பிச்சைக்காரன் ஒருவன் ராஜாவின் அரண்மனை அருகில் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அரண்மனை வாசலில் இருந்த அறிவிப்புப் பலகையில் ராஜா ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ராஜ வஸ்திரம் தரித்திருப்பவர்கள் மாத்திரம் அந்த விருந்தில் கலந்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த பிச்சைக்காரன் அரண்மனையைக் கடந்து சென்றபோது அறிவிப்பு பலகையில் இருந்த வாசகங்களைக் கவனித்தான். தன்னுடைய நிலையிலுள்ள கந்தை வஸ்திரம் தரித்த பிச்சைக்காரர்கள் அந்த விருந்தில் கலந்துகொள்ள முடியாது என்று நினைத்து மிகவும் வருந்தினான். அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது.
அவன் நேராக அரண்மனை வாயிலிலுள்ள காவலனிடம் சென்று, “நான் அரசரைப் பார்த்து அவரோடு பேச வேண்டும்” என்றான். “கொஞ்சம் காத்திரு” என்று சொன்ன வாயில்காப்போன் அரண்மனைக்குள் சென்று அரசனின் அனுமதி பெற்று அந்தப் பிச்சைக்காரனை அரசனிடம் அழைத்துச் சென்றான். “நீ என்னைப் பார்க்க விரும்பினாயா?” என்று அரசன் பிச்சைக்காரனை வினவினான். அரசனை வணங்கிய பிச்சைக்காரன், “மகா கனம் பொருந்திய அரசே! நீங்கள் ஆயத்தப்படுத்தியுள்ள விருந்தில் கலந்துகொள்ள நான் விரும்புகிறேன். ஆனால் என்னிடம் ராஜ வஸ்திரம் இல்லை. தயவுசெய்து தங்கள் பழைய ராஜ வஸ்திரங்களில் ஒன்றை எனக்குக் கொடுத்து அந்தப் பெரிய விருந்தில் கலந்துகொள்ள அனுமதியுங்கள்” என்று மிகவும் பணிவோடு கேட்டான்.
உடனே அரசன் இளவரசனை அழைத்து “இந்த மனிதனை அழைத்துக் கொண்டு போய் உன்னுடைய ராஜ வஸ்திரங்களில் ஒன்றை இவனுக்குக் கொடுத்து அதை அணிந்துகொள்ளச் செய்” என்றான். இளவரசன் ராஜாவின் வாக்குப்படியே அந்த பிச்சைக்காரனுக்கு ராஜ வஸ்திரத்தை தரிப்பித்துவிட்டு, “ராஜ வஸ்திரம் அணிந்துகொண்ட நீ இனி மற்ற வஸ்திரங்களை தரிக்க வேண்டிய அவசியமில்லை, நீ இனி எப்போதும் அரசன் ஏற்படுத்தியுள்ள விருந்தில் கலந்துகொள்ளலாம்” என்றான். இளவரசனுடைய கால்களில் விழுந்து பிச்சைக்காரன் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டான்.
திடீரென அந்த பிச்சைக்காரனுக்கு அவனுடைய கந்தைத் துணிகளைப் பற்றிய ஞாபகம் வந்தது. அதைச் சுற்றி கையில் மறைத்து வைத்துக்கொண்டான். ராஜாவின் விருந்து அவன் எதிர்பார்த்ததை விட மிகவும் பிரமாதமாக இருந்தது. ஆனால் அவன் கையில் வைத்திருந்த கந்தைத் துணி அடிக்கடி நழுவி கீழே விழுந்தது. அவன் அதை எடுக்கும் நேரத்தில் விருந்தின் சில முக்கிய உணவுகளை சாப்பிட அவனால் இயலவில்லை. “ராஜ வஸ்திரம் தரித்திருக்கும் ஒருவனுக்கு மற்ற வஸ்திரங்கள் அவசியமில்லை” என்று இளவரசன் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்தில் இருந்தாலும் பிச்சைக்காரனுக்கு அவனது பழைய கந்தை வஸ்திரங்களை விட்டுவிட மனம் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல பிச்சைக்காரன் அணிந்திருந்த ராஜ வஸ்திரங்களைவிட கந்தைகளே அனைவர் கண்ணிலும் பட்டது. எல்லாரும் “கந்தை கொண்ட கிழவன்” என்று கேலி செய்தனர்.
அந்த பிச்சைக்காரன் ராஜ வஸ்திரம் தரித்திருந்தபடியால் அரண்மனை சுகங்களை அனுபவித்து வந்தான். ஆனால் கந்தைகளை அவன் கைவிடவில்லை. ஒருநாள் அந்த பிச்சைக்காரன் மரிக்கும் தருவாயில் இருந்தான். ராஜா அவனைப் பார்க்க வந்திருந்தான். எல்லாவற்றையும் அனுபவிக்க வாய்ப்பிருந்தும் கந்தையைக் கைவிட முடியாத பிச்சைக்காரனை நினைத்து மனம் வருந்தினான். பிச்சைக்காரனும் தனது முட்டாள் தனத்தை நினைத்து கண்ணீர் சிந்தினான்.
நாம் கிறிஸ்துவின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ராஜரீக ஆசாரியக் கூட்டமாக அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படி அழைக்கப்பட்ட நாம் பழைய பாவ வஸ்திரங் களைக் களைந்துபோட்டு கிறிஸ்துவாகிய புதிய வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர் அளிக்கும் பரிபூரண வாழ்க்கையை, உண்மையான ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்க முடியும்.
“….ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2கொரி.5:17)