ஜெபிக்காமல் இருப்பது பாவம்

Written by Pr Thomas Walker

February 3, 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

ஒருவன் கிறிஸ்தவனாக ஜீவிப்பதின் மேன்மையே இரட்சிப்பு தான். மனந்திரும்பிய பின் செய்யப்படும் ஜெபமே கணக்கில் சேர்க்கப்படுகிறது. எனவே ஜெபியாமல் இருப்பது பாவம், ஜெபத்தின் மூலம் தேவன் சகலவிதமான ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் தேவன் நமக்குத் தந்தருளுவார். நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர் என்று தாவீது கூறுகிறார். மேலும் சாமுவேல் தீர்க்கத்தரிசி, “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்” (1சாமு.12:23) என்று கூறுகிறார். அப்.9:11 வசனத்தில், “அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்” என்று பவுலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

தேவன் நம்மை சிலருக்கு காவலாளியாக ஜாமக்காரனாக வைத்திருப்பார். அதை சரியாகச் செய்யாவிட்டால் தேவன் கணக்கு கேட்பார். நாம் ஜெபிக்காவிட்டால் பாவம் செய்கிறவர்களாக இருப்போம். ஒரு மனிதன் தன் சொந்த குடும்பத்திற்காக போராடி ஜெபிக்க வேண்டும். கணவன், மனைவி ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டும், பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும்.

1) சகோதரருக்காக ஜெபிக்க வேண்டும்:

ஆதி.18:32ஆம் வசனத்தில், “அப்பொழுது ஆபிரகாம்” ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக, நான் இன்னும் இந்த ஒருவிசை மாத்திரம் பேசுகிறேன். பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர் பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். ஆபிரகாம் தனது சகோதரனின் மகனுக்காக தன் ஜீவனை பணயம் வைத்து ஜெபித்தான். நமது சகோதரர்களுக்காக நாம் கடனாளிகள். நாம் ஜெபிக்க வேண்டும். திறப்பின் வாசலில் நிற்க வேண்டும். உன் சகோதரன் சண்டையோடு வேறு பிரிந்திருந்தாலும், எப்படிப்பட்ட சகோதரனாக இருந்தாலும் பகைத்தாலும் ஜெபிக்க வேண்டும். சகோதரனுக்காக சகோதரன் ஜெபிக்க வேண்டும்.

2) புருஷன் மனைவிக்காக ஜெபிக்க வேண்டும்:

ஆதி.25:21ஆம் வசனத்தில், “மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்” ஈசாக்கின் மனைவிக்கு 20 ஆண்டுகள் குழந்தை இல்லை. புருஷன் மனைவிக்காக ஜெபிக்க வேண்டும்.

3) ஆபத்து நேரத்தில் தேவ சமூகத்தில் ஜெபம் செய்ய வேண்டும்:

ஆதி.25:22ஆம் வசனத்தில், “அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்” ரெபெக்காள் பிள்ளைகள் வயிற்றில் இருக்கும்போது பிரச்சனைகள் உண்டானபோது கர்த்தரிடத்தில் விசாரித்தாள். ஆபத்து நேரத்தில் கர்த்தரிடமே போனாள். “யெப்தா” தன் காரியங்களை கர்த்தரிடம் கூறினான். தேவ சமூகத்தில் மனம் திறந்து பேசும்போது நாம் வெற்றி காண்கிறோம். மேலும் 1சாமு.1:12ஆம் வசனத்தில், “அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்” அன்னாள் மனங்கசந்து அழுது விண்ணப்பம் பண்ணினாள். ஜெபம் செய்வது என்பது தேவ சமூகத்தில் அமர்ந்து அவர் பிரசன்னத்தை உணர்வதும் உள்ளத்தை திறந்து ஊற்றுவதுமே ஆகும்.

4) அயலானுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்:

ஆதி.20:18ஆம் வசனத்தில், “ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்” அயலானுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும். ஆபிரகாமுக்காக தீமை செய்தவர்களைத் தேவன் தண்டிக்கும்போது ஆபிரகாம் அபிமெலேக்குக்காக விண்ணப்பம் பண்ணினான். நாம் ஜெபித்து பிறர் விடுதலை பெற வேண்டும், பிறர் சந்தோஷமடைய வேண்டும், ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாமும் அந்நியருக்காக ஜெபம் பண்ண வேண்டும்.

5) தேசத்துக்காக விண்ணப்பம் பண்ண வேண்டும்:

1சாமு.7:7,8ஆம் வசனங்களில், “…பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு, சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.” இஸ்ரவேல் தேசத்துக்காக சாமுவேல் விண்ணப்பம் பண்ணினான். பிர.9:15ஆம் வசனத்தில், “அதிலே(சிறு பட்டணத்திலே) ஞானமுள்ள ஒரு எழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை” நாமும் நம்முடைய பட்டணங்களை காக்க ஜெபிக்க வேண்டும்.

6) தன் குலத்திற்காக விண்ணப்பம் பண்ண வேண்டும்:

எஸ்தர் 4:16ஆம் வசனத்தில், “நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச் சொன்னாள்.” எஸ்தர் தன் குலத்தின் மக்கள் பெரிய அழிவிலிருந்து மீட்கப்படும்படியாக உபவாசித்து ஜெபித்தாள். உனக்கு விரோதமாக உருவாக்கப்பட்ட கையெழுத்தை மாற்ற தேவனால் கூடும். மனதை மாற்றுவார். இராஜாக்களின் இருதயத்தை மாற்றுபவர். அவர் சட்டத்தையும் மாற்றுவார். நம் தேவனால் எல்லாம் கூடும்.

7) தேவ சபைக்காக ஜெபிக்க வேண்டும்:

நெகே.1:4ஆம் வசனத்தில், “(எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய் கிடக்கிற) இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:” ஜெபம் செய்கிறார். (நெகே.2:3) “…(எருசலேம்) நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்” ஆலயம் பாழாய்விட்டது. சபைகள், குடும்பங்கள் பாழாயிக் கொண்டிருக்கிறது. அதைக் குறித்து தரிசனம் பெற்றான், மன்றாடினான். அழுது, துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். நாம் பாழக்கப்பட்ட சபைக்காக, தனி மனிதனுக்காக, குடும்பத்திற்காக ஜெபிக்க வேண்டும்.

8) நமது ஜீவியத்தின் பரிசுத்தத்திற்காக ஜெபிக்க வேண்டும்!

சங்.51:1ஆம் வசனத்தில், “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்” நம்மை சுத்திகரிக்கும்படி ஜெபிக்க வேண்டும். சங்.66:18ஆம் வசனத்தில், “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” நமது சுத்திகரிப்பு மிகவும் முக்கியம். 1யோவான் 3:3; 5:18 வசனங்களில் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னை காக்கிறான். பொல்லாங்கள் அவனைத் தொடான். 2நாளா.33:12,13ஆம் வசனங்களில், “இப்படி அவன்(மனாசே) நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்;”

அன்பு நண்பரே! நாமும் விண்ணப்பம் செய்யாதிருப்போமாகில் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருப்போம். எனவே நம் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்காக நம் குடும்பத்திலுள்ள பிள்ளைகள், பெற்றோர், உறவினருக்காக அவர்கள் இரட்சிப்புக்காக கண்ணீரோடு மன்றாட வேண்டும். புருஷன் மனைவிக்காகவும், அயலாருக்காகவும், நிந்திக்கிற, துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும், தேசத்திற்காகவும், திருச்சபைகளில் எழுப்புதல் ஏற்படவும், நம்முடைய வாழ்வின் பரிசுத்தத்திற்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இந்த ஆண்டில் பெரிய ஆத்தும அறுவடையை கட்டளையிடுவாராக! ஆமென்!




Author

You May Also Like…

Share This