பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! கடைசி காலத்தில் இருக்கிறோம். நாம் ஏன் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தோம்? அல்லது ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறோம்? என்பதை நாம் அறிந்து ஒரு உண்மைக் கிறிஸ்தவனாக வாழ வேண்டிய காலம் இது. மத்திய வானத்தில் பரிசுத்தவான்களுக்கு தேவன் ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணுகிறார். அதில் பங்குபெற நம்மை அழைக்கிறார். அதில் பங்குபெறாவிட்டால் தேவன் அளிக்கும் மற்றொரு விருந்துக்கு நாம் விருந்தாவோம் (வெளி.19:17,18). அது மகாதேவன் கொடுக்கும் விருந்து. தேவனுடைய அழைப்பை நிராகரித்தவர்களின் மாம்சத்தைப் பட்சிக்க வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளுக்கும் தேவன் கொடுக்கும் விருந்து அது.
***முதலாவதாக ஒரு தேவ பிள்ளை தேவ அழைப்பைத் தட்டி வீணான சாக்கு போக்குகளைச் சொல்ல இது காலமல்ல. (லூக்.14:18-20)
இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் ஒரு மனிதன் பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணி அழைக்கப்பட்டவர்களை விருந்து உண்ண தன் ஊழியக்காரன் மூலம் அழைக்கிறான். அப்பொழுது அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சாக்குபோக்கு சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன் ஒரு வயலைக் கொண்டேன், அகத்தியமாய்ப் போய் அதைப் பார்க்க வேண்டும் என்றான். வேறொருவர் ஐந்து ஏர்மாடுகளைக் கொண்டேன், அவைகளை சோதித்துப் பார்க்க வேண்டும் என்றான். வேறொருவன் ஒரு பெண்ணை விவாகம் பண்ணினேன், நான் வரக்கூடாது என்றான். விருந்தை ஆயத்தம் பண்ணின மனிதன் “அழைக்கப்பட்ட அந்த மனிதரில் ஒருவனும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை” எனவே அழைக்கப்படாத மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து போஜனசாலையை நிரப்பும்படி கூறினான். இதுபோலவே நாமும் அநேக வேளைகளில் ஆண்டவருடைய அழைப்பை அசட்டைப் பண்ணுகிறோம். சாக்கு போக்குகளை சொல்லுகிறோம். அழைக்கப்பட்டவர்கள் அநேகர்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர். தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் நாமும் இடம்பெற வேண்டும்.
***இரண்டாவதாக உலகப் பொருட்களை சேகரிக்க இது காலமல்ல
“பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?” (2இராஜா.5:26). இது தேவனுடைய வருகைக்கு நாம் ஆயத்தப்பட வேண்டிய காலம். நமக்கு இருக்கிறவைகள் போதும் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1தீமோ.6:6). நமக்கு உண்ணவும் உடுக்கவும் இருந்தால் அது போதும். பண ஆசை விசுவாசத்தை விட்டு நம்மை வழுவிப்போகச் செய்கிறது. ஒருபோதும் நம்முடைய விசுவாசத்தை விட்டுவிடக் கூடாது. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் நாம் அன்பு கூறாதிருப்போமாக. சேர்த்து குவித்து வைக்கும் தொல்லை நமக்கு வராதிருப்பதாக.
***மூன்றாவதாக இது கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய காலம்
தேவனுக்குக் கொடுப்பதில் சாக்குபோக்கு சொல்லக்கூடாது. உங்களை உங்கள் பொருட்களை தேவனுக்குக் கொடுக்க வேண்டிய காலம் இது. நிரம்பி வழியவேண்டியது ஆவியில் மட்டுமல்ல; கொடுப்பதிலும் தான். நம்மில் அநேகம் பெண்களுக்கு பத்து சேலைகள் இருந்தால் போதும் என்கிற எண்ணமில்லை. இது சுகவாழ்வுக்கான காலமல்ல; நம்மையே ஆண்டவருக்குக் கொடுக்கவேண்டிய காலம் (எஸ்தர் 4:14). எஸ்தர் அரண்மனை வாழ்வு வாழ தகுதியற்றவள், கிருபையால் உயர்த்தப்பட்டாள். தேவ ஜனங்களுக்கு நெருக்கம்; அவளோ சுகமாய் பத்திரமாய் அரண்மனையில் இருக்கிறாள். ராஜ சமூகத்தில் விண்ணப்பம் செய்ய பயப்படுகிறாள். ‘இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாயிருக்கும்படியாகவே உனக்கு இந்த இராஜ மேன்மை உண்டாயிற்று. நீ மௌனமாக இருக்க இது காலமல்ல’ என்று மொர்தேகாயினால் எச்சரிக்கப்படுகிறாள். ‘செத்தாலும் சாகிறேன்’ என்று தன் பிராணனையே பணயம் வைத்து தன் ஜனங்களுக்காக பரிந்துபேச முன் வருகிறாள். இது சத்துருவை ஒருமித்து எதிர்க்க வேண்டிய காலம். கண்ணீரோடு உபவாசித்து ஜெபிக்க வேண்டிய காலம். இந்தக் காலத்தில் நாம் கொடுக்காவிட்டால் எப்படி ஊழியங்கள் வளரும். ஆத்துமாக்கள் எப்படி இரட்சிக்கப்படுவார்கள். பழைய ஏற்பாட்டு காலத்தில் தசமபாகம் என்றால், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தசமபாகத்திற்கும் அதிகமாய் நாம் கொடுக்க வேண்டும்.
***நான்காவதாக இது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட வேண்டிய காலம்
சபை என்பது இரட்சிக்கப்பட்ட ஜனம் கூடி ஆராதிக்கும் இடம். சபை கட்டப்பட வேண்டிய காலம் இது. 70 வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனில் அடிமைப்பட்டு இருந்தனர். அந்தக் காலத்தில் கோரேஸ் இராஜாவின் கட்டளைப்படி ஜனங்கள் தேவாலயத்தைக் கட்ட எழும்பினார்கள். சிலர் அதை தடை செய்தார்கள். அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசி எழும்பி தேவனுடைய வார்த்தையைப் பெற்று தேவாலயத்தைக் கட்டும்படி கூறினார். ‘என் வீடு பாழாய்க் கிடக்கும்போது நீங்கள் மச்சுப் பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவா’ என்று ஆகாய் 1:2-4ல் வாசிக்கிறோம். இது கிருபையின் காலம்; சபையின் காலம். தேவ ஜனங்கள் உருவாகும் காலம். தேவ ஜனங்களை தேவ சபையில் சேர்க்கும் காலம் இது.
***ஐந்தாவதாக இது சும்மா இருக்கவேண்டிய காலமல்ல; கர்த்தருக்காக செயல்பட வேண்டிய காலம் (மத்.20:6)
சும்மா இருக்கவேண்டிய காலம் இதுவல்ல; கர்த்தருடைய திராட்சத் தோட்டத்தில் மற்றவர்களோடு இணைந்து வேலை செய்யவேண்டிய காலம். சோம்பேறித்தனமாக தூங்கி வீணாக பொழுதுபோக்க வேண்டிய காலம் இதுவல்ல. நம்முடைய கூலியைப் பெறும்படி உழைக்க வேண்டிய காலம் இது.
***ஆறாவதாக இது நமது தாலந்துகளைப் புதைத்து வைக்கும் காலமல்ல; நமது திறமைகளை கர்த்தருக்காகப் பயன்படுத்த வேண்டிய காலம் (மத்.25:25)
தேவன் கொடுக்கும் தாலந்துகளை திறமைகளை நாம் தேவ ராஜ்ய வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். தாலந்துகளை புதைத்து வைத்தால் அதற்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். உன் தாலந்துகளை தேவ சமூகத்தில் வை. உலகத்திற்காக உன் தாலந்துகளை பயன்படுத்தாதே! தேவனுடைய இதயத் துடிப்பை அறிந்து அவர் திட்டத்தை நிறைவேற்ற நமது ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.
***ஏழாவதாக இது நற்செய்தியை அறிவிக்கும் காலம். நாம் மௌனமாய் இருப்பதற்கு இது காலமல்ல
நான்கு குஷ்டரோகிகள் தங்களுக்குக் கிடைத்த நற்செய்தியை தேசத்திலுள்ள மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள் (2இராஜா.7:9). அதனால் அவர்கள் தேசத்தின் பஞ்சம் மாறியது. நமது தேசம் தேவனை அறிய நாமும் தேவனுடைய நற்செய்தியை மறைத்து வைக்காமல் அதை மற்றவர்களுக்கு அறிவிப்போமா! இது நாம் மௌனமாக இருக்கவேண்டிய காலமல்ல; நாம் செயல்பட வேண்டிய காலம்!
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தேவ அழைப்பைத் தட்டி வீணான சாக்கு போக்குகளைச் சொல்லி காலத்தைக் கழிக்காமல், நம்மை, நமக்குரியவைகளை கர்த்தருக்கு அர்ப்பணித்து தேவராஜ்ய பணிகள் விரிவடையச் செய்வோமாக.!