வாழ்க்கையின் எல்லா நேரங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலைகளும் பள்ளத்தாக்குகளும், இரவும் பகலும் என்று ஏற்றத் தாழ்வுகளோடு இயற்கை படைக்கப்பட்டிருப்பதுபோல மனிதனின் வாழ்வும் துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி, வெறுப்பு, விருப்பு என்பவைகளின் கலவையாகவே கடந்துபோகிறது. சில நேரங்களில் தனிமை வாட்டும்போது, நம்மைப் புரிந்துகொள்ள யாருமில்லை என்ற கவலை உள்ளத்தை நொறுக்கும்போது மனிதன் ஆடிப்போகிறான் வாடிப்போகிறான்.
இங்கிலாந்தில் ஒரு மிருகக்காட்சி சாலையில் “போசோ” என்று பெயரிடப்பட்ட ஒரு யானை இருந்தது. அது காட்டும் வேடிக்கையைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம், குறிப்பாக சிறுவர்கள் வருவதுண்டு. இதனால், அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு நல்ல வருமானம் கிடைத்தது. எனவே, அந்த யானையை நன்கு பராமரித்து வந்தனர். யார் கண் பட்டதோ தெரியல! திடீரென யானைக்கு மதம் பிடித்தது. வேடிக்கை காட்டுவ தில்லை. அங்கு பார்க்க வருகிற எல்லோரையும் அடித்து விரட்டியது. எவ்வளவோ மருத்துவம் செய்தும் பயனில்லை. எனவே, யானையை சுட்டுக்கொல்ல முடிவெ டுத்தனர். அது ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
யானையை சுட்டுக்கொல்லும் அந்த நாளும் வந்தது! திரள் கூட்ட மக்கள் வந்திருந்தனர். கூண்டுக்குள் அடைக்கப்பட்ட அந்த யானையை சுட்டுக்கொல்ல துப்பாக்கி ஏந்தியவர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். எங்கிருந்தோ வந்த குள்ளமான மனிதர், யானையை தான் சரிபடுத்திவிடுவதாகச் சொல்லி அனுமதிபெற்று கூண்டுக்குள் நுழைந்தார். கண்கள் எல்லாம் அவரையும் யானையையும் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தது.
கோபத்தில் கொதித்த யானை அவரை தாக்கப் பிளிறிக்கொண்டு வந்தது. அந்த மனிதரோ கூலாக ஏதோ புரியா மொழியில் பேசிக்கொண்டிருந்தார். அதைக்கேட்ட யானையின் கண்களில் கண்ணீர் வடிந்தது. பிளிறலின் சத்தம் அழுகையின் சத்தமாக மாறி ஜனங்கள் மத்தியில் நிசப்தத்தை உருவாக்கியிருந்தது. அந்த மனிதரை தன்னுடைய தும்பிக்கையால் வளைத்து அவரோடு சேர்ந்து அந்த கூண்டுக்குள் வலம் வந்தது அந்த யானை. எல்லோருக்கும் வேடிக்கை காட்டியது. அங்கு எழும்பிய கண்ணீர் கலந்த கரகோஷத்தின் சத்தம் அந்த நகருக்குள் எட்டியது.
ஐயா! எப்படி இந்த யானையை மாற்றினீர்கள்? என்ற கேள்விக்கு அந்த மனிதர், இது ஒரு இந்திய யானை இதுவரைக்கும் இந்துஸ்தானி மொழி பேசிய இந்தியர்களால் வழிநடத்தப்பட்ட யானைக்கு, நீங்கள் பேசும் மொழி புரியவில்லை. இதனால், தனிமைபடுத்தப்பட்டு, தன் உணர்வுகளை புரிந்துகொள்ள யாரும் இல்லை என்ற நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளாகியதால் புத்திப்பிறழ்ந்து கடுமையாக நடந்து விட்டது.நான் உள்ளே போய் இந்துஸ்தானி மொழியில் “உன்னைப்பற்றி எனக்குத் தெரியும். நீ ஒரு நல்ல யானை! எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறவன். நீ பழையபடி எல்லோரையும் சந்தோசப்படுத்து” என்று சொல்லி உற்சாகப்படுத்தினேன் என்றார். அந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Rudyard Kipling என்ற பெயர் கொண்ட கவிஞர்.
யானையைப் பராமரித்தவர்கள் அதைக் கொல்ல முடிவெடுத்தனர். ஆயிரக் கணக்கான ஜனங்கள் யானையின் சாவைக் காண வந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மனிதன் யானையின் உள்ளத்தைப் புரிந்து வைத்திருந்தான். உங்கள் பெற்றோர், உறவினர், சகோதர சகோதரிகள் நண்பர்கள் யாரும் உங்களைப் புரியவில்லை யென்றாலும் இயேசு கிறிஸ்து உன்னுடைய உணர்வுகள், உள்ளத்தின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், தனிமை எல்லாவற்றையும் அறிந்து உனக்கு உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார்.
“தயங்கிடாதே! தாவி ஓடிவா! தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா!”