ஜெப மாதிரி – மார்ட்டின் லூத்தர்

Written by Susila Walker

April 23, 2021

“கிறிஸ்துவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறேன்” என்று வீரமுழக்கம் செய்த ஜெபவீரர்தான் மார்ட்டின் லூத்தர். அவர் தன் ஊழிய வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயினும் ஜெபத்தினால் தேவ வல்லமையைப் பெற்று தேவனுக்கென்று வல்லமையாய் ஊழியம் செய்தார்.


ஹன்ஸ் லூத்தர் என்ற செப்பு சுரங்கத் தொழில் அதிகாரிக்கும், மார்கரெட் அம்மையாருக்கும் மகனாக 1483ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிறந்தார். மார்ட்டின் லூத்தர் சிறுவயதிலேயே சிறந்த ஞானமுள்ளவராக விளங்கினார். மார்ட்டினுக்கு எட்டு வயதாகும்போது ஹன்ஸ் லுத்தர் மேன்ஸ்பெல்ட் நகரவை உறுப்பினராகிவிட்டார். கல்வியறிவில் ஆர்வம் கொண்ட அவர் பல அறிஞர்கள் அவர் வீட்டுக்கு வந்து அவரோடு உரையாடினர். அறிஞர்கள் பேச்சு சிறுவன் மார்ட்டின் உள்ளத்தில் கல்வியார்வத்தை வளர்த்தது. சுரங்கத் தொழிலாளிகள் புனித ஆன் அம்மையாரைக் குல தெய்வமாக வணங்கி வந்ததால் மார்ட்டின் வீட்டிலும் அவரையே வணங்கி வந்தனர். லூத்தரின் தந்தைக்கு சொந்தமான செம்பு சுரங்கம் இருந்தது.


பதினான்கு வயதானபோது மக்டெபர்க் என்னும் நகரிலுள்ள பள்ளியில் மேற்படிப்புக்காக சேர்ந்தார். அங்கு பிரான்சிஸ்கள் துறவிகளைக் கண்டு வியப்படைந்தார். இளவரசனாக இருந்த ஒரு இளைஞன் தன்னையே வெறுத்து இந்த சந்நியாச மடத்தில் சேர்ந்து பிச்சையெடுத்து, தம்மைத் தாழ்த்தி துறவற வாழ்வு வாழ்ந்ததைக் கண்டு தானும் சந்நியாசியாக வாழ முடிவு எடுத்தார். தகப்பனாரோ மார்ட்டின் ஒரு அரசு வக்கீலாக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, துறவற வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
கல்லூரி படிப்பிற்கான செலவுகளை தானே சம்பாதித்துக் கொண்டார். தந்தையாரின் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. லூத்தர் தெருக்களில் இசைக் கருவிகளுடன் பாடல்களைப் பாடிச் சென்றார். அவ்வேளையில் உருசுலா என்ற தாயார் அவரை தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். அவர் வீட்டில் 5 ஆண்டுகள் தங்கித் தன் முதுகலைப் பட்டத்தை எர்பர்ட் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.


பல்கலைக்கழக நூலகத்தில் இலத்தீன் மொழியில் உள்ள வேதாகமத்தைக் கண்டுபிடித்தார். அந்நாட்களில் வீடுகளில் வேதாகமங்களைப் பார்க்கவே முடியாது. வேதத்தில் உள்ள சத்தியங்கள் அவர் அக கண்களை திறந்தது. அன்னாளின் ஜெபமும் ஆண்டவர் சிறுவன் சாமுவேலோடு பேசும் நிகழ்ச்சியும் லூத்தரின் உள்ளத்தைத் தொட்டு அவரைப் புது மனிதனாக ஆக்கின. 1505ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டமும் தத்துவப் பண்டிதர் பட்டமும் ஒருசேரப் பெற்றார். பின்னர் 1508ஆம் ஆண்டு க்ஷ.னு.பட்டமும், 1512ஆம் ஆண்டு லூத்தர் இறையியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.


ஜெபத்தின் வல்லமையை உணர்ந்துகொண்ட மார்ட்டின் தனக்குக் கிடைத்த நேரத்தையெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்பதிலும், அவர் பேசுவதற்காக சாமுவேலைப் போல “கர்த்தாவே, சொல்லும் அடியேன் கேட்கிறேன்” என்று வாஞ்சையோடு காத்திருப்பதிலும் செலவிட்டார். படிப்பு, வேத வாசிப்பு, ஜெபம் இவற்றைத் தவிர வேறு எதிலுமே அவர் அக்கறை காட்டவில்லை. பின்னர் எர்பர்ட்டில் உள்ள புனித அகஸ்டின் துறவியர் மடத்தில் இணைந்து உபவாசித்து ஜெபிக்கும் உண்மையான துறவியாகவே இருந்தார்.


போப் பத்தாம் லியோ அறிமுகப்படுத்திய பாவ மன்னிப்பு சீட்டு பாவ மன்னிப்பிற்காகக் கொடுக்கப்பட்டு வந்தது. அவரவர் பாவங்களுக்கு ஏற்றார் போலவும் இறந்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு சீட்டு கொடுக்கப்பட்டது. இதனால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டது; பாவமன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் அன்றி இல்லையென்பதை மக்கள் அறியாதவர்களாக இருந்தனர்.


1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி மார்ட்டின் லூத்தர் பாவமன்னிப்புச் சீட்டை எதிர்த்து விட்டன்பர்க் ஆலயத்தின் கதவிலே தம்முடைய 95 நியாயங்களை எழுதி தொங்கவிட்டார். அதுவே சீர்திருத்த திருச்சபைகளுக்கு வித்திட்ட திருநாள். போப் தவறு செய்யாதவர் என்னும் கொள்கையை மறுத்து, பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் போப்பிற்கு இல்லை என்று முழங்கினார். “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” – கிரியைகளினால் அல்ல, என்று முழங்கி லூத்தர் அநேக போராட்டங்களையும், நிந்தனைகளையும் சந்தித்தார். ஆனாலும் சற்றும் மனந்தளராது ஜெபத்தினால் அனைத்து பிரச்சனைகளையும் மேற்கொண்டார். பின்னர் லூத்தர், கேத்ரின் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவர் லுத்தருடைய ஊழியத்தில் உறுதுணையாய் இருந்தார். 1534ஆம் ஆண்டு வேதாகமம் முழுவதையும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்து முடித்தார்.


மார்ட்டின் லூத்தர் “எனக்கு மிகுந்த அலுவல் இருப்பினும் மூன்றுமணி நேரம் ஜெபிக்காமல் நான் ஒன்றும் செய்வதில்லை” என்கிறார். லூத்தரை தேவன் உபயோகிக்க காரணம் அவருடைய ஜெப வாழ்க்கையே. தனது நேரத்தில் பெரும் பகுதியை கிறிஸ்துவோடு நேருக்குநேர் பேசி ஜெபிப்பதிலேயே கழித்தார். இத்தகைய ஜெப வாழ்வே அவருடைய வாழ்க்கையின் பல பிரச்சனைகளை திட விசுவாசத்தோடு சந்திக்கும் மன வலிமையை அவருக்கு அளித்தது. லூத்தர் 350 நூல்களுக்கு மேலாக எழுதி அச்சிட்டு வெளியிட்டுள்ளார். சத்திய வேதாகமத்தை ஆதாரமாகக் கொண்டு நூல்கள் எழுதி மக்கள் மனதில் எழுப்புதலை உண்டாக்க அரும்பாடுபட்டார். அநேக அருளுரைகளையும் எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் மிகவும் புகழ் வாய்ந்தது ஞானோபதேச வினா விடையாகும்.
அவரது இடைவிடாத ஜெபத்தால் தனது வாழ்நாளிலேயே தனது சபையின் (புராட்டஸ்டன்டு) சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெற்று ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பரவி கனி கொடுப்பதைக் காணும் பாக்கியம் பெற்றார். இவர் தனது 63ஆம் வயதில் 1546ஆம் ஆண்டு தான் நேசித்த ஆண்டவரண்டை சேர்ந்தார். அவர் உடல், எந்த ஆலயத்தில் 95 நியாயங்களை ஆணி அறைந்து ஒட்டினாரோ, அதே ஆலயத்தில் பிரசங்க பீடத்தினடியில் அடக்கம் செய்யப்பட்டது.


“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17)






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This