கேயோவின் பெற்றோர் பிரான்ஸிஸ் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவள் இரண்டரை வயதிலேயே கன்னிகள் மடத்தில் விடப்பட்டு வளர்க்கப்பட்டாள். நான்காம் வயதில் மாண்ட்பாசன் சீமாட்டி தன்னோடு அவளை வைத்துக்கொண்ட காலத்தில் கேயோ மனந்திரும்பாதவர்கள் அடையப்போகும் துன்பத்தைப் பற்றிய தரிசனம் ஒன்று கண்டாள். அதுமுதல் கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும் என்று எண்ணலானாள். 10 வயது சிறுமியாக இருக்கும்போது சில காலம் டாமினிக்கன் மடத்திலும் உர்ஸலா பயிற்சி சாலையிலும் கழித்தாள். அப்போது யாரோ விட்டுச் சென்ற வேத புஸ்தகம் ஒன்று கேயோ கரத்தில் கிடைத்தது. ஆவலோடு இரவும் பகலுமாக வாசித்தாள். முக்கிய பகுதிகளை மனப்பாடம் செய்துகொண்டாள்.
பதினான்கு வயதில் தன் சொந்த வீட்டிற்கு வந்தாள். சௌந்தரியமுள்ள பெண்ணாகக் காணப்பட்டாள். தாயார் அழகிய ஆடைகளை வாங்கி கொடுத்தார்கள். கேயோவுக்கு கிறிஸ்துவின் மேலுள்ள பற்று மறையலாயிற்று. லௌகீக காரியங்கள் கேயோவை மேற்கொண்டது. இத்தருணத்தில் கேயோவின் இனத்தினரில் ஒருவர் மிஷனரியாக சீனாவுக்கு போகும் வழியில் கேயோவின் பெற்றோரை சந்திக்க வந்தனர். கேயோ தன்னைப் பற்றிய எண்ணத்தால் அழ ஆரம்பித்தாள். தனது குறைகள் பெரிதாக காணப்பட்டது. அதுமுதல் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் சமாதானம் பெறவும் குற்றம் செய்தவர்களிடம் மன்னிப்பு பெறவும், ஏழைகளைச் சந்தித்து உதவி செய்யவும் அதிகமாக வேதத்தை வாசித்து ஜெபிக்கவும் முயன்று வந்தாள். தாமஸ் கேம்பிஸ் எழுதிய கிறிஸ்துவின் முன்மாதிரி நூலை கற்று வந்தாள்.
கேயோவின் பெற்றோர் பாரீஸ் பட்டணத்தில் குடியேறினர். அங்குள்ள ஐசுவரியமுள்ள ஜேக்குயஸ் என்பவர் கேயோவை மணம் புரிய விரும்பியதால் கேயோவின் பெற்றோர் திருமணம் செய்துகொடுத்தார்கள். 16 வயதில் 38 வயது வியாதிப்பட்ட புருஷனுடன் வாழலானாள். பல உபத்திரவங்கள் வந்தன, மாமியார் கல்லாத கடின மனதுடையவர், தேவன் ஆத்தும நலனுக்காக துன்பமென்னும் குகையில் விட்டிருப்பதாக கேயோ எண்ணினாள். இயேசுவோடு இடைவிடாமல் இசைந்திருந்தாள்.
துன்பங்கள் தொடர்ந்து வரலாயிற்று. ஆஸ்தியில் பெரும்பகுதி நஷ்டம் அடைந்தது. மாமியாரின் கொடுமைகள் அதிகரித்தது, தாயார் மரணமடைந்தார்கள். அடுத்து சகோதரி மரணம் அடைந்தாள். இவ்வாறு பல துன்பங்கள் மத்தியில் தேவனையே சார்ந்து நின்றாள். புனித பிரான்ஸின் வாரிசைச் சார்ந்த துறவி ஒருவர் கேயோவைச் சந்தித்து விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதைப் பற்றியும், ஜீவ விசுவாசத்தைப் பற்றியும் கேள்விப்பட்டாள், தேவ அன்பு அவளைப் பற்றிக்கொண்டது. இருதயம் பூரண மாறுதலடைந்தது. கிறிஸ்து அவள் இருதயத்தில் வாசம் பண்ணுவதை உணர்ந்தாள். கேயோ தனது 20 வயதில் கிறிஸ்துவின் இரட்சிப்பைக் கண்டறிந்தாள். தெய்வீக அன்பென்னும் தைலம் அவளைப் பெலப்படுத்தியது. ஒரு பூரண மாறுதலுண்டாகியது. அதன்பின் ஜெபிக்கும் பழக்கமுள்ளவளானால் தேவனோடு மகிழ்ந்திருக்கக் கற்றுக்கொண்டாள். ஜெபத்தை மிக இன்பமாகக் கண்டாள். தொடர்ந்து தனது மகன், கணவன் ஆகியோரின் மரணம் அவளை மிகவும் துன்பத்துக்குள்ளாக்கியது.
வாகோம் என்ற குரு ஒருவருடைய ஆலோசனையை நாடி சேர்ந்து உபவாசித்து ஜெபித்தாள். ஒரு புதிய அனுபவம் பெற்றாள். பரிசுத்த ஆவியானவரின் நிறைவைப் பெற்று சொல்லி முடியாத சந்தோஷம் பெற்றாள். தேவ சித்தம் தவிர சுயசித்தம் நொறுங்கிப் போனது. பூரண விடுதலை பெற்றாள். பரிசுத்த ஆவியின் நிறைவினால் நிரப்பப்பட்டாள். தன்னிடம் வருகிற யாவருக்குமே இரட்சிப்பையும் பரிசுத்தத்தையும் எடுத்துக்காட்டி அநேகரைத் தேவனிடம் வழிநடத்தலானாள். திரள் திரளான ஜனங்கள் அவளைப் பார்க்க வந்துகொண்டிருந்தனர்.
பாரீஸ் பிரதம அத்தியட்சர் பெனனன் என்பவர் கேயோவின் வல்லமை நிறைந்த ஜெபங்களால் ஆழ்ந்த அனுபவத்திற்குள் பிரவேசித்தார். எங்கும் ஜனங்கள் பரிசுத்த ஜீவியம் செய்யத் தலைப்பட்டனர். குருமார் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 14ஆம் லூயி அரசன் ஒடுக்கி அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கேயோவை சிறையில் அடைத்தார். அவளது விரோதிகள் நஞ்சிட்டு கொல்ல முயற்சித்தனர். உயிர் தப்பினாலும் 7 ஆண்டுகள் நோயுற்றவளாக சிறையிலிருந்தாள். சிறையிலிருந்தே பல நூல்கள் எழுதினாள். தற்காலிகமாக விடுதலைப் பெற்றாள். அப்பொழுது தனது நூல்களை வெளியிட்டாள். ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பிரான்ஸிலும் எழுப்புத லுண்டானது. மீண்டும் சிறையிலடைக்கப்பட்டாள். பின்பு நாடு கடத்தப்பட்டாள். மரண பரியந்தம் தேவனுக்கு உண்மையாக ஜீவித்து பூரண சமாதானத்துடன் மரித்தாள்.