இஸ்ரவேலுக்காக திறப்பில் நின்ற ஆசாரியன் பினெகாஸ்

Written by Pr Thomas Walker

June 22, 2010

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்றைக்கு சபைகளுக்குத் தேவை பினெகாசைப் போல, தேவ சமூகத்தில் பரிந்து பேசும், செயல்படும் வீரர் தான் தேவை. பிலேயாமின் போதகத்தால் இஸ்ரவேலர் தீட்டுப்பட்டு போயினர். எனவே இஸ்ரவேல் மக்கள் மேல் தேவ கோபம் பற்றி எரிந்தது. ‘பினெகாஸ்’ தேவன் இஸ்ரவேலரை நிர்மூலமாக்காதபடி அவர்கள் நடுவில் “பக்தி வைராக்கியம்” காண்பித்தான். தேவன் அவர் உக்கிரத்தை விட்டுத் திரும்பினார். இன்றைய சபைகளிலும், தேவனின் கோபத்தை சபையாரை விட்டு நீக்கும்படி உபவாசித்து, கண்ணீர் விட்டு கதறி ஜெபிக்கும் ஜெப வீரர்கள் தேவை. சபைகளில் உலக சிநேகமும், சிற்றின்பங்களும், ஆசாபாசங்களும், வேசித்தனமும் பெருகி வருகிறது. திறப்பின் வாசலில் நின்று கதறி ஜெபிக்கும் மனிதர்களை தேவன் தேடுகிறார். பாவியின் பாவத்தைக் கூறி எச்சரிக்கும் தேவப் பிள்ளைகள் தேவை. நீதிமான் தன் நல்ல வழியை விட்டு பாவத்தைச் செய்தால் எச்சரித்து கிறிஸ்துவண்டை வழிநடத்த ‘பினெகாஸ்’ போன்ற தேவ மனிதர்கள் தேவை.
பினெகாஸ் யார்? எந்த வம்சத்தைச் சார்ந்தவன்? இஸ்ரவேலிலே அவன் பணி என்ன? என்று பார்ப்போம்.

யாத்.6:25 வசனத்தில், “ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்” பினேகாஸ் ஆரோனின் பேரன், எலியேசரின் மகன், ஆசாரிய குடும்பத்தில் பிறந்தவன். லேவி கோத்திரத்தைச் சார்ந்தவன். 1நாளா.6:4 வசனத்தில், “எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எஸ்றா 7:5 வசனத்தில், “…இவன்(அபிசுவா) பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்”.
பினெகாஸ் என்ற பெயரின் பொருள் – ‘தைரிய தோற்றம்’ உடையவன். பினெகாஸ் தைரியமுடையவனாக காணப்பட்டான். எண்.31:6 வசனத்தில், மோசே பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்பினார். அவன் கையிலே பரிசுத்த தட்டு முட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான். யுத்தத்தில் பூரிகைகளை கொண்டு சென்றான்.


சங்.106:28-30 வசனங்களில், “அவர்கள்(இஸ்ரவேலர்) பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து, தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது”. யோசு.24:33 வசனத்தில், “ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்”. மேலும் யோசு.22:13 வசனத்திலும், நியா.20:28ஆம் வசனத்திலும் பார்க்கும்போது, “ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய(கர்த்தருடைய) சந்நிதியில் நின்றான்” இஸ்ரவேலர் கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்.
பினெகாசைப் பற்றி எண்.25ஆம் அதிகாரத்தில் காணலாம். பிலேயாம் இஸ்ரவேலர் தீட்டுப்பட காரணமாய் இருந்தான். இஸ்ரவேலர் சித்தீமிலே தங்கியிருக்கையில் ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்.


பாலாக் – மோவாபியரின் இராஜா (எண்.22:4). பிலேயாம் – தீர்க்கதரிசி. பிலேயாமை பாலாக் ராஜா அழைத்தனுப்பினான். இஸ்ரவேலை சபிக்கும்படி எண்.22:5-7 வசனங்களில் பாலாக் இராஜா, நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன். அதனால் நீர் வந்து இஸ்ரவேலை சபிக்க வேண்டும் என்றான். அதற்காக குறி சொல்லுதற்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு பிலேயாமிடத்தில் போய் தங்கினார்கள். ஆனால் பிலேயாம் (வச.18)ல் “…என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது” என்றான். (வச.15) மேலும் பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்கள், அதிக பிரபுக்களை அனுப்பினான். (வச.22) பிலேயாம் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது. கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். (வச.23) கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டது. (வச.28) கழுதை பிலேயாமைப் பார்த்து பேசியது, நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார். வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனைக் கண்டு தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால் நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று. எனக்கு விலகாமல் இருந்ததானால் இப்பொழுது உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன்” என்றார்.


பாலாக் பிலேயாமை நோக்கி உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்தில் வராமல் இருந்ததென்ன? ஏற்ற பிரகாரமாக உம்மை நான் கனம்பண்ண மாட்டேனா? என்றான்.
மூன்று முறை சர்வாங்க தகன பலியைச் செலுத்தி இஸ்ரவேலை சபிக்க பிலேயாமை இராஜா அழைத்துச் சென்றார்.
    1. எண்.23:2-10 வசனங்களில் காணலாம்.
    2. எண்.23:18-24
    3. எண்.24:4-9, 16-22 வசனங்களில் பார்த்தால் எண்.23:20 “இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது” என்றான்.
எண்.25:1 வசனத்தில், “இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்” அதனால் இஸ்ரவேல் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. எண்.25:3,9 வசனங்களில் – அந்த வாதையால் செத்தவர்கள் 24,000 பேர். மேலும் எண்.25:10,11 வசனங்களில், தேவனின் கோபத்தை பினெகாஸ் திருப்பினான்” என்று பார்க்கிறோம்.


எண்.25:4 வசனத்தில் “கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்”. அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி, நீங்கள் அவரவர் பாகால் பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.

பினெகாஸின் பக்தி வைராக்கியம்
மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில் அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக்கொண்டு வந்தான். அதைக் கண்ட ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயசாரின் மகன் பினெகாஸ், நடுச்சபையிலிருந்து எழுந்து ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம் பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய் இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று. கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்” என்றார். பினெகாசை தேவன் ஆசீர்வதித்தார். “…இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்” என்றார். நித்திய ஆசாரிய ஊழியத்தையும் கொடுத்தார்.

பிலேயாமுக்கு தேவ தண்டனை கிடைத்தது
யோசு.13:22ல் “இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்”. மேலும் எண்.31:16 வசனத்தில், “பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே”.
பிலேயாமின் வழியைப் பற்றி தற்காலத்திலும் சபைகளில் உள்ளவர்களைப் பற்றி பேதுரு இவ்வாறு கூறுகிறார். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி கறைகளும், இலச்சைகளுமாயிருந்து உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள், விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள் உறுதியில்லாத ஆத்துமாக்களை தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள் என்கிறார்.


யூதா நிருபத்திலும் பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடுபவர்களுக்கு ஐயோ என்கிறார் (யூதா 11). மேலும் வெளி.2:14 வசனங்களில் பெர்கமு சபையின் தூதனுக்கு எழுதும்போது, “…சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலெயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு”.

இக்காலத்திலும் சபையில் இப்படிப்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் மனந்திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் தேவன் சீக்கிரமாய் அப்படிப்பட்ட மக்களிடம் வந்து அவர் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவார். இன்றைய சபைகளிலும் பிலேயாமின் பாவங்கள் மலிந்து கிடக்கின்றன. பிலேயாமின் வழியில் நடந்தால் காரிருளில் தான் பங்கடைய வேண்டும்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! பிலேயாமின் பாவங்களான (1) விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை புசித்தல் (2) வேசித்தனம் பண்ணுவதற்கு ஏதுவான இடறலை விசுவாசிகளுக்கு முன் போடுவது. பாவம் செய்யத் தூண்டுவது. தேவ தண்டனையைப் பெற போதனை செய்து விசுவாசிகளை இடறப் பண்ணுவது போன்ற பாவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தேவ தண்டனை வரும். மற்றவர்கள் இடற நாம் காரணமாயிருக்கக் கூடாது. விசுவாசியே! நீ பினெகாஸைப் போல திறப்பிலே நின்று சபையில் உள்ள மக்களின் சீர்கேடுகளுக்காக, அழுது புலம்பி உபவாசித்தால் தேவ கோபம் உன் சபையை விட்டு, குடும்பத்தை விட்டு நீங்கும். பினெகாசைப் போல நீ தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்து மக்களுக்காக பாவ நிவிர்த்தி செய்தால், உனக்கும் உன் பின் சந்ததியாரும் நித்திய ஆசாரியப் பட்டத்துக்குரிய உடன்படிக்கையையும் ஆசீர்வாதமும் கிடைக்கும். தேவனுக்காக பக்தி வைராக்கியமுள்ள பினெகாசுகள் சபைகளுக்குத் தேவை! நீ உன்னை தேவனுக்காக அர்ப்பணிப்பாயா?
 

அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This