கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இன்றையக் கிறிஸ்தவ உலகில் அநேகர் பெரியவர்களாக, பேர் புகழுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத் தங்கள் பணம், நேரம், தாலந்துகளை இரவும், பகலும் செலவழித்துப் பிரயாசப்படுகிறார்கள். ஆனால் ஒரு மனிதன் தேவனோடு ஐக்கியப்பட்டால்தான் பெரியவனாக மாற முடியும். தேவன் காட்டும் பாதையில் நடந்து அவர் சித்தம் செய்தால்தான் பெரியவனாகவும், பேர் பெற்றவனாகவும் உயர்வடைய முடியும். நம்முடைய தேவன் பெரியவர். அவர் ஆபிரகாமை ஆசீர்வதித்துப் பெரிய ஜாதியாக்கினார். அவன் பெயரைப் பெருமைப்படுத்தினார். ஆசீர்வாதமாக வைத்தார்.
ஆதி.12:2,3 வசனங்களில் “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்”. ஆனால் தேவன் ஆபிரகாமை ஆசீர்வதிப்பதற்கு முன்பு ஆபிரகாமுக்கு ஒரு நிபந்தனையைக் கொடுத்தார். தேவனுடைய ஆசீர்வாதங்கள் எல்லாம் நிபந்தனைக்குட்பட்டவைகளே. ஆபிரகாம் தேவனுடைய தேவனுடைய ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்கக் கிரயம் செலுத்தினார்.
ஆதி.12:1ஆம் வசனத்தில், “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்றார். தேவன் சொல்லியபடி ஆபிரகாம் தன் சொந்த ஊரான கல்தேயர் தேசத்தை விட்டு தேவன் காண்பித்த கானான் தேசத்திற்குப் போனான். ஆபிரகாம் தேசத்தையும், இனத்தையும், தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டுப் போனதால் தேவன் பெரியவராய் இருந்து அவன் பெயரைப் பெருமைப்படுத்தினார்.
சங்.104:1ஆம் வசனத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்” என்கிறார் சங்கீதக்காரன். யோவான்ஸ்நானன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருந்தான். ஸ்திரீகளில் பிறந்தவர்களில் யோவானைப் போலப் பெரியவன் இல்லை என்று இயேசுவே புகழ்ந்தார். ஆதலால் இயேசு அவரிடம் ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, பாதையைச் செவ்வை பண்ணும்படி தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவர் தாழ்மையுள்ளவராகக் காணப்பட்டார். “அவர் பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும்” என்றார். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையாக இருப்பவர்களையே தேவன் உயர்த்துவார்.
தேவன் பெரியவர் என்பதை வேத வாக்கியங்கள் மூலம் ஆராய்ந்து பார்ப்போம்:
2சாமு.7:22ஆம் வசனத்தில் “…தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர்…” என்று கூறப்படுகிறது. நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை. எதினால் தேவன் பெரியவர் என்று விளங்குகிறது என்றால், உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும் இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியேனுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவு செய்தீர் என்ற தாவீது கூறுகிறார்.
*** முதலாவது – தேவனுடைய கிருபை பெரியது:
சங்.103:11ஆம் வசனத்தில், “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” தேவனுடைய பிள்ளைகள் அவருக்குப் பயப்படும்போது அவர் கிருபையாயிருக்கிறார்.
*** இரண்டாவது – தேவனுடைய உண்மை பெரிதாயிருக்கிறது:
புலம்பல் 3:23ஆம் வசனத்தின்படி, “அவைகள்(கர்த்தருடைய கிருபை) காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் மாறாதவர், அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர்.
*** மூன்றாவதாக – தேவன் வல்லமையில் பெரியவர்:
யாத்.32:11ஆம் வசனம், “மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?” தேவன் தம்முடைய ஜனங்களை வல்லமையினால் வழிநடத்தினார்.
*** நான்காவதாக – தேவன் மன்னிப்பதில் பெரியவர்:
எண்.14:19ஆம் வசனம், “உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை, மன்னித்தருளும் என்றான். தேவன் நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னிப்பதில் பெரியவராயிருக்கிறார்.
*** ஐந்தாவதாக – தேவன் இரக்கத்தில் பெரியவர்:
2சாமு.24:14ஆம் வசனம், “அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்;… அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.” தேவன் இரக்கத்திலும் பெரியவராயிருக்கிறார்.
இதை வாசிக்கும் அன்பரே! நாம் பெரிய தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாகக் காணப்பட்டால் தேவன் நம் பேரைப் பெருமைப்படுத்துவார். நம்மை ஆசீர்வாதமாக வைப்பார். பெரிய தேவன் நம் வாழ்விலும் பெரிய காரியங்கள் செய்வார்! அல்லேலூயா!




