நான் சிறுவனாயிருந்தபோது, என்னுடையத் தாயார் தன்னுடைய எல்லாப் பிள்ளைகளும் சத்தியத்தில் நடக்க வேண்டுமென விரும்பி, மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சில வசனங்கள் அல்லது ஒரு சங்கீதம் மனனம் செய்து, பிழையில்லாமல் ஒப்பித்தால் மட்டுமே சாப்பாடு கொடுக்கப்படும் என்ற மாறாப் பிரமாணம் எங்கள் வீட்டில் இருந்து வந்தது. செவ்வாய்க் கிழமை தோறும் எங்கள் வீட்டில் நடைபெறும் வேதபாட வகுப்புகளில் பங்கேற்பதும், எங்கள் வீட்டில் தங்கும் பல்வேறு தேவ மனிதர்களை உபசரிப்பதும், அவர்களின் அனுபவங்களைக் கேட்பதும் அன்றாட நிகழ்வாயிருக்கும்.
அந்நாட்களில் நான் சிறுவனாயிருந்தாலும்… முழு வேதாகமத்தையும், முழுமையாகக் கைக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னிடம் மிகவும் வேகமாகவே, கிரியை செய்து வந்தது.அப்போது எனக்கு 6 வயது இருக்கும். இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் சிறந்த மாணவனாக, ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தபோதும், சேட்டைகள் செய்வதிலும், சண்டை போடுவதிலும் உற்சாகம் காட்டி வந்தேன். இதனால் வீட்டிற்கு அடிக்கடி சிற்சில புகார்கள் வர ஆரம்பித்தன. இதைக் கண்ட என்னுடைய தாயார் என்னைத் திருத்த நினைத்து இயேசுவின் போதனைகளில் ஒன்றை எனக்குப் போதிக்க விரும்பினார்கள். அவர்கள் என்னிடம் “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” மத்தேயு 5:39 என்ற வசனத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்.
இந்த வசனம் என் பிஞ்சு உள்ளத்திற்கு, மிகவும் அதிகமாகவே உற்சாகம் கொடுத்துவிட்டது. மேலும் இது “இயேசப்பாவின் போதனை” என்று அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியும் வந்துவிட்டது. அப்படியே இந்த வசனத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலோங்க ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையில் ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பி வரும் வழியில்…. ஒரு சண்டை வந்துவிட்டது. அதில் என்னைவிட சற்றுப் பெரிய பையன், 3ஆம் வகுப்பு படிப்பவன், என்னை “என்னுடைய வலது கன்னத்தில் அறைந்துவிட்டான்” இப்படிப்பட்ட அடிகள் வாங்குவதும் அடிகள் கொடுப்பதும் எனக்கு ஒன்னும் புதிதானதல்ல… இருந்தபோதும் புதிதாகக் கற்றுக்கொண்ட வசனத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், நான் அவனிடம் “டேய் ஒழுங்கா இடது கன்னத்தில் ஒரு அடி வாங்கிக்கோடா” எங்க “இயேசப்பா சொல்லியிருக்காங்க… எங்க அம்மாவும் சொன்னாங்க… இயேசப்பா சொன்னத அப்படியே செஞ்சாத்தான் பரலோகம் போக முடியும்னு…” டேய் பிளீஸ்… ஒரு அடி மட்டும் வாங்கிக்கோடா… மெதுவாத்தான் அடிப்பேன்னு, ரொம்பவே கெஞ்சிப் பார்த்தேன்.அவனோ பெரிய பையன். அவனுக்கு இப்படிப்பட்ட வசனங்கள் எதுவும் தெரியாது. எனவே அவன் அடி வாங்க மறுத்து ஓட ஆரம்பித்துவிட்டான். எனக்கோ எப்படியும் இயேசப்பாவின் போதனைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற துடிப்பு வைராக்கியம்.
கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் ஓடியிருப்போம், அச்சமயம், நான் அவனை நெருங்கி விட்டேன்… ஆனால் அது “அவனுடைய வலது கன்னம்” எனவே நான் அவனை அடிக்கவில்லை, மீண்டும் தொடர்ந்து ஓடி, ஒரு வழியாக அவனுடைய “இடது கன்னத்தில் பளாரென” ஒரு அறை கொடுத்தேன்.
ஓடிய வேகம் சரியான கன்னம் கிடைத்த தீவிரம்… சற்று பலமாகவே விழுந்துவிட்டது. அவன் கண்கள் சிவந்துவிட்டன. கன்னங்களில் கை விரல்கள் நான்கு, நன்றாக பதிந்துவிட்டன. அவன் தன்னுடைய வீட்டிற்கு போய்விட்டான், நானும் வசனத்தைக் கைக்கொண்ட திருப்தியில் என்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டேன். சில மணி நேரங்கள் கடந்திருக்கும்… இரவு திடீரென ஒரு பெரிய கூட்ட மக்கள் எங்கள் வீட்டிற்கு திரண்டு வந்துவிட்டனர். அவர்கள் தங்கள் மகனின் “இடது கன்னத்தைக் காட்டி” நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடையத் தாயாரும் அவர்களைச் சமாதானப் படுத்தி, என்னையும் அழைத்து, என்ன நடந்தது என்று கேட்டார்கள். நான் மிகவும் சந்தோஷமாக “அவன் என்னை முதலாவதாக வலது கன்னத்தில் அறைந்தான்… நான், நீங்க கற்றுக்கொடுத்தபடி அவனை, அவனுடைய இடது கன்னத்தில் அறைந்தேன்” அவன், முதலில் நான் கேட்டபோதே, ஒழுங்காகத் தன்னுடைய இடது கன்னத்தைக் காட்டாதபடியினால் ஓடும் வேகத்தில் அடித்தபோது சற்றுப் பலமாக அறைந்துவிட்டேன்… அவ்வளவுதான் என்றுக் கூறினேன்.
அந்தப் பையனும், தான் என்னை முதலில் அடித்ததை ஒப்புக்கொள்ளவே… பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டது. அனைவரும் போய்விட்டனர். பின்பு என்னுடையத் தாயார் என்னிடம், நான் வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டதை… விவரித்துக் காட்டினார்கள்… இது 6 வயதில் நடந்த சம்பவம்”.
இன்றைய கிறிஸ்தவ உலகில்… அநேக பெரிய மனிதர்களுக்கே வசனத்தைக் கைக்கொள்வதில் மாபெரும் குழப்பம், இவர்கள் இயேசுவைப் பின்பற்றும் விதத்தைப் பார்த்து புறஜாதிகளுக்கு மாபெரும் நடுக்கம், பகைவரையும் மன்னிக்கும் கிருபை நமக்கு வேண்டும் நம்முடைய அன்பு அனைவரையும் கிறிஸ்துவின் மந்தைக்கு அழைத்து வர வேண்டும்.
“என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” (1யோவான் 3:18)