ஒருமுறை நான் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது, எனக்கு அருகில், உயர் பதவியிலிருந்த இஸ்லாமியர் ஒருவர், என்னைப் பார்த்து, புன்முறுவலுடன், “சலாம் ஆலேக்கும்” என வந்தனம் செய்தார். நானும் பதிலுக்கு “ஆலேக்கும் சலாம்” என வந்தனம் செய்தேன். அவருடைய தோற்றமே, அவரை பெரிய அறிஞர், மேலும் உயர் பதவியிலுள்ள இஸ்லாமியர் என அடையாளம் காட்டியது. அவர் ஒரு சிறப்பான குல்லா அணிந்திருந்தார். மேலும் தாடியையும் வைத்திருந்தார்.
அவர் என்னிடம் நீங்கள் இஸ்லாமியரா? எனக் கேட்டார். நான் அவரிடம், இல்லை நான் ஒரு கிறிஸ்தவன் எனக் கூறினேன். உடனே அவர் என்னிடம், தன்னுடைய ஆழ்ந்த, இஸ்லாமியக் கொள்கைகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். மேலும் தொடர்ச்சியாக, அவர் என்னிடம் “இயேசுவை தேவனுடைய ஒரே குமாரன்” என எப்படி நம்புகிறீர்கள்? எனக் கேட்டார். எங்களைப் பொறுத்தவரை அல்லா ஒருவரே கடவுள். முகமது ரபியைப் போல, ஈஸா நபியும் ஒரு இறை தூதரே என வாதம் செய்தார். மேலும் அவர் என்னிடம், இயேசுவை கடவுள் என நிருபிக்க முடியுமா? எனக் கேட்டார்.
நான் அவரிடம், ஐயா இறை மைந்தன் இயேசுவின் கன்னிப் பிறப்பே, அவரை இறைவன் என வெளிப்படுத்துகிறதே? வேறு என்ன அத்தாட்சி வேண்டும் எனக் கேட்டேன்?
அதற்கு அவர், இயேசு கன்னியிடம் பிறந்தார் என யார் கூறினார்கள்? எனக் கேட்டார். உடனே நான் “இறைவனால், தம்முடைய பக்தர்கள் மூலம் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமமே கூறுகிறது. வேறு என்ன சான்று உங்களுக்கு வேண்டும்” எனக் கேட்டேன்
உடனே அவர் ஆர்வமாக, அந்தப் பகுதியை எனக்குக் காட்டுங்கள் எனக் கேட்டார். நானும் அவருக்கு, வேதாகமத்திலிருந்து மத்.1:18ல், நமது ஆண்டவரின் கன்னிப் பிறப்பை பற்றி எழுதப்பட்ட வசனங்களை எடுத்துக் காட்டினேன்.
அந்த இஸ்லாமிய அறிஞர், ஆர்வத்தின் மிகுதியால், மீண்டும், மீண்டுமாக அந்த வேதப் பகுதியை வாசித்துப் பார்த்து முழுமையாக, இயேசுவே தேவனுடைய ஒரே பேறான குமாரன், இறைவன் என ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் என்னிடம், ஐயா நாங்கள் அடிக்கடி “இஸ்லாமிய – கிறிஸ்தவ” விவாதங்கள் நடத்துவதுண்டு. அதில் பங்கேற்கும் கிறிஸ்தவ அறிஞர்கள், இப்படிப்பட்ட மேன்மையான உண்மையை, இதுவரை சொன்னதேயில்லை என வருத்தப்பட்டார். அவர்கள் பல்வேறு விவாதங்களை எடுத்து வைப்பது உண்டு. ஒருவர் கூட இப்படிப்பட்ட பேருண்மையை கூறியதேயில்லை எனக் கூறினார்.
வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு வசனமும், பெரிய மனதை உடைக்கும் மாபெரும் சம்மட்டி, எனவே, வசனத்திலிருந்து மாத்திரம் விளக்கம் கொடுப்போம், வார்த்தையாகிய அவர் மாபெரும் கிரியை செய்வார். ஆமென்.