இயேசு சிலுவை பாதையில் சந்தித்த நபர்கள்

Written by Pr Thomas Walker

April 21, 2006

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் பாடுகள் நிறைந்தது. “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்று மாற்.8:34ல் வாசிக்கிறோம். சிலுவையில்லாமல் மேன்மையில்லை, பாடுகள் மூலமே பரலோகம் சென்றடைய முடியும். இயேசு சிலுவை பாதையில் பல பாடுகளை ஏற்றார்.
இயேசு சிலுவை பாதையில் சந்தித்த ஐந்து விதமான நபர்களை இங்கு பார்க்கலாம்.

முதலாவதுபிரதான ஆசாரியர்
பிரதான ஆசாரியர் பொறாமையினால் இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள் (மத்.27:17; மாற்கு 15:9). இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அதிகாரமுடையவராய் உபதேசித்து அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தபடியால் திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள். மாய்மாலக்காரராய் இருந்துகொண்டு ஜனங்களை வஞ்சித்த பிரதான ஆசாரியர் இயேசுவின் புகழைக் குறித்து கேள்விப்பட்டபோது, அவர்மீது பொறாமைக் கொண்டார்கள். அவரைத் தந்திரமாய்ப் பிடித்து கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள் (மத்.26:3,4). அவரை சிலுவையில் அறைந்து கொலையும் செய்தார்கள். மேசியாவை உலகிற்குக் காட்ட வேண்டியவர்கள், மேசியாவைக் கொலை செய்தார்கள். நம்மைவிட தாலந்துகளிலும், திறமைகளிலும், ஊழியப் பாதையிலும் முன்னேறியவர்களைப் பார்த்து ஒருபோதும் பொறாமைப்படக் கூடாது. தேவராஜ்ஜியம் கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருக்க வேண்டும். சிலர் பொறாமையினால் பிரசங்கிக்கிறார்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார். “பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?” என்று நீதி.27:4ல் பார்க்கிறோம். போதுமென்கிற மனம் இல்லாதபோது பொறாமை உண்டாகிறது. பிரதான ஆசாரியர்கள் பொறாமை கொண்டதால் தேவகுமாரன் சிலுவையில் அறையப்பட்டார்.

இரண்டாவதாகபிலாத்து
இயேசுவின் மேல் எந்த குற்றமுமில்லை என்று பிலாத்து அறிவான் (யோவான் 19:4) அவனது மனைவி இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்டாள். ஆனாலும் பிலாத்து அவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான். முதலாவது காரணம் அவன் மனிதரைப் பிரியப்படுத்த விரும்பினான் (மாற்கு 15:15). இரண்டாவது தனது பதவியைக் காத்துக்கொள்ள விரும்பினான் (யோவான் 19:12). மனிதரைப் பிரியப்படுத்தினால் தான் நன்றாக இருக்கலாம் என்று எண்ணி இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான். தீமை செய்து மனிதரை ஒருபோதும் பிரியப்படுத்தக் கூடாது. இயேசுவின் அருமை, அவரது விலை என்ன என்று தெரியாததால் இயேசுவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக்கொடுத்தான்.
‘இயேசு தன்னை யூதர்களுக்கு இராஜா வென்கிறார்’ அவரை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்க விரோதி என்று யூதர்கள் சத்தமிட, பயந்தான் (யோவான் 19:12) பதவியைக் காப்பாற்றத் துடித்தான்.
நாம் ஒருபோதும் மனுஷரைப் பிரியப்படுத்தக் கூடாது. தேவசித்தம் செய்ய நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” (எபே.6:6).

மூன்றாவதுயூதாஸ்காரியோத்து
இயேசுவோடு மூன்றரை வருடங்கள் கூட இருந்தவன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். யூதாஸின் எண்ணங்களை இயேசு அறிந்தபோதிலும் உணர்ச்சிவசப்படவில்லை. கடைசி வேளையிலும் சிநேகிதனே என்று அழைக்கக்கூடிய உள்ளத்துடனே அவனை நேசித்தார். யூதாஸ் இயேசுவுக்கு உண்மையாயிருக்கவில்லை. “நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்” என்று பிரதான ஆசாரியனிடம் பேரம் பேசி தன் எஜமானையே காட்டிக் கொடுக்கத் துணிந்தான். இயேசுவா? பணமா? என்று வந்தபோது யூதாஸ் பணத்தையே தெரிந்துகொண்டான்.
இயேசுவோ யூதாஸை முடிவு வரை நேசித்தார். யூதாஸ் பொருளாசையால் இயேசுவின் அன்பை மறந்தான். இயேசுவை விடப் பெரிதாக உங்கள் வாழ்க்கையில் ஏதாவது இருக்குமானால் அதை உடனே தூக்கி எறிய வேண்டும். ஆரம்பத்திலேயே அதை உணர வேண்டும். யூதாஸ் பொருளாசையால், இயேசுவுடன் ஏற்பட்ட அன்பு, ஐக்கியம், உறவு, ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இழந்தான்.
யூதாஸ் பொருளாசையால் விரோதிகளுடன் உடன்படிக்கை செய்தான். தன் சுயகௌரவத்தைக் காப்பாற்ற வாக்குக்கொடுத்ததை நிறைவேற்றினான். இயேசுவைக் காட்டிக்கொடுக்க தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தான் (மாற்கு 14:11). பொருளாசை வந்ததும் தீய சிந்தனை அவன் உள்ளத்தை நிறைத்தது. நேசிப்பவன் போல் முத்தமிட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். வெளியே முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துவது போல் காணப்பட்டாலும் உள்ளத்தில் துர்க்கிரியையாகிய பட்டயம் கிரியை செய்தது. நாமும் தேவனை நேசிப்பது போல் வெளியே காட்டிக்கொண்டு உள்ளே துர்க்கிரியையாகிய பொறாமை, எரிச்சல் போன்றவற்றால் நிறைந்திருக்கக் கூடாது. யூதாஸ் தப்பிதத்தை உணர்ந்தான், ஆனால் யாருக்கு விரோதமாக தப்பு செய்தானோ அவரிடம் போய் அறிக்கையிடவில்லை. யூதாஸ் இயேசுவிடம் போய் மன்னிப்பு கோராமல் விரோதிகளிடம் போனான். மனந்திரும்ப இயேசு சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறார். நாம் பாவங்களை சரியான முறையில் அறிக்கையிட வேண்டும். அறிக்கை செய்து பின் விட்டுவிட வேண்டும்.

நான்காவதுபோர்ச்சேவகர்கள்
இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்பது பிலாத்துவின் கட்டளை. ஆனால் அதை நியாயமாய் செய்யவேண்டிய போர்ச்சேவகர்கள் வரம்பை மீறினார்கள். குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கு பதிலாக இயேசுவை அதிகமாக துன்பப்படுத்தினார்கள். அவர் வஸ்திரங்களை கழற்றி சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு, யூதருடைய ராஜாவே, வாழ்க என்ற அவரை பரியாசம் பண்ணி,
அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரை சிரசில் அடித்தார்கள்.
“அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்” என்று மத்.27:28-31 வசனங்களில் வாசிக்கிறோம். பிரதான ஆசாரியரின் புகழைப்பெற, பணத்தைப் பெற விதிகளை மீறி இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள். “ஒரு நீதிமானும் தண்டிக்கப்படக் கூடாது” என்ற வேதத்தில் சட்டம் எழுதப்பட்டுள்ளது. அதை மீறினார்கள். குற்றம் செய்யாதவரை குற்றவாளியாகத் தண்டித்தார்கள்.

ஐந்தாவதுவழிப்போக்கர்கள்
“அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்ற அவரைத் தூஷித்தார்கள்” (மத்.27:39,40). இந்த வழிப்போக்கர்கள் உண்மை தெரியாதவர்கள். கேட்டதை வைத்து நியாயம் தீர்த்தார்கள். இயேசுவை கேலி செய்து பரியாசம் பண்ணினார்கள். நாமும் உண்மை எது என்று தெரியாமல் காதில் கேட்டதை வைத்து மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது.


“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” (1கொரி.1:18).






Author

You May Also Like…

Share This