நம்முடைய தேவன் யாக்கோபின் தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவன் யாக்கோபை தாயின் கர்ப்பத்திலேயே தெரிந்துகொண்டு அவனை சிநேகித்தார் (ரோமர் 9:11-13). யாக்கோபோ எத்தனாகக் (பிறரை ஏமாற்றுகிறவனாக) காணப்பட்டான். அவனுடைய வழிகள் தேவனுடைய வழிகளாக இருக்கவில்லை. அவனுடைய குணாதிசயங்கள் தேவனுடைய குணாதிசயங்களாக இருக்கவில்லை. ஆனாலும் தேவன் அவனைத் தெரிந்துகொண்டார். தேவன் அவனை அழைத்தார். எத்தனாக இருந்த அவனை தேவன் இஸ்ரவேலாக மாற்றினார்.
யாக்கோபின் ஜீவியத்தில் காணப்பட்ட ஏழு குணாதிசயங்களை இங்கு ஆராயலாம்.
முதலாவதாக யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான்
கூடாரவாசி என்பது சபைக்கு ஒழுங்காக வந்து ஆராதிக்கும் ஒரு விசுவாசியைக் குறிக்கிறது. யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக தாய்க்கும் தகப்பனுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருந்தபோதும் பிறரை ஏமாற்றும் குணம் அவனிடம் காணப்பட்டது. இன்றும் ஆராதிக்கும் அநேகரிடம் பாவங்களை விட்டோய்தலும் பரிசுத்தமும் இல்லாதிருக்கிறது. கூடாரவாசியாக தேவனுடைய ஆலயத்தில் பணிவிடை செய்த யோசுவா தலைவனாக உயர்த்தப்பட்டான். தாவீது கர்த்தருடைய ஆலயமாகிய கூடாரவாசலில் காத்திருப்பதையே தெரிந்துகொண்டான். ஆவியின் கனிகள் காணப்படும் நம்மிடமும், பொறாமை, எரிச்சல், கோபம் போன்ற சில குறுநரிகள் காணப்பட்டு ஆவிக்குரிய திராட்சத் தோட்டத்தைக் கெடுக்கிறது. அவற்றை நாம் களைய வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான குணசாலியாக மாற முடியும்.
இரண்டாவதாக யாக்கோபு தேவனுடைய ஆசீர்வாதங்களை ஏமாற்றிப் பெற நினைத்தான் (ஆதி.27:19)
வேட்டையாடி களைத்து வந்த ஏசா யாக்கோபிடம் கூழைக் கேட்டான். ஆனால் யாக்கோபோ தந்திரமாக அவனிடம் கூழுக்குப் பதிலாக சேஷ்டபுத்திரபாகத்தைக் கேட்டான் (ஆதி.25:31). யாக்கோபு குறுக்கு வழியில் மூத்தவனின் இடத்தைப் பிடிக்க எண்ணினான். மற்றவர்களை ஏமாற்றி நேரம்பார்த்து வஞ்சித்து, சிறிய ஒன்றைக் கொடுத்துவிட்டு பெரிய காரியத்தை எதிர்பார்ப்பது சரியல்ல. ஏமாற்றுகிற, வஞ்சிக்கிற அனுபவம் அசுத்தத்தை நோக்கி ஓடும் ஓட்டமாகும். யாக்கோபு ஏமாற்றி சேஷ்டபுத்திரபாகத்தைக் கைப்பற்றியதால் அதை அவன் தன் ஆயுள்காலம் முழுவதும் அனுபவிக்க இயலாமல் போனது. நம்முடைய தேவன் நீதிபரர், வனாந்தரத்தில் வியர்வை சிந்தி வேட்டையாடி பிடித்த மிருகத்தை சுவையாக சமைத்து வந்த, ஏசாவுக்கு வரவேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபு எவ்வித கஷ்டமும், பிரயாசமும் இன்றி ஏமாற்றிப் பெற்றுக்கொண்டான். கடின உழைப்பும் பிரயாசமும் இல்லாமல் குறுக்கு வழியில் மற்றவர்களுக்குச் செல்ல வேண்டிய ஆசீர்வாதங்களை எடுத்துக்கொள்ள நினைப்பது தவறானதாகும். இப்படி நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்கள் நம்மைவிட்டு அகன்றுபோகும்.
மூன்றாவதாக தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபு இரட்டை வேஷம் போட்டான் (ஆதி.27:22)
ஏசாவை, ஈசாக்கு ஆசீர்வதிக்க விரும்பினான். ஆனால் அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபு வேஷம்மாறி தந்திரமாக பெற்றுக்கொண்டான். முதலாவதாக தகப்பனை ஏமாற்றினான். இரண்டாவதாக தனையனை ஏமாற்றினான். அவனுடைய வாழ்க்கை இரட்டை வேஷம் போடும் மாய்மால வாழ்க்கையாக இருந்தது. நமது சத்தம், நடை, உடை, பாவனைகள் நம்மைக் காட்டிக்கொடுக்கக் கூடியதாக உள்ளது. சபையில் ஒரு வாழ்க்கை, வெளியே ஒரு வாழ்க்கை என வாழக்கூடாது. வெளி உலகத்திற்குள் செல்லும்போது பரிசுத்தவான்போல், தேவ மனிதன்போல் காட்ட விரும்புகிறோம். யெரோபெயாமின் மனைவி வேஷம் மாறி வேறு பெண்போல் தீர்க்கதரிசி முன்பாக வந்ததை தேவன் உணர்த்தினார் (1 இராஜா.14:2-5) இருக்கிற வண்ணமாகவே மறைக்காமல் நம்மை தேவனிடம் காட்ட வேண்டும். அதையே தேவன் விரும்புகிறார். அப்பொழுதுதான் தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியும்.
நான்காவதாக யாக்கோபு கர்த்தரை பல நிபந்தனைகளோடு தன் தேவனாக ஏற்றுக்கொண்டான் (ஆதி.28:20,21)
“அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்” என்று ஆதி.28:20,21ல் வாசிக்கிறோம்.
கர்த்தர் என் தேவைகளை சந்திப்பாரானால் அவரை என் தேவனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று யாக்கோபு கர்த்தருக்கு நிபந்தனை விதித்தான். ஆண்டவருக்கு நிபந்தனையின்றிக் கீழ்ப்படியும் கீழ்ப்படிதலே நமக்குத் தேவை. கர்த்தருக்கு நிபந்தனை விதிக்க நமக்கு உரிமையில்லை. பொருத்தனை பண்ணும்போது இதைச் செய்தால் இதைச் செய்வேன் என்று தேவனோடு பேரம் பேசுவது சரியல்ல.
ஐந்தாவதாக யாக்கோபின் தெரிந்துகொள்ளுதல் தவறாயிருந்தது (ஆதி.29:17)
ராகேல் அழகாயிருந்தபடியால் யாக்கோபு அவளை நேசித்தான். அழகு வஞ்சனையுள்ளது. அழகின்பின் யாக்கோபு போனதால் வாழ்க்கையை விற்றுப்போட்டான். அவளுக்காக பதினான்கு ஆண்டுகள் கடின உழைப்பு உழைக்க வேண்டியதாயிற்று. ராகேல் மூலம் விக்கிரகங்கள் கூடாரத்தில் வந்தது. பரிசுத்தவான்களுடன் ராகேல் அடக்கம் பண்ணப்படவில்லை. வழியருகே அடக்கம் பண்ணப்பட்டாள். லேயாள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவள். தேவனைத் துதித்து தன் மகனுக்கு யூதா என்று பேரிட்டாள். யூதாவின் வம்சத்தில் இயேசு கிறிஸ்து தோன்றினார். தவறான தெரிந்துகொள்ளுதலினால் அவனது வாழ்க்கையில் பதினான்கு ஆண்டுகள் வீணாயிற்று.
ஆறாவதாக யாக்கோபு குறுக்குவழியில் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவனாயிருந்தான் (ஆதி.30:37-43)
தவறான வழியில் லாபானின் ஆடுகளை தன் வசப்படுத்திக்கொண்டான். லாபானை ஏமாற்றினான். குறுக்கு வழியில் ஆசீர்வதிக்கப்பட நினைத்தான். நாம் சம்பாதிக்கும் முறை எப்படிப்பட்டது என்பது முக்கியம். ஆவிக்குரிய கிறிஸ்தவ உலகிலும் தவறான வழியில் சம்பாதித்து மேன்மையடைய நினைக்கும் பலரைப் பார்க்கிறோம். ஒரு கிறிஸ்தவன் கள்ளக் கணக்கு காட்டக் கூடாது. இயேசு ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்தும்படி கூறுகிறார். இரட்சிக்கப்பட்ட ஒரு தேவப் பிள்ளையால் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கவே முடியாது. வட்டிக்கு பணத்தைக் கொடுத்து சம்பாதிக்கக் கூடாது (சங்.15:5), பரிதானம் (லஞ்சம்) வாங்கி சம்பாதிக்கக் கூடாது (சங்.15:5). இப்படிப்பட்ட பணத்தை கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்துவோமானால் கர்த்தர் அதை அருவருக்கிறார்.
ஏழாவதாக மனுஷனுக்கு பயப்படும் பயம் யாக்கோபிடம் காணப்பட்டது (ஆதி.33:1-10)
யாக்கோபின் வழிகள் உண்மையான வழிகளாக இல்லாதபடியினாலே ஏசாவுக்குப் பயந்தான். சாஷ்டாங்கமாய் விழுந்து அவனை வணங்கினான். ஒன்றான மெய் தேவனாகிய கர்த்தரை வணங்க வேண்டிய அவன் தன் சகோதரனை வணங்கினான். தேவனுக்குப் பயப்படும் பயம் நம்மில் காணப்பட்டால் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார், நாம் மனுஷருக்குப் பயப்படத் தேவையில்லை. மனுஷருக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும், நாம் கர்த்தருக்கு பயப்படும் போது அவர் நம் பட்சத்திலிருப்பார்.
என் தாசனாகிய யாக்கோபே நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே என்று தேவன் யாக்கோபை அழைக்கிறார். யாக்கோபை அழைத்த தேவன், எத்தனாக இருந்த அவனை இஸ்ரவேலாக மாற்றினார். தேவன் நம்மை அழைத்த அழைப்பு பரிசுத்த அழைப்பு. நாமும் நமது பழைய சுபாவங்களை களைந்துவிட்டு புதிதாக்கப்பட்ட உள்ளான மனுஷனை தரித்துக்கொள்வோமாக. அவர் அழைத்த அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதவைகள். நாம் அந்த அழைப்புக்கு பாத்திரமாய் நடந்துகொள்வோமாக!