“என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” 1யோவான் 3:18 என்ற வசனத்தை விளக்கும் ஓர் உண்மைச் சம்பவம் இது.
ஒரு ஊரில் இரண்டு விவசாயிகள் இருந்தனர். இருவரும் மலைச்சரி விலிருந்த தங்கள் விளைநிலத்தில் பயிரிட்டனர். முதல் விவசாயி சற்று மேடான தனது நிலத்தில் பயிரிட்டிருந்தார். இரண்டாம் விவசாயியின் நிலமோ முதல் விவசாயியின் நிலத்திற்கு அடுத்து சற்று தாழ்வான பகுதியில் அமைந்திருந்தது. இரண்டாவது விவசாயியும் தனது நிலத்தைப் பயிரிட்டிருந்தார். முதல் விவசாயி ஒரு நல்ல கிறிஸ்தவர். அவர் தனது நிலத்திற்கு தினமும் நீர் பாய்ச்சுவார். இரண்டாவது விவசாயி முதலாவது விவசாயியின் வரப்பிலிருந்து தனது நிலத்திற்கு தண்ணீர் பாயும்படியாக வரப்பில் ஒரு திறப்பை உண்டாக்கினார். எனவே முதல் விவசாயி தன் நிலத்திற்கு பாய்ச்சும் தண்ணீர் இரண்டாம் விவசாயியின் நிலத்திற்குப் பாய்ந்தது. இதனால் முதல் விவசாயி மிகவும் வருத்தமுற்றார். முதல் விவசாயி ஒரு நல்ல கிறிஸ்தவராயிருந்த படியால் இரண்டாம் விவசாயியோடு எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை.
முதல் விவசாயி நேராக தன் போதகரிடம் சென்று ஆலோசனை கேட்டார். அதற்கு அந்தப் போதகர், “நீங்கள் அந்த விவசாயியோடு எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் தொடர்ந்து உங்கள் நிலத்திற்கு எப்பொழுதும் போல் நீர் பாய்ச்சுங்கள்” என்றார். அந்த விவசாயியும் போதகர் தனக்கு சொன்னபடியே செய்தார். வாரங்கள் உருண்டது. இரண்டாம் விவசாயி தொடர்ந்து முதல் விவசாயியின் வரப்பிலிருந்து தனது விளை நிலத்திற்கு தண்ணீர் பாயும்படி செய்துகொண்டிருந்தார்.
இதனால் மிகவும் மனமுடைந்த முதல் விவசாயி நேராக போதகரிடம் சென்று, “ஐயா நான் நீங்கள் சொன்ன முறையைப் பின்பற்றினேன். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை” என்றார். போதகர் விவசாயியைப் பார்த்து, “நீங்கள் இந்த முறை உங்கள் பக்கத்து தோட்டத்திற்கும் சேர்த்து நீர் பாய்ச்சுங்கள்” என்றார். போதகர் சொன்னபடியே முதலாவது விவசாயி இரண்டாம் விவசாயியின் நிலத்திற்கும் சேர்த்து நீர்பாய்ச்சினார். முதல் மூன்று நாட்கள் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை. மூன்றாம் நாள் காலையில் இரண்டாம் விவசாயி முதல் விவசாயியிடம் ஓடோடி வந்து, “நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவது எப்படி?” என்றார்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்.5:44) என்று நமதாண்டவர் கூறிய வார்த்தைகளைக் கருத்தில் கொள்வோமாக!