“ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்” (மத்தேயு 6:38)
தேசத்திலே ஊழியம் செய்கிற திரளான ஊழியர்களுக்காக, நடைபெறும் ஊழியங்களுக்காக கர்த்தரைத் துதிப்போம். எத்தனை ஊழியர்கள் இருந்தாலும், நமது தேசம் இன்னும் இயேசுவை அறியவில்லை. அறுப்பு மிகுதி, வேலையாட்கள் கொஞ்சம். அறிவிக்கப்படாவிட்டால், ஒருவரும் இயேசுவை அறிய முடியாது. இயேசுவை அறிவிக்கும் பொறுப்பை நமது கைகளில் கொடுத்துள்ளார். எனவே, நாம் இயேசுவை, நற்செய்தியை, இயேசுவின் வருகையை அறிவிக்க வேண்டும். இந்த நற்பணியைச் செய்ய கர்த்தர் பணியாட்களை அனுப்ப வேண்டும் என ஜெபம் பண்ண வேண்டும்.
இது கடைசி காலம். இயேசுவின் இரட்சிப்பின் செய்தியையும், அவருடைய வருகையின் செய்தியையும் அறிவிக்க வேண்டும். எனவே, இந்த பணிக்கு நாமும் கீழ்ப்படிவோம். தேவன் அநேகம் பணியாளர்களை எழுப்ப நாம் கர்த்தரிடத்தில் ஜெபிப்போம். கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை, பொறுப்பை ஆர்வத்தோடு செய் வோம். இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபம். அவருடைய வருகைக்கு முன்பாக, திரளான ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள, நாம் பாரத்தோடு ஜெபிப்போம்.
இயேசு வாசற்படியிலே நின்று தட்டுகிறார்
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளி.3:20)
இயேசு கிறிஸ்து நமது இருதயத்தின் வாசல் கதவைத் தட்டுகிறார். நமது இருதயத்தின் கதவைத் திறக்க வேண்டும். நமது இருதயத்திலே இயேசுவுக்கு இடம் தரத்தக்கதாக, நமது இருதயத்தை கழுவ வேண்டும். நமது பாவங்கள் நீங்க கழுவப்படும்போது, இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் வாசம் பண்ணுவார். எல்லாவற்றைப் பார்க்கிலும், இருதயமே திருக்குள்ளதாய் இருக்கிறது என வேதம் கூறுகிறது. மனிதனுடைய இருதயத்திலிருந்து பலவிதமான பாவங்கள் புறப்படுகிறது என்று வேதம் கூறுகிறது.
“எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்” (மத்.15:19)
இயேசு கிறிஸ்துவை நம் இருதயத்திற்குள் அழைக்கத் தக்கதாக, இருதயத்தை சுத்திகரிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை கழுவி சுத்திகரிக்கும். அப்பொழுது, இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் வந்து வாசம் பண்ணுவார்.