அவன் ஒரு ஏழை சலவைத் தொழிலாளி. காலமெல்லாம் அவனுக்கு சிறப்பாக சொல்லிக்கொள்ள என்று நட்போ உறவோ இல்லை. ஆனால் அவனுக்கு உற்ற தோழனாய் அவன் தொழிலில் பேருதவியாய் இருந்ததோ ஒரு கழுதை மட்டுமே. நீண்ட நாட்களாக பாரம் சுமந்து அழுத்துப்போன அவன் கழுதைக்கு வயதாகிவிட்டது. இனியும் பாரம் சுமக்க இயலுமோ என்ற எண்ணம் எழலாயிற்று. இதற்கிடையே இனம் தெரியாத ஒரு நோயும் அந்தக் கழுதையைப் பற்றிக்கொண்டது. அந்த கழுதையின் எஜமானாகிய சலவைத் தொழிலாளி ஆழ்ந்த சிந்தனையில் வெகுநேரம் இருந்தான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து தன் அருமை தோழனாம் கழுதையைக் கூட்டிக்கொண்டு பயணிக்க ஆரம்பித்தான்.
அது ஒரு அடர்ந்த காடு. அக்காட்டில் ஒரு பாழும் கிணறு இருந்தது. அதன் அருகே சென்ற சலவைத் தொழிலாளி சற்றே சிந்தித்தவனாய் கழுதையைப் பிடித்து அந்தப் பாழும் கிணற்றுக்குள் தள்ளினான். அதை சற்றும் எதிர்பாராத கழுதை கிணற் றிற்குள் விழுந்து கதறி அழுதது. இத்தனை நாளாய் சிநேகிதனுக்கு சிநேகிதனாய் கைமாறு கருதாமல் எவ்வளவு பொதி ஏற்றினாலும் மறுக்காமல் ஏற்றி என் எஜமானை வாழ வைத்தேனே, இதற்கு அவர் தரும் கைமாறு இதுதானா என அங்கலாய்த்தது.
இதற்கிடையில் அந்தக் கழுதையின் எஜமான் மண்வெட்டியால் மண்ணை வெட்டி கழுதையின்மேல் போட ஆரம்பித்தான். மேலும் அநேகரை தனக்கு உதவி யாக மண்ணை வெட்டி கழுதையின்மேல் போட அழைத்தான். இதைக் கண்ட கழுதைக்கோ குழிக்குள் இருக்கிறோமே என்ற கவலை ஒருபுறம், மீளமுடியாதபடி தன் எஜமான் மண்ணைப் போடுகிறானே என்ற கவலை மறுபுறம். கழுதை சற்றே ஆழ்ந்து சிந்தித்தது. திடீரென முழு பலத்தோடு எழும்பி தன்மேல் போடப்பட்ட மண்ணை உதறியது. ஒவ்வொருமுறை தன் எஜமானும் அவன் நண்பர்களும் மண்ணைப் போடும்போதும் பலங்கொண்ட மட்டும் எழுந்து மண்ணை உதற ஆரம் பித்தது. இவ்விதமாக “மண்ணைப் போடுவதும் கழுதை அந்த மண்ணைவிட்டு எழுவதும்” நடந்துகொண்டிருந்தது.
இத்தருணத்தில் கழுதை தான் குழிக்கு மேலாக வந்துவிட்டதை உணர ஆரம்பித்தது. ஆனால் அதன் எஜமானனோ மண்ணை கழுதையின்மேல் போடும் மும்முரத்திலே இருந்தான். சற்று நேரத்தில் கழுதை குழியின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது. அதன் எஜமானனும் மற்றவர்களும் சற்றும் எதிர்பாராத தருணத்திலே குழிக்கு வெளியே குதித்து காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டது. காட்டிற்குள் ஓடிய கழுதை உலகம் எவ்வளவு நன்றிகெட்டது என்பதை நினைத்து நொந்துகொண்டது. அதேசமயம் தன் மீது மண்ணைப் போடுகிறார்களே என்று பயந்து நின்றுவிடாமல் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடி வெற்றிக்கொள்ள தேவன் கொள்ள தேவன் கொடுத்த ஞானத்தை நினைத்து பெருமிதமும் கொண்டது.
இதை வாசிக்கும் அருமை நண்பர்களே! இந்த உலகத்திலே நன்றியை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். எத்தனையோ பரிசுத்தவான்கள் இந்தப் பாதையில் கடந்துசென்றதை செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுலும் கள்ள சகோதரரால் வந்த நஷ்டம் என்று எழுதுவதையும், தோமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து பின்வாங்கிப் போனதையும் பார்க்கிறோம். “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி.12:1)