தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான். எப்படி? அமலேக்கியர் தாவீது குடியிருந்த பெலிஸ்தியரின் தேசமான சிக்லாகுக்கு பெரிய சேனையுடன் வந்து அவனுடைய உடைமைகளையும், ஸ்திரீக்குள் சிறியவர்கள், பெரியவர்களை சிறைபிடித்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, சிக்லாக்கை அக்கினியால் சுட்டெரித்துப் போட்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர், குமாரத்திகளினிமித்தம், மனக்கிலேசமானதினால் அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். ஏன் தாவீது இவ்வாறு அமலேக்கியர் கையில் மாட்டினான்? ஏன் தன் உடைமைகளையும், பிள்ளைகளையும், மனைவிகளையும் இழந்தான்? என்று பார்ப்போம். நம்முடைய வாழ்விலும் தேவனால் நாம் பெற்று அனுபவித்து வரும் ஆசீர்வாதங்களை சில சமயங்களில் இழந்து விடுகிறோம். ஏன் சாத்தான் வந்து நம் உடைமைகளையும் நம்மையும் சிறைபிடித்துச் செல்கிறான்? ஏன் நாம் அடிக்கடி நெருக்கப்பட்டு, சாவை விரும்பும் நிலையை அடைகிறோம்? காரணம் என்னவென்றால் நாம் தேவன் விரும்பாத, தேவ பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு போய் குடியிருப்பது தான்.
முதலாவதாக – எச்சரிப்புக்கு கீழ்ப்படியவில்லை
1சாமு.22:5 வசனத்தில் “… காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்” தாவீது தேவனுடைய தீர்க்கதரிசியால் எச்சரிக்கப்பட்டும் தேவ பாதுகாப்பு இல்லாத இடத்துக்குப் போனான்.
1சாமு.27:7 வசனத்தில், “தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.” தேவன் தன்னுடைய பிள்ளைகள் யூதாவில்(துதிக்கிறவர்கள்) மத்தியில், தேவனுடைய ஆலயம், ஆராதனை இருக்கும் இடத்தில் குடியிருக்க கட்டளையிடுகிறார். தேவ கட்டளையை மீறி சவுல் அங்கிருக்கிறான். அவன் கையில் மாட்டி கொலை செய்யப்படுவேன் என்ற பயத்தினால் பெலிஸ்தியர் தேசத்திற்குப் போய் தங்கினால் தேவ பாதுகாப்பு இருக்காது. நீ தேவன் சொன்ன இடத்தில் இருந்தால் சத்துருக்கள் இருந்தாலும், தேவ பாதுகாப்பு உண்டு. தாவீதை தேவன் சவுலின் கைக்கு விலக்கி 19 தடவைகள் காப்பாற்றினார். சவுல் யூதாவில் இருந்தாலும் தேவன் சொன்ன இடத்தில் இருந்தால் தேவ பாதுகாப்பு நிச்சயம் உண்டு.
இரண்டாவதாக – தேவனுடைய பாதுகாப்பை சந்தேகிக்கிறான்
1சாமு.27:1 வசனத்தில், “…தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.” தேவன் மேல் அவிசுவாசம் தாவீதுக்கு வந்தது. தப்பிதமான அறிக்கை செய்கிறான். தேவனிடம் முறுமுறுப்பு செய்யக் கூடாது. தானாகவே ஒரு தீர்மானம் எடுத்து பெலிஸ்தியரின் தேசத்துக்கு போகிறான்.
வேதத்திலே ஆபிரகாமைப் பார்க்கும்போது எபி.6:15ல், “அந்தப்படியே, அவன்(ஆபிரகாம்) பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்.” அநேக விசுவாசிகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தை சுதந்தரிக்காததிற்கு காரணம் தேவனுக்காக, அவர் வேளைக்காக பொறுமையுடன் அவர் சொன்ன இடத்தில் காத்திருப்பது இல்லை. லோத்து தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படியாததால் நஷ்டப்பட்டான். ஆதி.19:19ஆம் வசனத்தில், “என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்” எனக் கூறி தன் சுய விருப்பத்தின்படி நடந்ததால் நஷ்டப்பட்டான்.
மூன்றாவதாக – தாவீது பொய் சொன்னது தேவனுக்குப் பிடிக்கவில்லை
1சாமு.27:7 வசனத்தில், “தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.” மேலும், 1சாமு.27:10 “இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும் கேனியருடைய தென்திசையிலும் என்பான்.” தாவீது பெலிஸ்திய தேசத்திலே கொள்ளையடித்து, ஆகீஸ் ராஜாவிடம் பொய் சொல்லி வந்தான்.
நான்காவதாக – குற்றமில்லா இரத்தத்தை சிந்தினான்
1சாமு.27:11 வசனத்தில், “இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டுவராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.” குற்றமில்லாத அநேகருடைய இரத்தத்தை சிந்தியது கர்த்தர் பார்வைக்கு பொல்லாப்பாக காணப்பட்டது.
ஐந்தாவதாக – தேவனுடைய ஜனத்துக்கு எதிராக பெலிஸ்தியருடன் போக சம்மதித்தான்
1சாமு.28:1ஆம் வசனத்தில், பெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி “நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.” தாவீது தேவனுடைய ஜனங்கள் இஸ்ரவேலுக்கு எதிராக போக எத்தனித்தான். தேவனுடைய பார்வையில் அது குற்றமாக காணப்பட்டது.
ஆறாவதாக – கர்த்தர் தாவீதுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார். தாவீது செய்த தீமைக்கு தண்டனை கொடுத்து திருத்தினார்
1சாமு.30:1 வசனத்தில், “தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து” தாவீது குடியிருந்த பெலிஸ்தியரின் பட்டணமான சிக்லாக் சுட்டெரிக்கப்பட்டது. அவனது மனைவி, பொருள்கள், பிள்ளைகள் சிறைபிடித்து அமலேக்கியரால் கொண்டுசெல்லப் பட்டனர். தாவீது மிகவும் அழுதான். தனக்கு பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதான். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். ஜனங்கள் தங்கள் குமாரர், குமாரத்திகளினிமித்தம் தாவீதை கல்லெறிய வேண்டுமென்று சொல்லிக்கொண்டார்கள். தேவனுடைய பாதுகாக்கும் கரம் அவனைவிட்டு விலகியது. பெலிஸ்தியர்களும் கைவிட்டனர். பெலிஸ்தியரின் பிரபுக்கள் தாவீதை நம்பவில்லை. தேவனுடைய பாதுகாப்பு நம்மை விட்டு விலகுமானால், சாத்தான் நம் உடைமைகளையும், பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டுபோய் விடுவான். தாவீதின் வாழ்க்கை விசுவாசிகளுக்கு பெரிய எச்சரிக்கை.
எல்லாவற்றையும் இழந்த தாவீது திரும்பப்பெற என்ன செய்தான்?
1. தாவீது கர்த்தரிடம் மனந்திரும்பினான்
1சாமு.30:6 வசனத்தில், “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.” தன் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்பி, தேவனோடுள்ள ஐக்கியத்தை சரிசெய்துகொண்டான்.
2. தேவ ஆலோசனையைக் கேட்டு அதன்படி கீழ்ப்படிந்தான்
1சாமு.30:7,8,9 வசனங்களில், தாவீது அபியத்தார் என்னும் ஆசாரியனை வரவழைத்து, “நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.”
3. கீழ்ப்படிந்து அமலேக்கியருடன் யுத்தத்திற்குச் சென்றான்
தாவீதும் அவனோடிருந்த 600 பேரும் போனார்கள். தாவீதோ, 400 பேரோடுங்கூட அமலேக்கியரைத் தொடர்ந்து போனான். இருநூறு பேர் விடாய்த்துப் போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்காமல் நின்றுபோனார்கள். தாவீது விடாமல் அமலேக்கியரைப் பின் தொடர்ந்தான். ஆபிரகாம் தன் வீட்டில் இருந்த 318 பேரைக் கொண்டு சோதோமுக்கு எதிராக வந்த 5 இராஜாக்களையும் முறியடித்து லோத்துவையும், அவன் உடைமைகளையும் மீட்டுக்கொண்டு வந்தான்.
4. தாவீது அமலேக்கியரை முறியடித்தான்
1சாமு.30:17-19 வரை உள்ள வசனங்களில், “அவர்களைத்(அமலேக்கியரை) தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்கால மட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.”
யாத்.17:14 வசனத்தில், “யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுவரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.” அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமானது. எனவே கர்த்தரின் யுத்தம் நடக்கும். 1சாமு.15:8,9 வசனங்களில், அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான். ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம் பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும் ஆட்டுக்குட்டிகளையும் நலமான எல்லாவற்றையும் அழித்துப்போட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான். எனவே தேவன் சாமுவேலிடம் ‘நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னை விட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் என்றார். அதனால் சவுலின் இராஜ்ஜியபாரம் அவனை விட்டு கடந்துபோனது.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! தேவன் சொன்ன இடத்தில் வாழ்ந்து தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தால் தேவனுடைய பாதுகாப்பு இருக்கும். மாம்சத்திற்கும் இடம் கொடுத்து – பொய், களவு, கொலை, குற்றமில்லா இரத்தத்தை சிந்துதல், தன்னிச்சையாக செயல்படுதல் – போன்ற காரியங்களில் ஈடுபட்டால், நாம் பெற்று அனுபவிக்கும் தேவ ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். மிகவும் வேதனையையும் நெருக்கத்தையும் அனுபவிக்க நேரிடும். மீண்டும் தாவீதைப் போல கர்த்தரிடம் மனம் திரும்பி, அவர் வார்த்தைப்படி கீழ்ப்படிந்து, பிசாசை (அமலேக்கியரை) முற்றிலும் தலைதூக்க விடாமல் முறியடித்தால் எல்லாவற்றையும் திரும்பப் பெற முடியும். இழந்துபோன ஆசீர்வாதங்களை மீண்டும் பெற்று அனுபவிக்க கர்த்தர் உதவி செய்வாராக! அல்லேலூயா!




