ஜீவ புஸ்தகத்தில் பெயர் இருக்கிறதா?

September 21, 2022

1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை நான் சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் குடியிருந்தேன் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த சமயம் காலை உணவும், மதிய உணவும் நான் பணிபுரிந்த தொழிற்சாலை, சிற்றண்டி சாலையிலும் இரவு உணவை கோடம்பாக்கத்திலிருக்கும் பல்வேறு உணவகங்களில் உண்பது வழக்கம். இந்த இரவு உணவகங்களில் அநேக இளைஞர்களை சந்தித்திருக்கிறேன். அந்நாட்களில் அவர்களில் பெரும்பான்மையானோர். சினிமா சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவற்றுள் இசைக்கலைஞர்கள், நடனக்குழுவினர், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டிங் செய்பவர்கள் போன்ற பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் அல்லது முயற்சி செய்பவர்கள்.

                இவர்களில் பலர், தங்கள் சொந்த ஊரிலிருந்து தங்களுக்கு இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த எல்லா பணத்தையும், சுகத்தையும் இழந்து, இரவு பகலாக உழைப்பதைக் கண்டிருக்கிறேன். இவர்களில் அநேகர் நன்கு படித்தவர்கள் இவர்கள் நினைத்திருந்தால் பெரிய அரசு வேலைகளில் கூட சேர்ந்திருக்கலாம். ஆனால் இவர்களின் கலை ஆர்வமோ, “தங்கள் திறமைகளை உலகிற்கு நிரூபித்தால் மட்டும் போதும்” என்ற மனப்பான்மைக்குத் தள்ளுகிறது. இவர்களில் பலர் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. தங்க நல்ல உறைவிடமில்லை, தக்க உணவில்லை. ஆனால் அவர்களின் ஏக்கமெல்லாம், எப்படியாகிலும் ஒருநாளில் “உலகம் போற்றும் கலைஞனாக” மாற வேண்டும் என்பதே என்றால் அது மிகையல்ல.

                இவர்களில் பலருக்கு திரைப்படங்களில் பங்கு பெறும் வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமல் போவதும் உண்டு. மேலும் சிலர் பங்கு பெற்றத் திரைப்படங்கள் திரைக்கு வராமலே போவதும் உண்டு. நூறில் ஒருவர் தான், இதுவரை திரைக்கு வந்த, படக்குழுவில் பங்கேற்றிருப்பார்கள், அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெயர்கள் அந்த வெள்ளித்திரையில் ஒருமுறை வந்ததே “தங்கள் பிறப்பின் பயனை அடைந்து விட்டதாக” நினைக்குமளவு பூரிப்பதைக் கண்டிருக்கிறேன். தங்கள் பெயர் திரையில் வருவதைக் கண்டு பல்லாயிரம் கோடி பணம் கிடைத்தது போல துள்ளிக் குதிந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். இவைகளெல்லாம் உலகத்தின் மாயைகள், அநித்தியமான உலக சந்தோஷங்கள். இந்த நிலையற்ற சந்தோஷத்தையும் பெற்றிடத் தங்கள் தாலந்துகள், திறமைகள், இளமை, சுகம், பணம், எதிர்காலம் போன்ற அனைத்தையும் இழந்தவர்கள் இன்றும் இழந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

                ஆனால் நமதாண்டவரோ….. சீக்கிரத்தில் மறைந்து போகும் வெள்ளித்திரையில்ல…. என்றும் தலைமுறை தலைமுறையாய் யுகயுகமாய் நிலைத்திருக்குத் தன்னுடைய “ஜீவபுஸ்தகத்தில்” தம் அனைவரின் பெயரையும் எழுத வேண்டுமென “இதயத்தின் வாசற்படியில்” நின்று தட்டுக் கொண்டேயிருக்கிறார்.

                இந்த செய்தி இன்னும் அநேகரைச் சென்று எட்டவில்லை. ஒருவேளை இந்த இளைஞர்களுக்கு இச்செய்தி தெரிந்திருந்தால், தங்கள் திறமைகளையும், தாலந்துகளையும், அநேகருடைய பெயர்களை “ஜீவபுஸ்தகத்தில் சேர்க்கும், இந்த மாபெரும் அருட்பணியில் சேர்ந்திருப்பார்கள்”

                இதில் மேலும் கவலைப்பட வேண்டிய விஷயமென்னவென்றால், அறிந்த அநேகர் தங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? என சிந்திப்பதேயில்லை. மேலும் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்ட சில தேவப்பிள்ளைகள், மற்றவர்கள் அறிந்திட தங்கள் திறமைகள், தாலந்துகள் மற்றும் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயங்குகிறார்கள்.

                வெள்ளித்திரையில் ஒருமுறை பெயர் வருவதற்காக முழு வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் இளைஞர்கள் வாழும் இவ்வுலகிலே நித்திய ஜீவனை வாக்குபண்ணி ஜீவபுஸ்தகத்தில் நம்முடைய நாமங்களை எழுதி, மகிழ்ந்த நமதாண்டவருக்காக எவ்வளவு அதிகமாக பிரயாசப்பட வேண்டும்.

தாலந்துகளை ஆண்டவருக்காக செலவு செய்வோம்!

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்

சந்தோஷப்படுங்கள்” இயேசு

Author

You May Also Like…

Share This