மனிதன் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் நியமிக்கப் பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளது இறுதி நியாயத்தீர்ப்பு அல்லது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாகும். ஆனால் இயேசு கிறிஸ்து வரும்போது பூமியை நியாயம் தீர்ப்பார் என்று ஏனோக்கு முதல் தீர்க்கதரிசிகள் வரையிலும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்கள் பவுல், பேதுருவும் தெளிவாக கூறியுள்ளார்கள். ஆனால், நியாயத்தீர்ப்பைப் பற்றி பேசினால், யாரும் நம்புவதில்லை. இறுதி நியாயத்தீர்ப்பைக் கூட சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள். அது எப்பொழுதோ கண் காணாத காலத்தில் நடைபெறும் என்று அதைக் குறித்து கவலைப்படுவதில்லை. அதிலும், இந்த பூமி நியாயம் தீர்க்கப்படும் என்றால் நம்புவதில்லை. விசுவாசிகளும் நம்ப மறுக்கிறார்கள். காரணம் இயேசு அன்பானவர்; எனவே இப்படி நியாயத்தீர்ப்பு வருவதில்லை என்கின்றனர். இயேசு கிறிஸ்து அன்பானவர் என்பது உண்மைதான். ஆனால், இயேசு கிறிஸ்து அன்பானவர் என்று சொன்ன வேதப் புத்தகத்தில் தான், அவருடைய கோபத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இயேசு கிறிஸ்துவின் வருகையிலே பூமி நியாயம் தீர்க்கப்படும் என்பது உண்மை. எனவே இந்த உண்மையை உணர்ந்து நாம் மனந்திரும்ப வேண்டியது அவசியம்.
நோவாவின் காலத்தில் நடந்தது போல…
நோவாவின் காலம், பூமி செழிப்பாய் இருந்த காலம், ஜனங்கள் புசித்து, குடித்து திருப்தியாய் இருந்தார்கள். பூமி அழியும் என நோவாவுக்கு தேவன் சொன்னார். ஜனங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தால் 120 வருடம் நோவா பிரசங்கம் பண்ணினார். ஜனங்கள் ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத்.24:37)
நோவாவின் காலத்தில் புசித்தார்கள், குடித்தார்கள். இப்பொழுதும் அப்படியே நடைபெறுகிறது. நோவா ஜலப்பிரளயத்தைப் பற்றிப் பேசினார். ஜனங்கள் கேட்கவில்லை. தேவ ஊழியர்கள் பூமி நியாயந் தீர்க்கப்படும் எனப் பேசும்போது, ஒருவரும் கேட்கவில்லை. ஆனால் ஜலப் பிரளயம் திடீரென வந்தது. இயேசு கிறிஸ்துவின் வருகையும் அப்படியே இருக்கும். நாம் எச்சரிக்கையாய் இருந்து மனந்திரும்ப வேண்டியது அவசியமல்லவா!
லோத்தின் நாட்களில் நடந்தது போல…..
“லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்” (லூக்.17:28)
சோதோம் கொமோரா, பாவம் பெருத்த பூமி, ஜனங்கள் பாவத்தைத் தண்ணீரைப் போலப் பருகினார்கள். இந்தக் கடைசிக் காலத்திலும் அப்படித்தான் நடைபெறுகிறது. தேவ தூதர்கள் சோதோமை அழிக்கும் செய்தியைச் சொன்னபோது, மருமகன்களிடம் பேச அனுமதி கேட்டான். மருமகன்களிடம் பேசினான். அது அவர்களுக்குப் பரியாசம் போலத் தோன்றியது. இப்பொழுதும் அப்படித்தான். பாவம் பெருகிவிட்டது. அதுபோல, பூமி நியாயந்தீர்க்கப்படப் போகிறது என்றால் ஒருவரும் நம்புவதில்லை. பெரும்பாலான விசுவாசிகளே, நம்புவதில்லை. ஏனெனில் அத்தகைய நியாயத்தீர்ப்பைக் கண்களால் அவர்கள் பார்த்ததில்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற நோவா காலத்து நியாயத் தீர்ப்பையும், சோதோம் கொமோரா நியாயத்தீர்ப்பையும் மட்டுமே கேள்விப் பட்டிருப்பார்கள். ஆனால் கடைசி காலத்தில் வரும் நியாயத்தீர்ப்பை உணர்வதில்லை. அவர்கள் உணர்ந்திருந்தால் மனந்திரும்பியிருப்பார்கள். அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுத்தால் மனந்திரும்பி இருப்பார்களே எனக் கேட்கலாம். 2000 வருடங்களாக இயேசு கிறிஸ்து அருளும் இரட்சிப்பை தேவ ஊழியர்கள் அறிவித்து விட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காலம் முடிவடையப் போகிறது. அதற்குள் மனந்திரும்புங்கள்.
இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார்.