தேவன் உங்களைப் பலப்படுத்தி நிலைநிறுத்துவாராக

Written by Pr Thomas Walker

March 22, 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்று திருச்சபையில் வாழும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் உறுதியில்லாமல் அவதிப்படுகின்றனர். ஆலய ஆராதனைகள், திருவிருந்துகளில் பங்கு பெற்றும் உணர்வுகளுக்கும், தேவையற்ற உலக காரியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தேவன் பேரில் ஆழமான விசுவாசம் இல்லாமல் இருக்கின்றனர். அனலற்ற வெதுவெதுப்பான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கின்றனர். “நான்” என்ற எண்ணத்திற்கு அதாவது சுயத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும். தேவனே என் அனைத்துக்கும் அதிகாரி. “நான்” என்ற உணர்வு ஓரம் கட்டப்பட வேண்டிய ஒன்று, என்று ஒப்புக்கொள்ளும் வரையில் பூரணமான மனந்திரும்புதலுக்கு சாத்தியமில்லை. மேலும் மற்றவர்களை மன்னிக்க நாம் விரும்பாமல், தேவனிடம் மன்னிப்புக்காக ஓடிவருவது அர்த்தமற்றது. தேவன் நம்மை மன்னிக்க நாமே தடையை எழுப்பி விடுகிறோம்.


தேவன் தன் திருச்சபை மக்களை பலப்படுத்தி நிறைநிறுத்த விரும்புகிறார். தேவனுடைய நாமத்தில் சாத்தானை மேற்கொள்ளும்போது ஜெயம் பெறுகிறோம். தேவனுடைய பரிசுத்தாவின் பெலத்தால் பெலன் அடைகிறோம். தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து ஜெபித்தால் பலன் கிடைக்கிறது. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொண்டு பிசாசை எதிர்த்துப் போராடும்போது வெற்றி கிடைக்கின்றது. பிரதிஷ்டை உள்ள வாழ்க்கை வாழும்போது வெற்றியும், பெலனும் உண்டு. துதிக்கிற மனிதனுக்கு வாழ்வில் பெலன் உண்டு. 1பேதுரு 5:10 வசனத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” என்கிறார் பேதுரு அப்போஸ்தலன்.


தேவன் எவ்வாறு ஒவ்வொரு விசுவாசிகளையும் நிலைநிறுத்த விரும்புகிறார்? என்று பார்ப்போம்.

1. விசுவாசத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்
யூதா 20 வசனத்தில், “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி” என்கிறார் தேவனால் நிலைநிறுத்தப்பட்டவர்களின் விசுவாசம் விசேஷமானது.
மகா பரிசுத்தமான விசுவாசம் மேலும் யூதா 3 வசனத்தில் “…பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டும்….” எபி.11:36,37 வசனங்களில் “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;” விசுவாசத்தில் உறுதியாய் நின்று பாடுகளைச் சகித்தார்கள்.பொன்னைவிட விலையேறப் பெற்றது, இந்த விசுவாசம். யோபு எல்லா ஆஸ்திகளும் போனபோதும், பிள்ளைகள் எல்லாம் மரித்தபோதும் விசுவாசத்தில் நிலைத்து நின்றார். நாமும் சோதனைகள், போராட்டங்களின் மத்தியிலும் உறுதியாக விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும்.

2. அன்பில் நிலைநிறுத்தப்பட வேண்டும்
1யோவான் 4:16, “தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” மேலும் 1யோவான் 4:18,20 வசனங்களில், “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” நாம் தேவனை முழு மனதுடனும் முழு ஆத்துமாவுடனும் நேசித்தால் அவருடைய அன்பில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

3. தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும்.
அப்போஸ்தல உபதேசங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். உபதேசங்களில் நிலைத்திருக்கிறவர்களே நிலைத்திருப்பார்கள். 2யோவான் 1:9, “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்” தேவனுடைய வார்த்தை நம்மை சுத்திகரிக்கிறது. நமது வாழ்க்கை வேத வசனத்தின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தையின்படி செய்கிறவனே கற்பாறையில் கட்டப்பட்டு நிலைநிற்பான்.

4. பரிசுத்தத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்
2பேதுரு 2:20,21 வசனங்களில், “…இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.” உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பி பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும். பரிசுத்தத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். யாக்.1:27ல் “…உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” தேவன் விசுவாசிகளை உலகத்தால் கறைபடாதபடி காக்க சபையிலே வைத்து போதித்து வழிநடத்துகிறார்.


உங்கள் சபையிலே நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள்?
(லோத்தைப் போல அல்லது ஆபிரகாமைப் போல; நீதிமானாக அல்லது பரிசுத்தவானாக) வாழ்ந்து தேவனுக்கு முதல் இடம் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.தேவனின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி வாழ வேண்டும். தேவன் நம்மை அழைத்து நீதிமானாக மாற்றுகிறார். தமது பிள்ளையாகப் பார்க்கிறார். நீதிமானாக மாற்ற வசனத்தால் போதிக்கிறார். பரிசுத்தாவியைக் கொடுத்து நீதிமானாக மாற்றுகிறார். பிலேயாம் நீதிமானாக இருந்து நீதிமானாக மரிப்பது தேவசித்தம் என்று விரும்பியபோதும் தேவசித்தம் செய்யாமல் பாலாக் அரசனின் பொருள்களுக்கு மேல் ஆசை வைத்ததால் பரிசுத்தவான் போல மரணம் ஏற்படவில்லை. பரிசுத்தவானாக மாற அடிமையாக ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும்.


ஆபிரகாம் தேவ சித்தம் செய்தார். மகனை பலியிட கீழ்ப்படிந்தார். கூடாரவாசியாக இருந்தார். சோதோமின் இரட்சிப்புக்காக விசுவாசத்தில் திட நம்பிக்கையுடன் திறப்பின் வாசலில் நின்றார். பொருளாசையில்லாதவராக சோதோமை விட்டு வெளியே வாழ்ந்தார். நீதிமானுக்காகவும் திறப்பில் நிற்பவன் பரிசுத்தவான்தான். கனிகள் நிறைந்தவன் பரிசுத்தவான். தேவன் விரும்புகிறதையே செய்பவனே பரிசுத்தவான்.
1யோவான் 2:6ன் படி “…அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்” யாக்.1:27ல் கூறப்பட்டபடி, உலகத்தால் கறைபடாமல் வாழ வேண்டும்.

5. தேவ சித்தம் செய்பவர்களாக நிலைநிறுத்தப்பட வேண்டும்
யோவான் 4:34ல் “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” என்று இயேசு சொன்னார். சுயம் மரித்த வாழ்க்கை தேவை. சுயத்துக்கு மரிக்காவிட்டால் பரிசுத்த வாழ்வு நடத்த முடியாது. கொலோ.1:9,10 “…அவருடைய (தேவனுடைய) சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்…” வேண்டும்

6. சாட்சிகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும்
அப்.1:8ல் “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து …. எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு நிறைந்து, நடத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஆவியின் சத்தம் கேட்டு, தேவ சித்தத்தை நிறைவேற்றி சாட்சியாக வாழ வேண்டும்.


அப்.4:33 உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாக ஜீவிக்க வேண்டும். சகல அதிகாரமும் பெற்ற சர்வ வல்லவருக்கே நாம் சாட்சிகளாக இருக்கிறோம்.
அப்.10:43 வசனத்தில், பாவத்தை மன்னிக்கிறவர் இயேசு என்பதற்கு சாட்சிகள் இயேசுவின் வல்லமைக்கும், மகிமைக்கும் மட்டுமல்ல பாடுகளுக்கும்தான். பாடு இல்லாமல் மகிமை இல்லை. கல்வாரி சிலுவையண்டை சிலரே நின்றனர், பாடுகளுடன் ஐக்கியப்பட அநேகரில்லை. அற்புத அடையாளங்கள், சுகமான வாழ்க்கைக்காக பின்பற்றுபவர்கள் அநேகர் உள்ளனர், தங்களுக்கு வரும் பாடுகளிலும் தேவனுடனும் ஐக்கியமாக சாட்சியாக நிலைத்து நிற்பவர்கள் வெகு சிலர் தான்.

7. தூண்களாக நிலைநிறுத்துகிறார்
நீதி.9:1 “ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து” என்ற வார்த்தையின்படி 7 தூண்கள் பூரணமானது, திட அஸ்திபாரமுள்ளது. கன்மலையாகிய இயேசுவில் கட்டப்பட வேண்டும். விசுவாசிகள் சபையில் தூண்களாக மாறி பொறுப்பை ஏற்க வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியுடனும் சகோதரர்களுடனும் ஐக்கியம் கொண்டு சபையின் தூணாக பொறுப்பை ஏற்க தேவன் விரும்புகிறார். எரே.1:18 “…தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்” என்ற வார்த்தையின்படியும், கலா.2:9 தூண்களாக ஏற்படுத்தப்பட்ட கேபாவும் யோவானை போல விசுவாசிகளும் தேவன் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுத் தூணாக விளங்க வேண்டும். வெளி.3:12 வசனத்தின்படி, “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்…” உலகம், மாமிசம், பிசாசை ஜெயிக்கிறவர்களே அவரது ஆலயத்தில் தூணாக மாறமுடியும்.


இதை வாசிக்கும் அன்பு நண்பரே! தேவன் உங்களை பலப்படுத்தி தமது ஆலயத்தில் தூண்களாக நிலைநிறுத்துவாராக! தேவன்பேரில் உள்ள விசுவாசத்திலும், அன்பிலும், தேவனுடைய வார்த்தையை கைக்கொள்ளுவதிலும், கீழ்ப்படிவதிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாக இருங்கள். உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பி, பரிசுத்தமுள்ளவர்களாக சகல மாயையும் வெறுத்து தேவ கிருபையுடன் வாழுங்கள். தேவ சித்தம் செய்கிறவர்களாகவும், சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மாறினால் தேவன் உங்களை தூணாக நிலைநிறுத்துவார்! ஆமென்.





Author

You May Also Like…

Share This