சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாக ….ஒருநாள் இரவு பத்து மணியளவில் நான் என்னுடைய புல்லட் பைக்கில் மதுரை கார்ப்பரேசன் இருக்கும் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தேன்.அன்றோ கனத்த மழை, மழையின் காரணமாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. சாலையெங்கும் கும் இருட்டு. பத்து அடி தூரம் கூட பார்க்க முடியாத அளவிற்கு மழையின் வேகம்.
மழைக்கு ஒதுங்கி இருக்கலாம், ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை. பொதுவாக புல்லட் பைக் மழையில் நனைந்துவிட்டால் ஸ்டாட் செய்வது கடினம். இதற்கிடையில் மீண்டும் நின்றுவிட்டால் ஸ்டார்ட் மீண்டும் செய்வது மிக்க கடினம். எனவே நான் வாகனத்தின் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு, சிறிய விளக்குகளோடு பயணத்தை தொடர்ந்தேன்.திடீரென நான் ஏதோ ஒரு உருவத்தின் மீது மோதிவிட்டேன். பைக்கும் கீழே விழுந்துவிட்டது. நானும் கீழே விழுந்தவனாக, அந்த கரிய உருவத்தை உற்றுப் பார்த்தபோது அது ஒரு மனிதன். அவர் கருப்பு உடையணிந்து, இருட்டு நேரத்தில் ரோட்டைக் கடக்க முயன்றவர், இப்போது அவரும் அடிபட்டு கீழே கிடக்கிறார். அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை.
நான் மிகவும் பதறி, ஐயா! உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் மிகவும் முட்டாள்தனமாக இருட்டில் வாகனத்தை ஓட்டி உங்கள் மீது இடித்துவிட்டேனே! என பதட்டத்துடன் கூறினேன். இதற்குள் இந்த ஏழை மனிதன் எழுந்து வந்து, ஐயா! உங்களுக்கு ஏதாகிலும் அடிபட்டு விட்டதா? எனக் கனிவுடன் கேட்டார். மேலும் என்னையும் தூக்கிவிட்டார்.நான் அவரிடம் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, ஏனென்றால் தவறு என்னுடையது. இருட்டு நேரத்தில் வாகனத்தில் முகப்பு விளக்குகளையும் அணைத்துவிட்டு வாகனத்தை ஓட்டியதும், கனத்த மழையில் ஒதுங்கி நிற்காமல் தொடர்ந்து ஓட்டியதும் “என் தவறு”. எனவே உங்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று “எல்லா செலவுகளையும்” மேற்கொள்வது என் “பொறுப்பு” எனக் கூறினேன்.
அவரோ, அதற்குப் பதிலாக, ஐயா! இந்த இருட்டில் கருப்பு உடையணிந்து, ரோட்டைக் கடந்தது “என் தவறு” எனக் கூறினார். அவர் என்மீது எந்தக் கோபமும் படவில்லை. அதற்கு மாறாக எனக்காக கவலைப்பட்டார். அதற்கும் மேலாக என்னை மன்னித்தார். நான் அவரிடம் கொஞ்சம் பணமும், என்னுடைய விலாசம் அடங்கிய அட்டையையும் கொடுத்துவிட்டு, என்ன தேவையென்றாலும் என்னைத் தொடர்புகொள்ளும்படி சொன்னேன். அவர் பணத்தை வாங்கவே மறுத்தார். நான் மிகவும் வற்புறுத்தி அவரிடம் கொடுத்தேன். உண்மையில் பார்த்தால், அவர் ஒரு ஏழை பிச்சைக்காரன். அவன் உள்ளமோ பணக்கார மகான்களைப் பார்க்கிலும் மேலாக இருந்தது. அவனுக்கு இருந்த “மன்னிக்கும் சுபாவம்” என் கண்களைக் குளமாக்கியது. அந்த மனிதன் என்னைக் குற்றப்படுத்த விரும்பவில்லை. அதற்கு மாறாக தன் பிழைகளை உணருகிறவனாக இருந்தான்.
இந்த சம்பவத்தை நான் அடிக்கடி நினைவுகூர்வது உண்டு. அநேக நேரங்களில் நான், என்னுடைய தவறுகளை மாத்திரம் உணர்ந்து “சரி செய்தால்” அநேக குழப்பங்களை தவிர்த்திருக்க முடியும் என்று உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்ட சூழ்நிலைகளும் உண்டு. கர்த்தர் தாமே நம்மை “மன்னிக்கும் சுபாவத்தில் வல்லவர்களாய்” மாற்றுவாராக!
கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல நாமும் பிறர் குற்றங்களை மன்னிப்போம். கர்த்தர் நம்மில் மகிழுவார்.