யாக்கோபின் கூடாரங்கள்

Written by Pr Thomas Walker

May 21, 2006

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தேவன் தான் நேசித்த யாக்கோபைக் குறித்தும் அவனுக்கு தான் அளிக்கப்போகும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் ஏசாயா 43ல் குறிப்பிடுகிறார். “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்” (ஏசா.43:1) என ஆரம்பித்து பல வாக்குறுதிகளை யாக்கோபுக்குக் கொடுத்தவர் ஏசாயா 43:4ல் “நீ என் பார்வைக்கு அருமையான படியினால் கனம்பெற்றாய்;” என்று குறிப்பிடுகிறார். கர்த்தருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலை சபிக்கும்படியாக, பாலாக் என்னும் மோவாபிய ராஜாவிடம் கூலி பெற்றுக்கொண்டான், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய பிலேயாம். ஆனால் அதை கர்த்தர் அனுமதிக்கவில்லை. இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டான். “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண்.24:5) என்ற கூறி அவர்களை ஆசீர்வதித்தான்.


இஸ்ரவேலின் கூடாரங்கள் எகிப்திய கூடாரங்களைப் போல அழகாக இருந்திருக்க முடியாது. அவைகள் சாதாரண கூடாரங்கள், ஆட்டுத் தோலால் ஆனது. அது உலகப்பிரகாரமாக அழகற்றதாயிருந்தாலும் தேவனுடைய பார்வையில் அழகானது.
ஏன் யாக்கோபின் கூடாரங்கள் தேவனுடைய பார்வையில் அழகானவைகளாகக் காணப்பட்டது.

முதலாவதாகயாக்கோபின் கூடாரங்கள் ஆசரிப்புக் கூடாரத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருந்தது
“மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.” என்று எண்.9:17ல் பார்க்கிறோம்.
ஆசரிப்புக் கூடாரம் தேவ பிரசன்னத்தைக் குறிக்கிறது. இஸ்ரவேலின் கூடாரம் தேவனை மையமாகக் கொண்ட, தேவ பிரசன்னத்தால் நிறைந்த கூடாரம், தேவனை மையமாகக் கொண்ட ஊழியங்களில் தான் தேவன் பிரியப்படுவார்.

இரண்டாவதாகயாக்கோபின் கூடாரங்கள் தேவன் கூறிய ஒழுங்கின்படி கட்டப்பட்டவை
வேத வசன ஒழுங்கின்படி கட்டப்பட்ட கூடாரங்களே ஆசீர்வதிக்கப்பட முடியும். “லோத்து… சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்” (ஆதி.13:12). சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். ஆனால் ஆபிரகாம் கர்த்தர் சொன்ன இடத்தில் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தையும் கட்டினான் (ஆதி.13:14-18). அதனால் அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டது. லோத்தின் சந்ததி சபிக்கப்பட்டது. நம்முடைய கூடாரங்கள் கர்த்தருடைய வார்த்தையின்படி கட்டப்பட்ட கூடாரங்களாக இருக்கவேண்டும்.

மூன்றாவதாகயாக்கோபின் கூடாரங்கள் ஸ்திரமானதல்ல; பெயர்த்துப் போடக் கூடியது
இது பரதேசியின் வாழ்க்கையைக் குறிக்கிறது. இது தேவ சித்தத்தின்படி, எங்கு தேவன் அழைக்கிறாரோ அங்கு போக ஒப்புக்கொடுக்கிற வாழ்க்கையாகும். இது விசேஷமானது, விசுவாசத்தினாலே ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போலச் சஞ்சரித்து அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராக ஈசாக்கோடும், யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான். (எபி.11:9) கூடார வாழ்க்கை நித்தியத்தை உணர்த்தும் வாழ்க்கை.
நான்காவதாகஇஸ்ரவேலின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தமுண்டு
“நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு;” என்று சங்கீதம் 118:15ல் பார்க்கிறோம். யாக்கோபின் கூடாரம் கர்த்தரைத் துதித்துப் போற்றும் கூடாரம். நம்முடைய தேவன் இஸ்ரவேலின் துதிகளில் பிரியப்படுகிற தேவன். இஸ்ரவேலின் கூடாரங்களில் பற்கடிப்பு, அழுகை, முறுமுறுப்பு, கூக்குரல் காணப்படுமானால் கர்த்தர் அதை ஆசீர்வதிக்க முடியாது. முறுமுறுப்பின் கூடாரங்கள் அவருடைய பார்வையில் அருமையானதாக இருக்க முடியாது. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்த இஸ்ரவேலரை கர்த்தர் அழித்தார். (சங்.106:25,26).


ஐந்தாவதாகசாபத்தீடானது இஸ்ரவேலின் கூடாரத்தில் இல்லை
ஆகான் தேவன் விலக்கின சாபத் தீடானதை தன் கூடாரத்தில் மறைத்து வைத்தபடியால், எரிகோவை வெற்றிகண்ட இஸ்ரவேலர் சிறிய ஆயி என்ற ஊரைக் கைப்பற்ற முடியாமல் தோற்றுப்போனார்கள், (யோசுவா 7:1-5). “நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்” (யோசுவா 7:12) என்று கர்த்தர் யோசுவாவோடு பேசினார். சாபத் தீடானது கூடாரத்தைவிட்டு அகற்றப்பட்டபோது இஸ்ரவேல் புத்திரர் வெற்றி பெற்றார்கள். தேவன் விலக்கின சாபத்தீடானவைகள் நம் வாழ்க்கையில் காணப்படும்போது நாம் தேவனுடைய பார்வையில் அழகானவர்களாக இருக்க முடியாது.

ஆறாவதாகஇஸ்ரவேலின் கூடாரம் பரிசுத்தவான்களை உபசரிக்கும் கூடாரம்
ஆபிரகாம் தன் கூடாரத்திற்கு வந்த புருஷர்கள் கர்த்தரும் அவருடைய தூதர்களும் என்பதை அறியாதிருந்தும் அவர்களை உபசரித்தான் (ஆதி.18:1,2,3). அதனால் ஆபிரகாமின் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டது. நாம் பரிசுத்தவான்களின் குறைவுகளில் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். அவர்களை உபசரிக்கிறவர்களாக இருக்கவேண்டும். “சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கூறகிறார் (மத்.10:42). பரிசுத்தவான்களை உபசரிக்கும் கூடாரம் கர்த்தருடைய பார்வையில் அருமையானது.

ஏழாவதாகஇஸ்ரவேலின் கூடாரம் காத்திருக்கும் கூடாரம்
இஸ்ரவேலின் கூடாரம் ஆண்டவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கூடாரம். “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்” என்று 2கொரி.5:1ல் பார்க்கிறோம். ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்து, தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான் (எபி.11:10). தேவனுக்காக காத்திருக்கும் கூடாரங்களே அழகானவைகள்.


ஆண்டவர் நமக்கு சொந்தம், நாம் அவருக்கு சொந்தம் என்ற இணைப்புள்ள கூடாரம் அழகானது; விசேஷமானது.






Author

You May Also Like…

Share This