மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் (500 AD) நூற்றாண்டு வரை எகிப்து நாட்டிலுள்ள பாலைவனங்களில் அநேக கிறிஸ்தவ துறவிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் புலன்களை அடக்கி, துறவு பூண்டு, ஜெபத்திலும், தியானத்திலும் தங்கள் வாழ் நாட்களைச் செலவிட்டனர். நமது ஆண்டவரும் நாற்பது நாள் வனாந்தரத்தில் தங்கி உபவாசம் செய்தாரல்லவா? பாலைவனத்து துறவிகளில் சின்ன அல்லது குள்ள பரி.யோவான் ஒருவராவர். இவரது உடலமைப்பு சிறியதாகவும், குள்ளமாகவும் காணப்பட்டது. இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அவர் வயது முதிர்ந்த துறவியின் அடியவனாக அவருக்கு பணிவிடை செய்து பாலைவனத்தில் வாழ்ந்தார். அந்த முதிர்ந்த துறவி இவரிடம் ஒரு மரக்கொம்பை கையில் கொடுத்து அதை பாலைவனத்தில் நட்டு வளரச் செய்ய வேண்டுமென்றும், ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அதற்கு ஊற்றி ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டுமென்றும் அவருடைய குரு அவரைப் பணித்தார். தம் குருவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, தினந்தோறும் அப்பணியைச் செய்துவந்தார். அம்மரக் கொம்பு துளிர்த்து காய்த்து, பலன் தந்தது, அதன் பழங்களை பறித்து அவைகளை முதற்பலனாக ஸ்தோத்திரத்துடன் சமீபத்திலுள்ள ஆலயத்தில் படைத்தார், பின்பு அவைகளை அங்குள்ள மக்களுக்கு அளித்து, “இவை கீழ்ப்படிதலின் பலன், சாப்பிட்டு திருப்தியாகுங்கள்” என்று சொன்னார். தாம் தம் குருவின் வார்த்தைக்குச் செவி கொடுத்து கீழ்ப்படிந்ததால் நல்ல பலனைக் கண்டதாக மகிழ்ந்தார்.
பாலைவனத்தில் நமக்கு என்று சிறு அறையைக் கட்டிக்கொண்டு, வேலை செய்யாமல் வாழ்நாட்களைச் செலவிடக் கூடாதென்று பரி.யோவான் கருதினார். எனவே சில சமயங்களில் பாய்களை முடைவார். சிலர் காரணமின்றி பரிகாசம் செய்தார்கள். கடுஞ் சொற்களை உபயோகித்தார்கள். அவர் எதையும் பொருட் படுத்தாமல் சாந்தமான முகத்துடனும் அமைதியான நடத்தையுடனும் நடந்து கொண்டார்.
ஒருநாள் அவர், ஆலயத்திற்கு செல்லும் வழியில் ஒரு துஷ்டன் வழிமறித்து, “நீர் விஷமான இருதயம் படைத்தவர்” என்று அவர் மீது பழி சாற்றினான். அதற்கு அவர், “நீர் சொல்வது மிக உண்மை. ஆண்டவரின் முன் நான் ஒரு நீசபாவி. நீர் நினைப் பதைக் காட்டிலும் அதிகமாகவே இருதயத்தில் விஷமுள்ளவனாக இருக்கலாம்” என்று சாந்தத்துடன் பதிலளித்தார்.
சின்ன யோவான் உலகப் பற்று சிறிதேனும் இல்லாதவராக வாழ்ந்தார். உலகக் காரியங்களைக் குறித்து அவருடன் எவரேனும் அளவளாவுவதை விரும்பமாட்டார். துறவிகள் கூட்டத்தில் ஒரு துறவி நகைச்சுவையுடன் பேசினார். பரி.யோவான் அதை விரும்பவில்லை. “நாம் நம் நாட்டின் நிலைமையைக் குறித்து அழுது, அது கிறிஸ்து வைப் பற்றி அறிகிற அறிவில் வளருவதற்கு ஆவன செய்வதற்கு கூடி வந்திருக்கையில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது” என்று கண்டித்தார்.
நெறி தவறி வாழ்ந்த பெய்சியா என்ற பெண்ணை பரி.யோவான் சந்தித்து சீரான நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று சிலர் வேண்டினர். பரி.யோவான் அதைக் குறித்து கடவுளிடம் ஜெபத்தில் மன்றாடி பெய்சியாவின் வீட்டிற்குச் சென்றார். பெய்சியா முதலில் கதவைத் திறக்க மறுத்தாள். பின்னர் கதவைத் திறந்து உள்ளே வரும்படி அவரை அழைத்தாள். வீட்டிற்குள் பிரவேசித்தவுடன் அவர் “இயேசு பெருமான் உனக்கு என்ன துரோகம் செய்தாரென்று அவரை விட்டு விலகிப் போனாய்?” என்று சொல்லி அழுதார். அவள் திகைத்து “என்னைக் கண்டு ஏன் இவ்வாறு அழுகிறீர்?” என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு அவர், “சாத்தான் உன்னில் குடி கொண்டு உன்னை விட்டுப் போகமாட்டேனென்று இருக்கும் நிலைமையைக் கண்டு நான் அழாமல் என்ன செய்வது” என்றார். அவருடைய தூய்மையான முகத்தையும், அவருடைய வார்த்தைகளையும் கேட்டு இருதயத்தில் நொறுக்கப்பட்டாள். “என்னைப் போல பாவத்தில் உழன்று கிடக்கும் ஒரு பாவிக்கு பரலோக வாசல் திறக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன்” என்று அவள் சொன்னாள். அதற்கு அவர் கடவுளின் கிருபைக்கும் அன்பிற்கும் அளவில்லை என்று பதிலளித்தார். “நீர் இப்பொழுதே அவரிடம் என்னை அழைத்துச் செல்லும்” என்று சொல்லி, தன்னுடைய பணியாட் களையும், தன் வீடு, உடமை ஒன்றையும் திரும்பிப் பாராமல் அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவருடன் புறப்பட்டு மடத்தில் சேர்ந்து சிறந்த கிறிஸ்தவ அடியாளாகி தொண்டாற்றினார்.
பரி.யோவான் தமது கடைசி நாட்களில் அவர் தம் அடியார்களுக்கு சொன்னதாவது, “என் மன விருப்பத்தின்படி நான் ஒன்றும் செய்யவில்லை. மேலும் கடவுளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணி என்னவென்று என் அனுபவத்தில் அறிந்தவைகளை நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். உங்களால் இயலாதவைகளை நீங்கள் செய்யும்படி நான் உங்களுக்குப் போதிக்கவில்லை. கடவுள் உங்களோடிருப்பாராக”. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பக்தன் ஆண்டவரின் அழைப்புப் பெற்று, அவருடைய திருப்பாதம் சேர்ந்தார்.