“அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்” (சங்.98:9)
நோவாவின் நாட்களில் முழு பூமியும் சடுதியாக வெள்ளத்தில் அழிந்தது. அதனால், தேவ எச்சரிப்பைக் கண்டு அவர்கள் மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் நியாயத்தீர்ப்பு படிப்படியாக நிறைவேறும். இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பின் நியாயத்தீர்ப்பின் காலம் தான். அவருடைய இரகசிய வருகைக்குப் பின்பு படிப்படியாக நியாயத்தீர்ப்புகள் நடைபெறும். ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு கோபகலசங்கள் என நியாயத்தீர்ப்பின் உக்கிரம் அதிகரிக்கிறது. ஆனால், இவைகளைக் கண்டும், தேவனுக்குப் பயந்து, தேவனை மகிமைப்படுத்தாமல் போகவே, இறுதியிலே தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிதாவின் கோபத்தை நிறைவேற்ற கண்களில் கோப அக்கினியோடும், வாயில் பட்டயத்தோடும் வருகிறார். அவருடைய வருகையின் நாளில் அவருக்கு எதிர்கொண்டு நிற்கத் தக்கவன் யார்?
“குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும் படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்.2:12)
ஆம்! இன்னும் கொஞ்சக் காலத்திலே, இயேசு கிறிஸ்துவின் வருகையிலே தேவ கோபம் பற்றியெரியும். ஆகவே இன்றே மனந்திரும்புவோம். இரக்கம் பெறுவோம்.
வருகையின் அடையாளம்
இயேசு கிறிஸ்து வருகையைக் குறித்த அடையாளங்களைத் தமது சீடர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில் பல இயற்கை அழிவுகளைப் பற்றிக் கூறும்போது, இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம் என இயேசு கூறுகிறார்.
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்.24:7,8)
பல வருடங்களுக்கு முன்பாக சுனாமி வந்து, தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களை வாரிக்கொண்டு போனது. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இத்தகைய அழிவுகள் வரும்போது, தேவனுக்குப் பயப்படுவது இயற்கை. தேவனுக்குப் பயந்து, மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே இத்தகைய பேரழிவுகள் வருகின்றன. அழிவைக் கண்டு பரிதவிக்கும் நாம் மனந்திரும்ப வேண்டும் என விரும்புகிறார். இவைகள் சின்ன துவக்கம் தான். இதில் வேதனைகளுக்கு ஆரம்பம் என்பது, மூல மொழிபெயர்ப்பில் பிரசவ வேதனைக்கு ஆரம்பம் என்ற வார்த்தையே பயன்படுத்தப் பட்டுள்ளது. பிரசவ வேதனை முதலில் விட்டுவிட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வரும். பிறகு கால இடைவேளை குறைந்து, பத்து நிமிடங்கள், ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அதிக வேதனையோடு வலிக்கும். அப்படித்தான். இது பிரசவ வேதனைக்கு முன் உள்ள வேதனை தான். அப்படியானால் பிரசவ வேதனையைப் போல வரப்போகும் உபத்திரவ காலமும், இயேசு கிறிஸ்துவின் வருகையும், எவ்வளவு பெரிய வேதனையை ஜனங்களுக்கு உண்டாக்கும்? அது வேதனையின் உச்சகட்டம். அந்த உபத்திரவத்தைக் குறித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாய்க் கூறுகிறார்.
“ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” (மத்.24:21)
ஆம்! கடைசி காலம் கொடிய காலம். உபத்திரவ காலம்; நியாயத்தீர்ப்பின் காலம். இவைகளுக்கெல்லாம் தப்பி இயேசு கிறிஸ்துவின் முன் அவரது இரகசிய வருகையிலே நிற்க ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகை நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும் வருகை. இயேசு கிறிஸ்துவின் வருகையைச் சித்தரிக்கும் வேதப் பகுதியை வாசித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து கண்களில் அக்கினி ஜுவாலையோடும், வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தோடு வருகிறார். அவருக்கு எதிராக ஒரு சேனை; அந்திக்கிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் அவருக்கு எதிராக நின்றனர். இயேசு கிறிஸ்து அவர்களை நரகத்தில் தள்ளினார். அவருடைய வாயின் பட்டயத்தால் பெரிய சேனை அழிந்தது. எனவே தான் கர்த்தருடைய வருகையை செப்பனியா தீர்க்கதரிசி இவ்விதமாய்க் கூறுகிறார்,
“கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக் கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்” (செப்.1:14,15)
இயேசு கிறிஸ்துவின் வருகை அவரை ஏற்றுக்கொள்ளாத அனைவருக்கும் நியாயந்தீர்க்கும் நாள். யாவரும் மனங்கசந்து அலரத்தக்கதான கொடிதான நாள். அது தேவ கோபத்தின் நாள். நாம் இப்பொழுது கிருபையின் காலத்தில் இருக்கிறோம். குமாரனின் கோபத்தை சந்தியாதபடிக்கு இன்றே மனந்திரும்புவோம். இயேசு கிறிஸ்து அதி சீக்கிரமாய் வருகிறார். மனந்திரும்புங்கள்.