அது ஒரு 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய அமெரிக்க நகரத்தின் புறவழிச்சாலை. அதிலோ ஒரு பெண் 160 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தாள். அதை கவனித்த போக்குவரத்து போலீஸார் அவளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவள் செய்த குற்றத்தை விசாரித்த நீதிபதி அவள் அபராதமாக ஐந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அவள் தன்னிடம் பணம் இல்லை என்று கதறியழுதாள். அதைக் கவனித்த நீதிபதி பணம் இல்லையென்றால் ஒரு வார சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த நீதிபதி எழுதப்பட்ட தீர்ப்பு, தீர்ப்புதான் என்றும் அதை எவறாலும் மாற்ற முடியாது என்றும் உறுதிப்பட கூறினார்.
இதைக்கேட்ட அந்த இளம்பெண் மிகவும் அதிகமாக கதறியழுது என்னிடம் அபராதம் கட்ட பணமும் இல்லை. சிறைச்சாலை செல்வதற்கும் அஞ்சுகிறேன் என்றாள். அதைக்கேட்ட நீதிபதி சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது என்று எச்சரித்தார்.
ஆனால் அந்த இளம் பெண் தனக்கு இரக்கம் காட்டும்படியாக கெஞ்சி அழுதுகொண்டிருந்தாள். அப்பொழுது போலீஸாரும் அபராதத் தொகை யை வசூலிப்பவர்களும் ஆச்சரியப்படும் ஒரு சம்பவம் நடந்தது. அதென்னவெனில் நீதிபதி தனது இருக்கையை விட்டு எழுந்து தனது அங்கியை கழற்றி வைத்துவிட்டு அந்தப் பெண் இருக்குமிடம் அருகே வந்தார். மேலும் தனது பணப்பையை திறந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்து அபராதம் வசூலிப்பவரிடம் கொடுத் தார். பின்பு தனது இருக்கை சென்று அங்கியை அணிந்துகொண்டு உட்கார்ந்தார்.
இருக்கையில் அமர்ந்த நீதிபதி அந்த இளம் பெண்ணைப் பார்த்து, “உன் குற்றத்திற்கான அபராதத் தொகையை யாரோ செலுத்திவிட்டார்கள். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். நீ சந்தோஷமாக விடுதலை பத்திரம் வாங்கி வீடு செல்லலாம்” என்றார்.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! நமது ஆண்டவரும் அந்த நீதிபதியைப் போலவே நியாயஸ்தலத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு முன்பாக நாம் பாவம் செய்தவர்களாக காணப்படுகிறோம். அவர் நம்மைப் பார்த்து நீ பாவமே செய்யாத பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும். இல்லையென்றால் நரக வாழ்வு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறார். ஆனால் நாம் இரக்கத்திற்காக கதறியழும்போது நம்மிடம் செலுத்த ஒன்றுமில்லையென்பதை அறிந்து தனது ஒரே பேரான குமாரனை மனுவாய் அவதரிக்கச் செய்து சிலுவையிலே விலைக்கிரயத்தைச் செலுத்தினார். (மூன்றாம் நாள் உயிரோடெழுந்து நியாயாதிபதியாய் பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். இப்போதும் இரக்கத்திற்காக கெஞ்சுகிறவர்களை அவர் பரலோகத்திலிருந்து பார்த்து சொல்லுவது நான் எழுதப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது. ஆனால் உன்னுடைய குற்றத்திற்கான விலைக்கிரயம் செலுத்தப்பட்டு விட்டது என்பதே.
சற்றே சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்த நீதிபதியே பாவத்திற்கான பிராயசித்தத்தையும் செய்து முடித்து இருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் இலவசமாய் அளிக்கும் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்வதே.
இந்திய தேசத்தில் இந்த நற்செய்தியை அறியாதவர் ஆயிரம் ஆயிரமாய் நரக வழி செல்கின்றாரே, இதை அறிவிப்பவர் யாரோ?