டு தேவ பிள்ளையாக இருக்க முடியாது. “எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு” என்று தேவன் கூறுவதாக, மோசே பார்வோனின் சமூகத்தில் கூறினான். (யாத்.9:1)
தேவனால் அழைக்கப்பட்ட தேவப் பிள்ளைகள் எகிப்தில் இருந்துகொண்டு தேவனை ஆராதிக்கவே முடியாது. எகிப்திலிருந்து 3 நாட்கள் நடக்கிற தூரமளவு நடந்து சென்றுதான் தேவனை ஆராதிக்க முடியும். பாவ மன்னிப்பின் இரகசியத்தை எகிப்தில் அறிய முடியாது. பாவத்திற்கு ஒரு முடிவு கட்டாமல், பாவத்தை வெறுக்காமல் தேவனை ஆராதிக்க முடியாது. பாவத்தோடு, பாவத்தில் நிலைத்திருந்து தேவனை ஆராதிக்க முயற்சிப்பது தோல்வியைக் கொண்டுவரும். நமக்கு ஒரு தேசத்தை பிதா வாக்குப் பண்ணியிருக்கிறார். நாம் இந்த உலகத்திலே அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து தேவனை ஆராதிக்க வேண்டும்.
தேவ பிள்ளைகள் செய்யும் சில காரியங்களை தேவன் அங்கீகரிப்பதில்லை. ஆனால் சமுதாயம் அங்கீகரிக்கிறது. இப்படிப்பட்ட பாவங்களை விட்டோய வேண்டும். ஆபிரகாம் தேவ சித்தத்திற்கு விரோதமாக, பஞ்ச காலத்தில் எகிப்திற்கு சென்றதால் ஆகார் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டாள். இஸ்மவேல் பிறந்தபோது உலகம் ஆபிரகாமை பாராட்டியிருக்கலாம். ஆனால் தேவனுடைய திட்டம் அதுவாயிருக்கவில்லை. தேவன் வாக்குத்தத்தம் பண்ணியது ஈசாக்கையே. இஸ்மவேலுக்கும் இஸ்ரவேலுக்கும் இன்றுவரை யுத்தம் நடக்கிறது. (ஆதி.16:1; ஆதி.12:1-20)
பரிசுத்தமாய் ஜீவிக்காவிட்டால் தேவன் தம் ஜனமாய் இராதபடி நம்மைப் புறக்கணிப்பார்.
தேவன் தன் ஜனங்களை எப்படி அழைக்கிறார் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக என் ஜனங்கள் – உடன்படிக்கையின் ஜனங்கள் (எபி.8:10)
உடன்படிக்கையின் ஜனங்களாகிய தேவ ஜனங்களிடமே தேவன் தமது பிரமாணங்களைக் கொடுக்கிறார். இரண்டு நாடுகள் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்? என்று உடன்படிக்கை செய்து கொள்கின்றன. அந்த உடன்படிக்கையிலிருந்து அவர்கள் மீற முடியாது. நம்மோடு உடன்படிக்கை பண்ணின பரமபிதா தாம் உடன்படிக்கையிலிருந்து ஒருபோதும் மாறமாட்டார். இஸ்ரவேலர் 400 வருடங்கள் எகிப்தியரை சேவிப்பார்கள், அதன்பின் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆபிரகாமுடன் தேவன் உடன்படிக்கை பண்ணினார் (ஆதி.15:13). இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார் என்று (யாத்.2:24ல்) வாசிக்கிறோம். 400 வருடங்களுக்கு பின்பு இஸ்ரவேலர் பார்வோனிடமிருந்து தேவனால் விடுவிக்கப்பட்டனர். ‘என் ஜனங்கள்’ என்று தேவனால் அழைக்கப்படுபவர்கள் உடன்படிக்கையை உடையவர்கள் மட்டுமல்ல, தேவ பிரமாணத்தை உள்ளத்தில் வைத்து அதன்படி நடக்கவேண்டியவர்கள். தம்முடைய புண்ணியங்களை அறிவிக்கவே தேவன் நம்மை தம்முடைய பிள்ளையாக மாற்றினார் (1பேதுரு 2:9). ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் நாம் தேவனோடு உடன்படிக்கை செய்துகொள்கிறோம் (கலா.3:26,27). உடன்படிக்கையின் ஜனங்களாகிய நாம் அவருக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக என் ஜனங்கள் – எனக்கு சொந்தமானவர்கள் (1பேதுரு 2:9)
நாம் அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீக ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் ‘அவருக்கு சொந்தமான’ ஜனமாயும் இருக்கிறோம். அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கவேண்டியது நமது கடமை. இயேசு இந்த உலகத்திற்கு மனித அவதாரம் எடுத்து வந்தபோது அவருக்கு சொந்த ஜனமாகிய யூத ஜனத்தாரிடம் வந்தார். ஆனால் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இரட்சிப்பு புறஜாதியாரிடம் கடந்துசென்றது (யோவான் 1:11). புறஜாதியாராகிய நாம் இரட்சிக்கப்படுவதன் மூலம் அவரது சொந்த ஜனமாக மாறியிருப்பது அவர் நம்மேல் வைத்த சுத்த கிருபை. அவருக்கு சொந்தமானவர்களாகிய நாம் அவருடைய மகிமைக்கு புகழ்ச்சியாக மீட்கப்படுவோம் என்று (எபே.1:14ல்) வாசிக்கிறோம். நாம் அவருக்கு சொந்த ஜனங்களாக மாறும்படி அவர் தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)
மூன்றாவதாக என் ஜனங்கள் – நற்கிரியை செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்கள் (தீத்து 2:14)
நாம் நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நற்கிரியைகளைச் செய்வதில் நாம் சோர்ந்துபோகக் கூடாது. சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும், கனத்தையும், அழியாமையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் என்று (ரோமர் 2:7ல்) வாசிக்கிறோம். நற்கிரியைகளை செய்வதற்காகவே கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவற்றில் பெருகுகிறவர்களாக இருக்க வேண்டும் (2கொரி.9:8; எபே.2:10). மொரேவியன் சகோதரர்கள் ஒரு தீவுக்கு சென்று கூலி வேலை செய்து, பல நற்கிரியைகளையும் செய்து, அநேகரை கிறிஸ்துவண்டை நடத்தினார்கள். நம்முடைய தேசத்திற்கு வந்த அநேகம் மிஷனெரிகள் வைராக்கியமுள்ளவர்களாய் எவ்வளவு நற்கிரியைகளைச் செய்தார்கள். அதன்மூலம் கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டினார்கள். அன்னை தெரசாவை இதற்கு முன் உதாரணமாகக் கொள்ளலாம். நாம் எந்த நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும் (தீத்து 3:1), தகுதியுள்ளவர்களாயிருக்க வேண்டும் (2தீமோ.3:16), ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்க வேண்டும் (தீத்து 3:8), நாம் ஏவப்பட வேண்டும் (எபி.10:24). தொற்காள் என்னும் ஸ்திரீ அநேக நற்கிரியைகளையும், தான தர்மங்களையும் செய்துவந்தாள் என்று (அப்.9:36ல்) வாசிக்கிறோம். நமது அருமை இரட்சகராம் இயேசுவும் நற்கிரியை செய்கிறவராக இந்த உலகத்தில் சுற்றித் திரிந்தார் (யோவான் 10:32). அவருடைய ஜனங்களாகிய நாமும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து நற்கிரியைகளைச் செய்வோமாக.
தேவ ஜனங்களாகிய நாம் அவருக்குப் பிரியமாய் நடந்து தேவாசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோமாக!