கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்றைய திருச்சபையின் மிகப்பெரிய பாவம் நிர்விசாரமாயிருக்கிறது. தேவனுடைய காரியங்களில் நிர்விசாரமாய் இருப்பது கூடாது. தேவப்பிள்ளைகளிடம் எதிலுமே பற்றற்று இருப்பது என்ற நிலை சுயதிருப்தியுடன் நிர்விசாரமாய் இருப்பது பற்றி தேவன் எச்சரிக்கிறார். இது தேவனுடைய பிள்ளைகளின் வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டும். ஆமோஸ் 6:1 வசனத்தில் “சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களே….. உங்களுக்கு ஐயோ!”
தேவன் என் மூலமாக, என் குடும்பத்தின் மூலமாக செய்ய விரும்புவதைச் செய்ய நாம் ஜாக்கிரதையாக இருந்து தேவச் சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். பிதாவின் சித்தம் செய்பவர்களே பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்.
நிர்விசாரம் எவ்வாறு அழிவை உண்டாக்கும் என்று தியானிப்போம்.
1. நிர்விசாரம் அழிவை உண்டாக்கும்:
நீதி.1:32ஆம் வசனத்தில், பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும் மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
2. சோதோமின் அழிவுக்கு காரணம் நிர்விசாரம்:
எசே.16:49 “இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்…” இதினால் சோதோமின் ஜனங்கள் அழிக்கப்பட்டனர். உகாண்டா, எத்தியோப்பியா, ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் பஞ்சத்தால் மடிகின்றார்கள். தேசங்களுக்காக திறப்பில் நிற்க ஆட்கள் தேவை.
3. ஆவிக்குரிய ஜீவியத்தை அழிக்கும் நிர்விசாரம்:
ஏசா.2:2,3ஆம் வசனத்தில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். திரளான ஜனங்கள் தேவனண்டை திரும்பி வரும்படியாக நாம் நிர்விசாரமாய் இருக்க கூடாது.
4. கர்த்தருடைய வருகையைக் குறித்து நிர்விசாரம்:
ஆமோ.6:3ஆம் வசனத்தில், தீங்கு நாட்கள் தூரம் என்று சொல்லுகிறார்கள். கர்த்தர் இன்று வருவார் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
5. ஆடம்பர வாழ்க்கை நிர்விசாரத்தின் அறிகுறி:
ஆமோஸ் 6:4,5ஆம் வசனத்தின் “தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி…” ஆடம்பரமாய் வாழ்வது நிர்விசாரத்தின் அறிகுறியாக உள்ளது.
6. மாய்மாலம் – இரட்டை வாழ்க்கை – நிர்விசாரம்:
(அ) வெளிவாழ்க்கை ஆவிக்குரியவர்களைப் போல நடித்து ஆடல், பாடல், ஆராதனை, உள்ளான ஜீவியத்தில் அலங்கோலம் இரட்டை வாழ்க்கை காணப்படும்போது நிர்விசாரம் உண்டாகும். வாசனை திரவியங்கள் வெறி உண்டுபண்ணும்.
(ஆ) யோசேப்புக்கு உண்டான கஷ்டங்களைக் குறித்தும் தன் சொந்த சகோதரர்களுக்கு வரும் ஆபத்தைக் குறித்து கவலையில்லாமல் சுயநல வாழ்க்கை வாழ்வது நிர்விசாரமே.
7) அழைப்பை அசட்டைபண்ணுதல் நிர்விசாரம்: மத்.22:5
நிர்விசாரம் அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைப்பண்ணி ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய் விட்டார்கள்.
8) அசதியாக இருப்பது சுதந்தரிப்பதில் நிர்விசாரம்:
யோசுவா 18:3 உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் போகிறதற்கு நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள். கர்த்தருடைய காரியங்களில் அசதியாக இருந்தால் நிர்விசாரமாகும்.
9. கர்த்தருடைய வேலையை தாமதமாகச் செய்வது நிர்விசாரம்:
2நாளா.24:5ஆம் வசனத்தில் “…தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்” ஆனாலும் லேவியர் தாமதம் பண்ணினார்கள். கர்த்தருடைய ஆலயத்தை பழுது பார்ப்பதில் காலதாமதம் செய்தது லேவியர்களின் நிர்விசாரத்தைக் காட்டுகிறது.
நெகே.3:5 அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுது பார்த்துக் கட்டினார்கள். அவர்களுடைய பிரபுக்களே தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை. கர்த்தருடைய வேலைக்கு கழுத்தைக் கொடுக்க வேண்டும். பிரபுக்களுக்கு அலட்சியம், நிர்விசாரம் காணப்பட்டது.
அன்பு நண்பரே! நிர்விசாரம் ஆவிக்குரிய ஜீவியத்தை அழிக்கும். கர்த்தருடைய காரியங்களில் அசட்டை செய்வது, அசதியாயிருப்பது, காலம் தாமதம் செய்வது, ஆலய வேலைகளில் பழுதுபார்ப்பது, கட்டடம் கட்டுவதில் நிர்விசாரம் கூடாது. ஆண்டவருடைய வேலையை மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். ஆண்டவருடைய வேலையில் தங்கள் கழுத்தை கொடுத்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா போல செயல்பட வேண்டும். அல்லேலூயா!




