ஆசீர்வாதத்தின் திறவுகோல் என்ன?

Written by Pr Thomas Walker

March 21, 2008

ராயனுடையதை ராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!


வானம் திறக்கப்பட்டு ஆசீர்வாதங்கள் நம்மேல் தேவன் பொழிய வேண்டுமானால் அதன் சாவி உங்கள் கையிலேயே தான் உள்ளது. ஏசாயா 66:2 வசனத்தில், “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்” என்கிறார். மேலும் மல்கி.3:8 வசனத்தில் “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.” நாம் தேவனுக்குக் கொடுக்க வேண்டியதை வஞ்சிக்காமல் கொடுக்க வேண்டும். ராயனுடையதை ராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் கொடுக்கவேண்டும் என்கிறார் இயேசு.


ஆபிரகாம் பெரிய சீமானாக இருந்தான். ஆதி.14:20 வசனத்தில் ஆபிரகாமுக்கு சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்குவுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தான். மெல்கிசேதேக்குவுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். ஆதலால் தேவன் ஆபிரகாமை மிகவும் ஆசீர்வதித்தார். அவனுடைய செல்வம் பூமி தாங்கக் கூடாததாய் இருந்தது.
யாக்கோபின் வாழ்க்கையைப் பார்க்கும்போது ஒழுங்கற்ற நிலையில் இருந்தது. இவன் ஆபிரகாமின் பேரன், ஈசாக்கின் மகன் தான். ஆனால் தசமபாகம் ஒழுங்காக செலுத்தவில்லை. ஆதி.28:22 வசனத்தில் “தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்” ஆனால் செலுத்துவதில் உண்மையாக இல்லை. பதான் அராமில் தன் மாமன் லாபானின் வீட்டில் இருக்கும்வரை, அவன் புத்தி கெட்டவனாக, ஏமாற்றி, உண்மையற்ற வாழ்க்கை நடத்தி சம்பாதித்து பெரியவனாக மாற விரும்பினான். யாக்கோபின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. ஆனால், தேவன் அவனுக்கு நெருக்கமான சூழ்நிலையை உருவாக்கி அவன் தன்னை உணரக் கூடிய இடத்தில் அவனைக் கொண்டுவந்து அவனைச் சந்தித்தார். பின்னர் தேவன் அவனை ஆசீர்வதித்தார்.


லேவியர்கள் மற்ற கோத்திரத்தாரால் போஷிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய ஒழுங்கு. எண்.18:21 வசனத்தில், “இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்” இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு கொடுக்கும் பகுதியில் உண்மையாக இருக்கவில்லை.


2நாளா.31:1-8 வசனங்களில் வாசித்தால் எசேக்கியா ராஜா காலத்தில் முதல் தடவையாக ஆலய காரியங்கள் பலிகள், காணிக்கைள், தசமபாகம் போன்ற கர்த்தரின் காரியங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. எசேக்கியா காலத்துக்கு முன்பு இஸ்ரவேலில் ஆராதனை இல்லை. தேவாலயம் பூட்டப்பட்டிருந்தது. காரணம் லேவியர்கள் வேலை தேடி அங்குமிங்கும் போனபடியால் ஆலய பணிவிடை தடை செய்யப்பட்டது. எசேக்கியா எல்லாவற்றையும் சீர்படுத்தினான். ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை ஊழியத்தில் திடப்படுத்தினான். தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான். ஜனங்களை அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க கட்டளையிட்டான். இந்த வார்த்தை பிரசித்தமானபோது இஸ்ரவேல் புத்திரர், தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும், முதற் பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.


2நாளா.29:7-9 வசனங்களில் இஸ்ரவேலர் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும் தூபங்காட்டாமலும் விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப் போட்டார்கள். ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் வந்தது. தேவன் அவர்களை துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார். பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
இஸ்ரவேலரை நெகேமியா சுத்திகரித்தான். லேவியருக்கு பங்கு கொடுக்கப்படவில்லை – ஓடிப்போனார்கள். நெகே.13:10-13 வசனங்களில் நெகேமியா காலத்தில் இரண்டாம் முறையாக காணிக்கைகள் பலிகள் ஒழுங்குபடுத்தப்பட்டது. நெகேமியா தலைமையானவர்களோடே வழக்காடி தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப் போவானேன் என்று சொல்லி இஸ்ரவேலரை சீர்படுத்தினான்.
தசமபாகம் காணிக்கைகளைப் பற்றி புதிய ஏற்பாட்டில் இயேசு கூறியவைகளை காணுவோம். மத்.23:23 தசமபாகத்தில் உண்மையாக இருந்தாலும் நீதி, இரக்கம், விசுவாசத்தை விட்டுவிட்டார்கள். அவைகளையும் கொடுக்க வேண்டும், இவைகளையும் விட்டுவிடாதிருக்க வேண்டும்.


லூக்.6:38 “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; …நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்”.
2கொரி.8:1,2 வசனங்களில் “…மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.”
‘கொடுப்பது’ ஒரு கிருபை. மக்கெதோனியா நாட்டு சபையினர் கொடிய தரித்திரராயிருந்தும் கொடுத்தார்கள். மிகுந்த உபத்திரவம் – கொடிய தரித்திரம் – பரிபூரண சந்தோஷத்தினாலே உதாரத்துவமாய் கொடுத்தார்கள். அவர்கள் திராணிக்கு தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுத்தார்கள். லூக்.21:1-4 வசனங்களில், “ஒரு ஏழை விதவை அதிலே (காணிக்கைப் பெட்டியிலே) இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு, இந்த ஏழை விதவை  மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்ற மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்…. இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்”.


சாறிபாத் விதவை எலியா தீர்க்கதரிசிக்கு முதல் அடையை கொடுத்ததினால் பஞ்சகாலம் முழுவதும் போஷிக்கப்பட்டாள்.

நாம் எப்படி கொடுக்க வேண்டும்?
முதலாவதாக
1நாளா.29:3-9 வசனங்களில் பார்க்கும்போது “மனப்பூர்வமாய்” கொடுத்தார்கள். தாவீது தேவனுடைய ஆலயத்திற்காக தான் சவதரித்த அனைத்தையும் தவிர, தனக்கு சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தான். மேலும் 29:5ஆம் வசனத்தில் “இப்போதும் உங்களில் இன்றைய தினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்” தேவனுக்கு கொடுக்கும்போது மனங்கசந்து வெறுப்பாக கொடுக்கக் கூடாது.

இரண்டாவதாக
1நாளா.29:9 வசனத்தில் நாம் பார்க்கும்போது “உத்தம இருதயத்தோடே கொடுத்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. உண்மையாக நேர்மையாக கொடுக்க வேண்டிய பங்கை சரியான விகிதத்தில் நல்ல இருதயத்தோடு செலுத்தினால் அவரும் உத்தம ஆசீர்வாதத்தோடு எதிர்கொண்டு வந்து ஆசீர்வதிப்பார்.

மூன்றாவதாக
1நாளா.29:9 வசனத்தில் ஜனங்கள் கர்த்தருக்கு உற்சாகமாய்க் கொடுத்தார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான். “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” மகிழ்ச்சியோடு, சந்தோஷமாக கொடுக்க வேண்டும் (2கொரி.9:7) என்று பார்க்கிறோம். எஸ்றா 2:68 “…மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்”

நான்காவதாக
2கொரி.9:7 வசனத்தில் “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்;” தேவன் மனிதனை கொடுக்கும் விஷயத்தில் கட்டாயப்படுத்தி வரிபோல வாங்குபவர் அல்ல, விருப்பத்தோடும், சந்தோஷமாக, தேவன் பேரில் உள்ள அன்பையும், நன்றியையும் தெரிவிக்க நாமாகவே கொடுக்க வேண்டும்.

ஐந்தாவதாக
உதாரத்துவமாய் கொடுக்க வேண்டும். 2கொரி.9:13 வசனத்தில் “…நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள்” உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும். பரிசுத்தவான்கள் நமக்காக ஜெபிப்பார்கள். தேவனும் ஊழியர்களும் நம்மேல் பிரியமாய் இருப்பார்கள்.

ஆறாவதாக
எஸ்றா 2:69 வசனத்தில் “அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாகத் திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.” நாம் தேவனுக்கு கொடுக்கும்போது நமது திராணிக்குத் தக்கதாக கொடுக்க வேண்டும். பண வசதி, சம்பளம், வருமானம் அடிப்படையில் நிறைவாக கொடுக்க வேண்டும்.

ஏழாவதாக
1கொரி.16:2 “வாரந்தோறும் ஒழுங்காகவும் கிரமமாயும்” கொடுக்க வேண்டும். “…உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக…” கொடுக்க வேண்டும். தசமபாகத்தை பிரத்தியேகப் படுத்தி கொடுக்க வேண்டும்.


மேலும் மத்.6:1-4 வசனங்களில் கூறுவதுபோல மனுஷர் காணவேண்டும் என்று செய்யக் கூடாது. மனுஷர் புகழும்படியாகவும் நாம் தானம் செய்தால் பலனை இம்மையிலேயே அடைந்து தீர்ந்து விடுவோம்.
கடைசியாக மல்.3:10 வசனத்தில் நாம் பார்க்கும்போது, “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”. நமக்காக வானத்தில் பலகணிகள் திறக்கப்பட்டு ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமானால் சாவி நமது கையில்தான் உள்ளது. நீங்கள் தேவனுக்கு கொடுக்கும் விஷயத்தில் மன உற்சாகமாய், தாரளமாய் இருந்தால் நிறைவான நன்மையைப் பெறுவீர்கள். மேலும் உபா.14:29 வசனத்தில் யார் யாருக்கு நாம் கொடுக்க கடமைப்பட்டவர்கள் என்று தெளிவாகக் கூறுகிறார். “லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்”


இதை வாசிக்கும் பிரியமானவர்களே! தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க உங்கள் கையில் உள்ள ஆசீர்வாதத்தின் திறவுகோல்களை பயன்படுத்தினால் சம்பூரணமான ஆசீர்வாதங்களைப் பெற்று மேன்மையடையலாம்!


ஆமென்! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This