கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரஜா உரிமை உண்டு. சிலருக்கு பிறந்த நாட்டிலும், வேலை பார்க்கும் அல்லது வாழும் நாட்டிலும் பிரஜா உரிமை (or) குடியுரிமை (Citizenship) உண்டு. ஒவ்வொரு ஆவிக்குரிய கிறிஸ்தவனும் பரலோக பிரஜா உரிமை உடையவனாக வாழ வேண்டும். நாம் இந்த உலகத்தில் வாழும்போதே பரலோகத்தில் ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாக, நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
பிலி.3:20 வசனத்தில், “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” திருச்சபை இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆட்டுக் குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் மாத்திரமே ‘பிரஜா உரிமை’ பரலோக குடியுரிமை பெற்றவர்கள். திருச்சபையின் நம்பிக்கை இதுவேயாகும்.
2கொரி.5:9 வசனத்தில், “அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.” பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டு. பரலோகத்தில் வாழும் வாழ்க்கையே நிரந்தரமானது. அதுவே நிலையான நகரம், நிலையான வீடு. இந்த உலகத்தில் சரீரத்தில் வாழும் வாழ்க்கை நிரந்தரமற்றது. அழியக்கூடியது.
எபி.11:38 வசனத்தில், “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.” பரலோக பிரஜா உரிமை பெற்றவர்களுக்கு உலகம் பாத்திரமாயிருக்கவில்லை, ஏற்ற இடமில்லை.
பரலோக பிரஜா உரிமையுள்ளவர்கள் எப்படி வாழ வேண்டும்?
1. எபி.11:13 வசனத்தில், “…பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.” இந்த உலகத்தில் பரதேசிகளாக வாழ வேண்டும்.
2. எபி.11:9,10 வசனங்களில், “விசுவாசத்தினாலே அவன்(ஆபிரகாம்) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து ……(விசுவாசத்தோடு) காத்திருந்தான்.”
3. எபி.11:33,34 வசனங்களில், “விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்.”
அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள். பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள். பலவீனத்தில் பலன் கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள். அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.
விசுவாசத்தாலே பெரிய காரியங்களை அந்நியரும் பரதேசியுமாக வாழ்ந்த தேவ பிள்ளைகள் சாதித்தனர். உலக இராஜ்ஜியத்தில் பல பெரிய அதிசயங்களை நடப்பித்து, தோல்வியாக அல்ல, ஜெயமாகவே வாழ்ந்தனர். விசுவாசத்தில் வல்லவர்களாக, அரிய பெரிய காரியங்களைச் செய்தனர். ஜெயித்தவர்களாக வாழ்ந்தனர்.
4. எபே.2:19, “ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;” கிறிஸ்துவின் மேல் ஆழமான அஸ்திபாரமுடையவர்களாக இருந்தனர்.
5. யாக்.1:27, “…உலகத்தால் கறைபடாத படிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” பரலோக பிரஜா உரிமை உள்ளவர்கள் உலகத்தில் இருந்தாலும், உலகத்தால் கறைபடாதிருக்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டில் பரலோக பிரஜா உரிமை பெற்றவர்களில் சிலர்
1. தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. பாபிலோனில் மேன்மையான பதவியில் இருந்தாலும் அவர்கள் எண்ணங்கள், வாஞ்சை எருசலேமை பற்றியதாக காணப்பட்டது. தானியேல் தினம் 3 வேளைகளிலும் எருசலேமை நோக்கி ஜெபித்தார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போஜனத்தால் தங்களை தீட்டுப்படுத்தாமல் தேவன் மேலுள்ள விசுவாசத்தால் விக்கிரகாராதனை செய்யவில்லை. பொருளாசை ஒரு விக்கிரகாராதனை. குறுக்கு வழியில் தவறான முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் பரலோகம் போவதில்லை. தங்களை அந்நியரும் பரதேசியுமாக எண்ணிக்கொண்டே மூவரும் விக்கிரகாராதனைக்கு உட்படாமல் தங்களைக் காத்துக்கொண்டு பரலோக பிரஜைகள் என நிரூபித்துக் காட்டினார்கள். தானி.3:17,18 வசனத்தில், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” என்ற உறுதியுடன் வைராக்கியமாக வாழ்ந்தனர். தேவன் பேரில் ஆழமான விசுவாசம் காணப்பட்டது.
2. யோசேப்பு – எகிப்து தேசத்தில் பெரிய பதவியிலிருந்தாலும் கூட முழு எண்ணமும் கானான் தேசத்தில் தான் இருந்தது. அங்கே தான் தன் எலும்புகளைக் கூட அடக்கம் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். எபி.11:22 வசனத்தில், “விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தை விட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்”
3. நெகேமியா – இராஜாவின் சமுகத்தில் நின்றபோதிலும் கூட எண்ணமெல்லாம் எருசலேமின் அலங்கத்தின் மேலேயே இருந்தது. நெகே.2:3 வசனத்தில் நெகேமியா ராஜாவிடம், “…என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்க முகத்தோடு இராதிருப்பது எப்படி” என்கிறார். எருசலேமின் மீது அவருக்கு இருந்த வாஞ்சை வெளிப்படுகிறது.
பரலோக பிரஜைகளான விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும்?
1. விசுவாசிகள் பரலோக பிரஜைகள் ஆனதால் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்க்க வேண்டும்
எளியவர்களுக்கு, சபைக்கு, மிஷனெரிகளுக்கு, ஊழியங்களுக்கு கொடுப்பவர்களுக்கு பரலோகத்தில் பொக்கிஷங்கள் சேர்க்கப்படுகிறது. மத்.6:19,20,21 வசனங்களில் இயேசு இவ்வாறு சொன்னார் “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”
2. பரலோக பிரஜைகள் இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள்
பரலோக பிரஜைகளுக்கு எப்போதும் தேவ சமுகத்தில் காணப்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். தானியேல் இடைவிடாமல் ஆராதித்த தேவ மனிதன். பானுவேலின் குமாரத்தியாகிய அன்னாள் தேவ சமூகத்தில் தரித்திருந்து இடைவிடாமல் ஆராதித்து வந்தாள்.
3. பரலோக பிரஜைகள் தேவ பக்தியுள்ளவர்களாய் ஜீவனம் பண்ணி வருகையை எதிர்பார்த்து வாழுவார்கள்
தீத்து 2:12,13 வசனங்களில், “நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணி, ….இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.”
4. பரலோக பிரஜைகள் மேலானவைகளைத் தேடுவார்கள்
கொலோ.3:1,2 “…கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.” தேவனுடைய மகிமையையே நாடுங்கள். நம்முடைய அற்பமான சரீரம் மகிமையான சரீரமாக மாறும். பிலி.3:21 “….நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”
5. ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் பிரஜா உரிமை பெற்றவர்கள்
வெளி.21:27 “தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.”
தேவனை பிரியப்படுத்தி வாழும் அன்பு நண்பரே! நம்முடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்களை தேவன் உண்டுபண்ணியுள்ளார். நித்திய வீட்டில் நாம் என்றென்றும் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். 1பேது.1:4 வசனத்தில் சொல்லப்பட்டதுபோல “அழியாததும், மாசற்றதும் வாடாததுமான சுதந்திரம் நமக்காக பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. யார் இந்த பரலோகத்தில் நிரந்தரமாக தங்க முடியும்? சங்.15ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதார சத்தியத்தைப் பேசுகிறவன் தானே. தேவன் நம் ஒவ்வொருவருக்கும் நித்திய வீட்டில் வாழும் பாக்கியம் தருவாராக!” ஆமென்!




