இயேசு கிறிஸ்துவின் சாயல்

Written by Dr Senthil kumar

March 23, 2021

“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ் டிக்கப் பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபே.4:24)


ஆதாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவன். பாவம் செய்தபோது, தேவ சாயலை இழந்தான். நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய சாயலின்படியே புது சிருஷ்டியாய் சிருஷ்டிக்கப்பட்டோம். நாம் நாளுக்கு நாள் அவருடைய சாயலில் வளர வேண்டும். நம்முடைய பழைய மனிதன் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டான். ஆனால், உலகத்தைச் சார்ந்து கொள்ளும்போது, பழைய சுபாவங்கள் தலைதூக்க ஆரம்பிக்கும். விசுவாசி பிரமித்துப் போகிறான். எப்படி நடக்கிறது என்று கலங்குகிறான். பிரியமானவர்களே, பழைய மனிதனைக் களைந்து போடுங்கள். அல்லது பழைய மனிதன் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டான் என எண்ணுங்கள். எனவே தான் சிலுவையைப் பற்றிய உபதேசம் நமக்கு தேவபெலன். இதைக் குறித்துதான் பவுல் புறம்பான மனிதன் நாளுக்கு நாள் அழிந்தும், உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டும் வருகிறது என்றார். இயேசு கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் சாயலை பதித்து மறுரூபப் படுத்துகிறார்.


உள்ளான மனிதன் மறுரூபமாகுதல்
நம்முடைய உள்ளான மனிதன் இயேசு கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமடைகிறான்.
“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப் படுகிறோம்” (2கொரி.3:18)


நாம் இயேசுவை, அவரது மகிமையை, வேத வசனமாகிய கண்ணாடியிலே பார்க்கிறோம். இயேசுவின் அன்பைப் பார்க்கிறோம். அவரது சாந்தத்தை, மனத்தாழ்மையைப் பார்க்கிறோம். அவரது பரிசுத்தத்தைப் பார்க்கிறோம். பிதா பூரண சற்குணர் என்று காண்கிறோம். இப்படிக் கண்டு பரிசுத்த ஆவியானவரால், நாம் கர்த்தருடைய சாயலை நமக்குள்ளே தரித்துக்கொண்டு, தேவ மகிமையைப் பெற்றுக் கொள்கிறோம். இவ்விதமாக உள்ளான மனிதன் இயேசு கிறிஸ்துவின் சாயலை அணிந்து மறுரூபப்படுகிறான். பரிசுத்த ஆவியானவர் அதற்காக மிகவும் பிரயாசப்பட்டு உதவி செய்கிறார். ஆவியானவர் கர்த்தரின் சாயலாக நம்மை மறுரூபப்படுத்த ஒப்புக்கொடுக்கிறோமா? நம்முடைய உள்ளான மனிதன் பரிசுத்த ஆவியானவரால் வல்லமையாய்ப் பலப்பட, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலில் பலப்பட நம்முடைய உள்ளான மனிதனை ஒப்புவிப்போம். உள்ளான மனிதன் நாளுக்கு நாள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலில் புதுப்பிக்கப்பட வேண்டும். பாவச் சாயல் உடைய புறம்பான மனிதன் நாளுக்கு நாள் அழியத்தான் வேண்டும். சிலுவையில் இயேசு மரித்தாரே நம்முடைய பழைய மனிதனும் அவரோடு மரித்தான். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நாம் புதிதாக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வரும் நாள் வரை மறுரூபமாகும் நம்பிக்கைக்காக நமது உள்ளான மனிதன் அவரின் சாயலாக மறுரூபமடைகிறான். ஆவியானவர் அதற்காகவே நமக்குள் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை பரிசுத்த ஆவியானவரின் கரங்களில், வேத வசனங்களின் வெளிச்சத்தில், இயேசு கிறிஸ்துவின் சாயலில் மறுரூபமாக ஒப்புக்கொடுப்போம். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமடைவீர்கள்.


மறுரூபமாக்கப்படும் மனம்
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2)
உங்கள் மனம் தேவ சித்தத்தின்படி மறுரூபமடைய வேண்டும். நமது மனம் உலகத்தோடு இசைந்திராமல், தேவ சித்தத்தின்படி மறுரூபப்பட வேண்டும். கர்த்தருடைய வசனங்கள் நமக்கு தேவ சித்தத்தை அறிவிக்கிறது. பரிசுத்தமாக வேண்டுமென்பது தேவசித்தம். ஸ்தோத்திரம் செலுத்துவது தேவசித்தம். எல்லா மனுஷருக்காகவும், அவர்கள் சத்தியத்தை அறியும் அறிவை அடைய ஜெபம் பண்ண வேண்டியது தேவ சித்தம். இப்படி கர்த்தருடைய வசனங்கள் நமக்குப் போதிக்கிறது. ஆவியானவரும் விசுவாசிகளின் தனிப்பட்ட வாழ்வில் வெளிப்பட்டு, தேவ சித்தத்தை அறிவிக்கிறார். நாம் நமது மனதை அடக்கி தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வசனத்தின் மூலமாய், ஆவியானவரின் மூலமாய் நமது மனம் மறுரூபமாக வேண்டும்.
“ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்” (1பேதுரு 1:13)
ஆம்! உங்கள் மனதிலே வசனமாகிய அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். ஆம்! இயேசு கிறிஸ்து வரும்போது அளிக்கப்படும் கிருபை உங்களைத் தாங்கும். இயேசு சீக்கிரம் வருகிறார், உங்கள் மனதை அதற்கு ஆயத்தப்படுத்தி வருகையில் அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையாய் இருங்கள்.


எக்காளம் தொனிக்கும், மறுரூபமாவோம்
நமது உள்ளான மனிதன் கர்த்தரின் சாயலாக மறுரூபமாகி, நமது மனது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கென்று மறுரூபமாகி ஆயத்தப்பட்டுக் காத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, நமது சரீரங்கள் தேவனுக்குப் பிரியமான பலியாய் ஒப்புக்கொடுத்து, தேவன் தங்கியிருக்கும் ஆலயமாகிய சரீரத்தை பரிசுத்தமாய் ஆண்டுகொண்டு காத்திருக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையிலே வெட்கப்பட மாட்டோம்.


இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையிலே திடீரென எக்காளம் தொனிக்கும். மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்கள். நாம் மறுரூபமாகி, வானில் பறந்து இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவோம். எத்தனை ஆனந்தம்! நம்முடைய காத்திருப்பு அன்று முடிந்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவோம். அந்த மனமகிழ்ச்சியின் நாளில் மறுரூபமாகி, கர்த்தரோடு காணப்பட இன்றே ஆயத்தப்படுங்கள். ஆம், இயேசு சீக்கிரமாய் வருகிறார். எக்காளம் தொனிக்கும். நாம் மறுரூபமாகி வானில் பறந்து இயேசுவிடம் செல்வோம். அல்லேலூயா!






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This