2011ஆம் ஆண்டு, ஒடிசாவிலிருந்து சாலமோன் குமார் என்ற இளைஞன், புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவன் தான் பெற்ற மெய் சமாதானத்தை, தன்னுடைய “தேசியா இன மக்கள்” அனைவரும், பூரணமாய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்தோடு, தீவிரமாய் உழைக்க ஆரம்பித்தான். அவனுடன், அவனுடைய 3 நண்பர்களும் இந்த லட்சியப் பயணத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை ஆதரிக்க எவரும் முன்வர வில்லை. இவர்கள் குடும்பங்களோ பரம ஏழைகள், இயேசுவை அறியாத ஜனங்கள். இச்சூழ்நிலையில், எவரோ ஒருவர், “ஏலீம் மிஷனரி இயக்கத்தைப் பற்றி” இவரிடம் கூறவே இவர் உதவி தேடி நம்மிடம் வந்தார். இவருக்கு பண உதவி தேவையென்றாலும் இவர் பெரிதும் நாடி வந்தது “ஜெப உதவியும், ஐக்கியமுமே”.
நாம் இந்த சகோதரனை ஏற்றுக்கொண்டு, இவரையும், இவருடன் பணிபுரியும் 3 சகோதரர்களையும், பிரதிஷ்டை செய்து அனுப்பி வைத்தோம். சில மாதங்களில், சகோதரன் என்னைத் தொடர்புகொண்டு 2011 நவம்பர் மாதத்தில் ஒடிசா மாநிலத்தில், நவ்ரங்பூர் பகுதியில், அவர் நடத்த விரும்பும் “சுவிசேஷ கூட்டத்திற்கு” செய்தியாளராக வரும்படி என்னை அழைத்தார்.
நமது இயக்கம், ஒடிசா மாநிலத்தில் பல்லாண்டு காலமாக இயங்கி வந்தாலும், நவ்ரங்பூர் பகுதி நமக்கு புதிது. மேலும் அந்தப் பகுதியில் எப்படிப்பட்ட எதிர்ப்பு இருக்கும் என்பதை சரிவர, கணிக்க இயலாத சூழ்நிலையில்தான் தனியாக அங்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நவ்ரங்பூர் செல்லும் வழியில் தேவ கிருபையில் கோராபுட் பேருந்து நிலையத்தில், ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் ஊழியம் செய்து வந்த, நமது ஊழியர்கள் ராஜ் ரத்னபாணி மற்றும் ராஜேந்திர நிலப்பு ஆகியோரை சந்தித்தேன். அவர்கள் பேருந்து கிடைக்காமல் காலையிலிருந்து, மதியம் வரை காத்திருந்தவர்கள். நாங்கள் மூவருமாக கோராபுட்டிலிருந்து, நவ்ரங்பூர் செல்லும் வழியில் தேநீர் அருந்தும்படி, வழியிலிருந்த ஜெய்பூர் என்ற இடத்தைச் சென்றடைந்தோம். அங்கே “சித்தார்த் லிம்மா” என்ற இளைஞன் ஒரு “கூரியர் நிறுவனம்” நடத்திக்கொண்டு, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு சில இளைஞர்களை ஊழியத்தில் உற்சாகப்படுத்துவதையும், தானும் ஒரு திருச்சபையை நடத்துவதையும் கண்டு பிரமித்தேன். ஏனெனில் அவரும்கூட புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர்.
மேலும் இந்த இளைஞர் படையை, CMC வேலூரில் படித்த Dr.சவுத்ரி என்ற முதிர் வயதான மருத்துவர், ஒரு மிஷனரியின் மகன், வழி நடத்துவதைக் கண்டு பூரிப்படைந்தேன். இந்த மருத்துவர், அநேக கிராமங்களில் பலருக்கு மருத்துவ உதவிகள் வழங்கியது மட்டுமல்லாது, மருத்துவ பயிற்சிகளையும் கொடுத்து “கிறிஸ்துவின் அன்பை பிரதிபலித்தவர்” தன்னுடைய சொந்த இடத்தில், தன்னுடைய தகப்பனார் பெயரில், ஆலயம் ஒன்றினைக் கட்டி, சித்தார்த் லிம்மாவிற்குக் கொடுத்திருக்கிறார்.
பின்பு நாங்கள் புறப்பட்டு “நவ்ரங்பூர்” சென்றடைந்தோம். அங்கே நமது சகோதரர்கள், ஊருக்கு வெளியே, காட்டுப் பகுதியில் கூடாரங்கள் அமைத்து “சுவிசேஷக் கூட்டங்களை” ஆயத்தம் செய்திருந்தனர். நமது ஊழியர்களும், அவர்கள் குடும்பங்களும், “3 மாத காலமாக” உபவாசித்து, தங்கள் ஆஸ்திகளையெல்லாம் செலவழித்து, அல்லும் பகலும் உழைத்து, 300க்கும் மேற்பட்ட ஜனங்களை அந்தக் காட்டுப் பகுதியில் கூட்டிச் சேர்த்திருந்தனர். வந்த ஜனங்களில் பெரும்பாலானோர் இயேசுவை அறியாதவர்கள்.
முதல்நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். மறுநாளில், அந்த மாவட்டத்திலுள்ள அனைத்து திருச்சபைகளும் தங்கள் ஆராதனையை ரத்துசெய்துவிட்டு, அனைத்து விசுவாசிகளையும் இந்த இடத்திற்கு அழைத்து வந்தனர்.
ஞாயிறு காலை ஆரம்பித்த ஆராதனை இரவு 11.00 மணி வரை தொடர்ந்தது. தேவ செய்தியைக் கேட்ட ஜனங்கள், ஆவியில் அகமகிழ்ந்து தங்கள் சொந்த மொழியான “தேசியா” மொழியில் பாடி மகிழ்ந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் உணவு, உறைவிடம், பாதுகாப்பு போன்ற வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டு வந்ததையும் கண்டேன்.
18 மாதங்கள் கழிந்த நிலையில், இன்று நமது இயக்கத்தில் “40 ஊழியர்கள்” நவ்ரங்பூர் மற்றும் ஜெய்பூர் பகுதிகளிலிருந்து நம்முடன் இணைந்துள்ளனர்.
இந்த ஆண்டு இவர்கள், இந்த மாவட்டங்களிலுள்ள 765 கிராமங்களுக்கு சென்று “சிறுவர் கோடைகால வேதாகமப் பள்ளி மூலம் (CSBS) 32,000 சிறுவர்களுக்கு இயேசுவின் அன்பினைக் காட்டியிருக்கிறார்கள்.
50 ஆசிரியர்கள் மற்றும் 150 தன்னார்வத் தொண்டர்கள் இரவும், பகலுமென, 2 மாதங்கள் எந்த சன்மானமும் இல்லாமல் உழைத்திருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஜுன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற “நிறைவு நாள் நிகழ்ச்சியிலே” 1000க்கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு கிராமங்களிலிருந்து, சொந்த செலவில் வாகனங்கள் அமர்த்திக்கொண்டு வந்து, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அவர்களுக்கு முகாம் நடத்தி, இயேசுவோடு உறவுகொள்ளும்படி செய்தும் விட்டார்கள்.
நாம் இவர்களைத் திட்டமிட்டு, தெரிவு செய்யவுமில்லை. சிறுவர் வேதாகமப்பள்ளி நடத்த நினைக்கவுமில்லை. இந்த ஊழியத்தில் ஈடுபட்ட அநேகர், சிறுவர் வேதாகமப் பள்ளி போன்ற காரியங்களையும் பார்த்ததுகூட கிடையாது.ஆனாலும் இவர்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். தன்னுடைய “அறுப்பினைச் சேர்த்திட தன்னுடைய அறுவடையாளரை தகுதிப்படுத்தி அனுப்பிட வல்லவர்” நாம் அவருடைய கரத்தின் கிரியைகள்.
“நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்…” (லூக்கா 17:10)